புத்தகங்கள் தான் தனக்கான வாசகனை தீர்மானிக்கின்றன என்ற கூற்றில் எனக்கு அதீத நம்பிக்கை உண்டு. Youtubeல் பவா செல்லதுரை அவர்கள் இந்த கதை சொல்லிய காணொளியை பார்த்து புத்தகத்தை படித்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே உறங்கினேன். மறுநாள் காலை நூலகத்திற்கு சென்ற போது தவழ்ந்து இப்புத்தகம் என்கைகளில் விழுந்தது. நூறு நாற்காலிகள் ஜெயமோகன் அவர்களின் அறம் என்கிற உண்மை மனிதர்களை பற்றிய சிறுகதை தொகுதியில் உள்ள ஒரு கதை. நாயாடிக் குறவர்களில் ஒரு இளைஞன் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று திருவனந்தபுரத்தில் பணியமர்த்தப் படுகிறான். தான் வளர்ந்த வாழ்வியல் கட்டமைப்பிற்கு முற்றிலும் மாறான அதிகார வர்கத்தை அடைந்த அந்த இளைஞனின் வாழ்க்கை விவரிக்கும் கதை, நூறு நாற்காலிகள். என்னளவில் புத்தகம் என்பது இதுவரை நான் காணாத ஒரு வாழ்க்கையை வாழ வைக்க வேண்டும். அவ்வகையில் இப்புத்தகம் தலைசிறந்த ஒரு வாசிப்பனுபவத்தை கொடுத்தது. படித்து முடித்து இரண்டு மூன்று நாட்கள் இக்கதையின் பாதிப்பில் இருந்து மீளவியலாது உலுக்கி போட்டது. அதிகாரத்தின் அரியணையில் அமர்ந்த தர்மனை சாதிய ஒடுக்குமுறையின் தீக் கங்குகள் அவ்வப்போது தீண்டி...