Skip to main content

நூறு நாற்காலிகள் - வாசிப்பனுபவம்

 



புத்தகங்கள் தான் தனக்கான வாசகனை தீர்மானிக்கின்றன என்ற கூற்றில் எனக்கு அதீத நம்பிக்கை உண்டு. Youtubeல் பவா செல்லதுரை அவர்கள் இந்த கதை சொல்லிய காணொளியை பார்த்து புத்தகத்தை படித்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே உறங்கினேன். மறுநாள் காலை நூலகத்திற்கு சென்ற போது தவழ்ந்து இப்புத்தகம் என்கைகளில் விழுந்தது.

நூறு நாற்காலிகள் ஜெயமோகன் அவர்களின் அறம் என்கிற உண்மை மனிதர்களை பற்றிய சிறுகதை தொகுதியில் உள்ள ஒரு கதை. நாயாடிக் குறவர்களில் ஒரு இளைஞன் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று திருவனந்தபுரத்தில் பணியமர்த்தப் படுகிறான். தான் வளர்ந்த வாழ்வியல் கட்டமைப்பிற்கு முற்றிலும் மாறான அதிகார வர்கத்தை அடைந்த அந்த இளைஞனின் வாழ்க்கை விவரிக்கும் கதை, நூறு நாற்காலிகள்.

என்னளவில் புத்தகம் என்பது இதுவரை நான் காணாத ஒரு வாழ்க்கையை வாழ வைக்க வேண்டும். அவ்வகையில் இப்புத்தகம் தலைசிறந்த ஒரு வாசிப்பனுபவத்தை கொடுத்தது. படித்து முடித்து இரண்டு மூன்று நாட்கள் இக்கதையின் பாதிப்பில் இருந்து மீளவியலாது உலுக்கி போட்டது.

அதிகாரத்தின் அரியணையில் அமர்ந்த தர்மனை சாதிய ஒடுக்குமுறையின் தீக் கங்குகள் அவ்வப்போது தீண்டிப் பார்க்கின்றன. ஒவ்வொரு முறை தர்மனின் பின்னங் கண்கள் ஏளனத்தை எதிர்கொள்ளும்போதும் ஓடிச் சென்று அணைத்துக் கொள்ள வேண்டும்போல் உணர்வு வாசகனுக்கு பீறிடும். 

நாயாடிகளை குறித்து நாயாடிகளுக்கே தெரியாது. ஒரு சமூகத்தின் மீதான ஒட்டுமொத்த வன்மத்தின் பிரதிநிதியாக பாலனின் மனைவியின் கதா பாத்திரம் புனையப் பட்டுள்ளது. சாமானியன் முகம் சுளிக்கும் வரிகள் அனேகம் கதை முழுக்க வருகிறதெனினும் அவை அத்தனையும் நாயடிகளின் இந்த சமூகம் அவர்களுக்கு அளித்த வாழ்க்கை முறையின் ஒரு சிறு பகுதியே. 

பாலன் ப்ரஜானந்தரின் ஆஸ்ரமத்திற்கு செல்லும் வழியில் சு ரா வின் வீட்டில் உள்ள இளம் எழுத்தாளன் யார் என்பதை வாசகன் படித்த மட்டில் உணர்ந்துவிடக்கூடும் (!).

வாசிப்பு என்ன செய்யும் என்ற கேள்விக்கான பதிலாக இந்த நூல் அமைய கூடும். இருபத்தியோராம் நூற்றாண்டிலும் (இருபதாம் நூற்றாண்டின் பின்னணியில் கதை நடைபெறுகிறது) வளர்ந்துவிட்ட , நாகரீகம் மிக்க சமூகமாக தன்னை எண்ணிக் கொள்ளும் சமூகம் உண்மையில் வளர்ந்துவிட்டதா தன்னை பார்த்துக்கொள்ள ஒரு நிலை கண்ணாடியாக நீடித்திருக்கும்.


Comments

Post a Comment

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

தில்லை பெருங்கோயில் வரலாறு - நூல் குறிப்பு

          தில்லை பெருங்கோயில் வரலாறு - வெள்ளைவாரனர் எழுதிய தில்லை ஆடல்வல்லான் கோயில் குறித்த ஆய்வு நூல். 1987ல் நடைபெற்ற தில்லை கோயிலின் குடமுழுக்கை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல். சிற்றம்பலம், பொற்கூரை             சென்ற ஜனவரியில் ஆலயக்கலை நண்பர்களுடன் சென்ற தில்லை பயணத்தின்போது ஆசிரியர் ஜெயக்குமார் தில்லை பெருங்கோயிலை குறித்து அறிவதற்கு பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று தில்லை பெருங்கோயில் வரலாறு. இந்நூலில் தில்லையின் தொன்மம், பண்ணிசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, இசை, நாட்டியம் என்று பல கோணங்களில் தில்லையில் வரலாற்றை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார் வெள்ளைவாரனர் அவர்கள்.           தில்லை கோயில் உலகபுருடனின் இதயக்கமலமாக கருதப்படுவது. சைவத்தில் கோயில் என்ற சிறப்பு பெயர் தில்லையை குறிப்பது. திருமுறைகள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது, சிவபெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவது, சைவ சித்தாந்தத்தின் படி ஈசன் ஐந்தொழில் நிகழ்த்துவது, ஆடல்கலைகள் செழித்து வளர்ந்தது என்று பல கோணங்களிலும் தில்லை மிகுந்த முக்கியத்துவம்...