அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு.
மழைக்குப்பின் பூதநாதர் கோயில் |
சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.
நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.
16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது.
17 காலை பாதாமியில் இறங்கியவுடன் சென்ற நூற்றாண்டு கிராம பகுதிக்கு சென்ற உணர்வு வந்தது. "செவ்வானம் பன்னீர் தூவி" எங்களை வரவேற்றது. மென் தூறலில் புலரியில் இனியதொரு ஆட்டோ பயணம். அறைக்கு சென்று உடைமாற்றி 9 மணிக்கு முதல் நாள் பயணம் தொடங்கியது. முன்காலையில் நான்கு குடைவரைகள் பார்ப்பதாக திட்டம்.
முதல் குடைவரை, வீணாதர ரிஷபாந்திகர் |
முதல் குடைவரை சிவனுடையது. பொ.யு 550 ஆம் ஆண்டில் குடையப்பட்ட குடைவரை. பாதாமியின் அடையாளங்களில் ஒன்றான சதுர தாண்டவ சிவனின் சிலையை பார்க்க முடியாதது வருத்தமே. கல்லில் சிறு விரிசல் தொடங்கியிருப்பதால் மராமத்து பணிகளுக்காக மூடி வைத்திருந்தனர். குடைவரைக்குள் நுழைந்து மிகச்சிறந்த ஹரிஹரர், ரிஷபாந்திக வீணாதரர், மகிஷாசுர மர்தினி, மயில் வாகன கார்த்திகேயர், லலிதாசன விநாயகர் ஆகிய சிற்பங்களை கண்டோம். விதானத்தில் முப்பரிமாண நாகராஜர், மிதுன இணைகள் ஆகிய சிற்பங்கள், சதுர வடிவ ருசக தூண்களும், ஸ்ரீகார ஆரம்பங்களும் இருந்தன.
இந்த பயணம் முழுக்கவே மகிஷாசுரமர்தினியும், பிரிங்கி மகரிஷியும் மிகுந்த முக்கியத்துவத்துடன் அனேக சிற்பங்களில் உறைந்திருந்தனர். மற்றும் விதானத்திலிருந்த புடைப்பு சிற்பங்கள், அணிவாயில்களின் சாகைகள், ஜாலகங்கள் மிகுந்த வேலைப்பாடுடன் அமைந்திருந்தன. இந்த பகுதிக்கே உரிய sandstone சிற்பங்களுக்கு ஏற்றதாக இருப்பதாக நண்பர்கள் கூறினார்.
இரண்டாம் குடைவரை பூவராகர் |
இரண்டாம் குடைவரை ஆழி வண்ணனுக்கானது. மூன்றாவது குடைவரையின் சிறிய வடிவமாக இரண்டு துவார பாலகர்கள், திரிவிக்ரமர்(உலகளந்தோன்), பூவராகர், மத்ஸ்ய சக்கரம், நந்தியாவர்தம், கின்னர, அப்சரஸ்கள் மற்றும் பாகவத சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.
மூன்றாம் குடைவரை பரவாஸுதேவர் |
மூன்றாம் குடைவரை தென்னிந்தியாவின் முதல் குடைவரையாக கருதப்படுகிறது. பொயு 578ல் மங்களேசன் காலத்தில் குடையப்பட்ட குடைவரை, ஒரு கட்டப்பட்ட கோயில் அளவிற்கு விஸ்தாரமும் சிற்ப தொகுதிகளின் களஞ்சியமாயும் திகழ்வது. வாயிலின் விதானத்தில் உள்ள கருடர் சிலை அத்தனை அபூர்வமானது. திருவரங்கத்தில் விஸ்வரூபம் கட்டி நிற்கும் சென்னிற கருடனை நினைத்துக்கொண்டேன். ஒவ்வொரு தூணிலும் சிற்பத்தொகை இருந்தது. Michell புத்தகத்தின் அட்டை படத்தில் உள்ள பரவாசுதேவ சிற்பமும், அவர் அந்தரீயமும், அணிகளும், அவரடியில் பவ்யமாக அமர்ந்திருக்கும் கருடனும், ஆதிசேஷனின் வரிகளும், வாத்தியமிசைக்கும் பூத வரியும், பார்க்க பார்க்க சலிக்காதவை.
மூன்றாம் குடைவரை, வாமன அவதாரமும், மஹாபலியும் உலகலந்தோனும் |
முழு பூமாதேவி சிலையை ஏந்தி நிற்கும் பூவராகர், நரசிம்மர், ஹரிஹரர் மற்றும் திரிவிக்ரமர் சிற்பத்தொகை கண்கொள்ளா சிற்பங்கள். ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன் இதே போன்றதொரு முழுநிலவு நாளில் இந்த குடைவரை குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற இனிய தற்செயல்கள் பயணத்தை இன்னும் அழகாக்குபவை.
நான்காம் குடைவரை சிற்பத்தொகை |
நான்காவது குடைவரை ஜைன தீர்த்தங்கரர்களுக்கானது. பார்ஸ்வநாதர், மஹாவீரர் மற்றும் கோமதீஸ்வரர் சிற்பங்களை பார்த்தோம். அத்தனை சிறிய இடத்திற்குள் சிற்பத்தொகைகள் பரவசமூட்டும் அனுபவமாக அமைந்தது. சாகைகள் இந்த நான்கு குடைவறைகளிலேயே தொடங்கிவிட்டன.
மதிய உணவிற்கு பின் பூதநாதர் கோயிலுக்கு சென்றிருந்தோம். நான்கு நாள் பயணத்தில் முத்தாய்ப்பான சில மணி நேரங்கள் என்பது இங்குதான். கோயிலுக்குள் சென்று நாங்கள் வணங்கி வரும் வரை மழை இல்லை, முகில் குவைகளில் இருள் பொதிந்திருந்தது. கோயிலுக்கு பின் உள்ள ஒரு குடைவரையில் உள்ள தசாவதாரம் காட்டும் அனந்த சயனரை பார்த்துவிட்டு வரும்போது மழை தொடங்கிவிட்டது. அனைவரும் பூதநாதர் கோயிலுக்குள் ஒடுங்கிக்கொண்டோம். மழை விட்டபாடில்லை. எங்கள் வேண்டுகோளுக்கு செவி மடுத்து JK அண்ணா பாடிய சின்ன சின்ன மழை துளிகள் பாடலில் மழையில் நின்ற பின் கேட்டதும், கோயிலின் பின்னணியிலுள்ள பாறைகளில் நீர் தேங்கி அப்போதுதான் உருவான அருவி எல்லாம் என்றும் நீடித்திருக்கும் நினைவுகள்.
பின்னர் மலை ஏறி சென்று Upper, Lower Shivalaya, அங்கிருந்த நெற்களஞ்சியம் ஆகியவற்றை கண்டு வந்தோம். மலை இறங்கியவுடன் அருங்காட்சியகத்திற்கு அருகில் உள்ள கல்வெட்டை கண்டோம். பொயு 642ம் ஆண்டு, முதலாம் நரசிம்மவர்மன் படைகொண்டு இரண்டாம் புலகேசியை(புலிகேசி அல்ல புலகேசி தான் என்பது ஆசிரியர் வாக்கு) கொன்று பாதாமி நகர் கொண்டதை விளக்கும் கல்வெட்டு. பல்லவ கிரந்த லிபியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு.
இரவு வரை தூறல் இருந்துகொண்டே இருந்தது. இரவு விடுதிக்கு திரும்ப பிந்திவிட்டதால் இரவு உரையாடல் இல்லை.
இரண்டாம் நாள் காலை 9 மணிக்கு ஐஹொளே புறப்பட்டோம். செல்லும் வழியெங்கும் உள்ள பல சிறிய கோயில்களை JK சுட்டியபடியே வந்தார். பல கோயில்கள் மனிதன் மிருகம் என்ற பாகுபாடு இல்லாமல் கழிவுகளால் சூழப்பட்டிருந்தன.
ஐஹொளே அருங்காட்சியகம் அருகில் உள்ள சதுர தாண்டவர், அருகில் ப்ரம்மா, விஷ்ணு |
முதலில் நாங்கள் பார்ததது துர்கை கோயில். எங்கள் ஊர்தி கோயிலை நெருங்கும் போதே கஜபிருஷ்ட விமானம் கொண்ட கோயிலை அடையாளம் காண முடிந்தது. எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலில் சூரியனுக்காக கட்டப்பட்டு பின்னர் துர்கை கோயிலாக மாற்றம் கொண்டதாக கருதப்படுகிறது. முதலில் ஷட்வர்கம், த்வாரப்ராதோளி ஆகியவற்றை விளக்கினார். ஹிரண்ய வதம் புரியும் நரசிம்மர் வரவேற்று உள்ளே அனுப்பினார். துர்கை கோயிலின் கோஷ்ட சிற்பங்கள் - ரிஷபாந்திகர், நரசிம்மர், நின்ற ரூபத்தில் கருடனுடன் விஷ்ணு, மகிஷாசுரமர்த்தினி, ஹரிஹரர் போன்றவற்றை ஒவ்வொரு குழுவாக நின்று ரசித்துக்கொண்டிருந்தோம்.
விருபாக்ஷர் முக மண்டப விதானத்தின் சூரியன் |
பின்னர் 8ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் கட்டப்பட்ட lad khan கோயில், சூர்ய கோயில் ஆகியவற்றை கண்டோம், சூர்யநாராயணர் கோயில் கருவறையிலுள்ள பிற்காலத்திய சிலை கலையழகு மிக்கது. இங்குள்ள அத்தனை கோயில்களுக்கும் பொதுவான சிறப்பம்சம் என்பது பஞ்ச சாகை அல்லது அஷ்ட சாகை, லலாடத்தில் நாகர்களை பிடித்தபடி பல்வேறு ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கருடர்.
பின்னர் நாகரபாணி விமானம் கொண்ட சக்ராகுடி கோயில், கௌடர்குடி கோயில். கௌடர்குடி கோயிலில் அமர்ந்து சிறு உரையாடல், எப்போதும் போல் இசை, இலக்கியம், பாடல் என்று நீண்டது.
தொடர்ந்து ராவணப்பாடி குடைவரை. குகைக்குள் நுழைந்தவுடன் இடப்பக்கம் பார்த்தால் His Excellency நம்மவர். Michell புத்தகத்தில் பக்கம் 95,96ல் உள்ள 10 கரங்களில் 8 தொழிற்கைகளும், இரண்டு எழிற்கைகளும் கொண்ட சதுர தாண்டவமாடும் ஈசனின் சிலையழகு சொல்லில் அடங்காதது. மூன்று நாகங்களை எந்தை ஈசன் கையாளும் விதமும், துகிலில் இருக்கும் நுண்ணிய வேலைப்பாடுகளும் பார்க்க பார்க்க சலிக்காதவை, இன்னும் இருவிநாடி பொறுத்தால் எழுந்து வெளி வந்துவிடுவார் போல அத்தனை மாட்சிமையுடன் தாண்டவம் ஆடினார் ஆடல் வல்லான். தாண்டவமாடுகையிலும், வலது முதல் கையில் சின் முத்திரை காட்டினார்.
ராவணப்பாடி மகிஷாசுரமர்த்தினி |
அண்ணலுக்கு மூலைவிட்டமாக மகிஷாசுரமர்தினியின் சிற்பம், சூலம் மகிஷனின் உடலை கிழித்து மறுபுறம் வெளிவந்துள்ளது.
பின்னர் எங்கள் பயணம் குண்டி ஆலய தொடருக்கு தொடர்ந்தது. ஹுச்சபையமத் ஆலயத்தின் விதானத்தில் உள்ள ரிஷபாரூடர், அன்னப்பறவை மீது அமர்ந்த பிரம்மா, ஆதிசேஷன் மீதமர்ந்த விஷ்ணு ஆகிய புடைப்பு சிற்பங்களை நெடு நேரம் நின்று ரசித்திருந்தோம், முழு அழகையும் ரசிக்க தரையில் படுத்து பார்க்க வேண்டியிருந்தது.
பின்னர் பாம்சன விமானம் கொண்ட சிவன் கோயிலையும், மதிலை ஒட்டி தவழ்ந்து செல்லும் மலபிரபாவை கண்டோம். இக்கோயில் உள்ள கல் சக்கரம் கொண்ட பெருந்தேர் சிறப்பாக இருந்தது.
அந்தி சாயும் வேளையில் மேகுட்டி மலை ஏறத்தொடங்கினோம். போகும் வழியில் உள்ள புத்த கோயிலை கண்டோம். மெகுட்டி மலை உச்சியில் இருக்கும் ஜைன கோயிலில் அமர்ந்து Swetha அக்கா மொழி பெயர்த்திருந்த ரவிகிர்தியின் கல்வெட்டை வாசித்தோம். அத்தனை கவித்துவம் கொண்ட ஒரு கல்வெட்டு, பயணத்திற்கு முன்னரே மொழிபெயர்ப்பு கட்டுரை குழுவில் பகிரப்பட்டது. மலையிலிருந்து பல்வேறு பெருங்கற்கால பண்பாட்டை சேர்ந்த எச்சங்களை காண முடிந்தது.
இரவு உணவிற்கு பின் JK அண்ணாவின் மற்றும் கவிஞர் சாம்ராஜ் அவர்களின் உரைகள். JK சாளுக்கிய கட்டடக்கலை மற்றும் அவர்களின் பின்புலம் குறித்து உரையாற்றினார். (நான் சிறிய நோட்டுப்புத்தகத்துடன் சென்றமர்ந்த போது எதற்கு என்றார், உரையின் முடிவில் 11 புத்தகங்களை மேற்கோள் காட்டியிருந்தார், அதை குறித்துக்கொண்டேன் !!). அது முடிந்ததும் சாம்ராஜ் அண்ணாவுடன் சிறிய இரவு நடை டீக்கடை ஏதும் இல்லாததால் 12 மணிக்கே அறைக்கு திரும்பவேண்டியிருந்தது :(
மூன்றாம் நாள் காலை பட்டடக்கல். நேற்றும் முந்தைய நாளும் பார்த்ததை விட அதிகமான கோயில்களை கொண்ட ஒற்றை கோயில் தொடர். கடசித்தேஸ்வரர் கோயில், ஜம்புலிங்கா கோயில் (ஆனைக்கா அண்ணலை எண்ணி வேண்டிக்கொண்டேன்), கலகநாதர் கோயில், சந்திரசேகரர் கோயில், சங்கமேஸ்வரர் கோயில் ஆகியவற்றை கண்டோம். சந்தமேஸ்வரர் கோயிலின் கருவறைக்கு அருகில் உள்ள ராஷ்டிரகூடர்களின் கல்வெட்டு காணக்கிடைக்கிறது.
அடுத்ததாக விருபாக்ஷர் கோயில் ஆதியில் லோகமாதேவியின் நினைவாக லோகேஸ்வரம் என்று அழைக்கப்பட்ட விருபாக்ஷர் கோயில், இந்த ஆலய தொடரின் மிக சிறந்த வேலைப்பாடுகள் கொண்ட வளாகம். மலபிரபா நதி மதில் சுவரை தழுவியபடி ஓடிக்கொண்டிருந்தது.
விருபாக்ஷர் கோயில் கோஷ்ட சிற்பம், விஷ்ணு |
விருபாக்ஷர் கோயில், இராவணன் |
முதலில் பசவராஜ்(உள்ளூர் வழிகாட்டி) இந்த கோயிலின் மூன்று சிற்பிகளின் பெயர் கொண்ட கல்வெட்டை படித்து காட்டினார். அதை தொடர்ந்து கம்பீரமாக அமர்ந்திருக்கும் ரிஷபக்கொட்டிலை கண்டோம். ரிஷபமும் மூல லிங்கமும் Green Granite கல்லால் ஆனது என்றார். முழுமையில் தெய்வம் குடியேறும் என்று வெண்முரசில் படித்திருக்கிறேன். இந்த ரிஷபத்தில் அதை உணர முடிந்தது. தொட்டால் எங்கு எழுந்து முட்டிவிடுமோ என்று அச்சமூட்டும் பிரம்மாண்ட சிலை. தக்ஷிண தேச என்ற கல்வெட்டு குறிப்பை படித்து அறிஞர்கள் இது தென்னகத்திலிருந்து வந்த சிற்பிகள் கட்டியது என்று பொருள் கொண்டதாகவும் பின்னர் அது தென் திசையில் உள்ள கோயில் என்று பொருள் கொள்ளப்பட்டதாகவும் ஆசிரியர் கூறினார்.
விருபாக்ஷர் கோயில் மகிஷாசுரமர்த்தினி |
சிறிய இடத்தையும் விட்டுவைக்காமல் கண்ணை நிறைக்கும் சிற்ப தொகுதிகள் கொண்ட கோயில். முக மண்டப விதானத்தில் உள்ள சூரியனின் சிலை மிகுந்த வேலைப்பாடுகள் கொண்டது, அருணன் 7 வெண்புரவிகளை இழுத்து தேரை செலுத்திக்கொண்டிருக்கிறார். அவரை சுற்றி அப்சரஸ்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள் உள்ளனர்.
இந்த நான்கு நாள் பயணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய சிலைகளை கண்டிருப்போம், ஆனால் மிகச்சிறந்த சிலையென்று நான் கருதுவது விருபாக்ஷர் கோயிலில் கோஷ்ட மண்டபத்தில் உள்ள ராவணன் கயிலையை அசைக்கும் சிலை, ராவணனின் 20 கரங்கள், மேலே பூதகணங்கள், அவற்றில் கல் தூக்கும் பூதம், முழா இசைக்கும் பூதம், ரிஷபத்தில் உமா மகேஸ்வரர் (ரிஷபாரூடர்) நந்திதேவர், மான் குரங்கு போன்ற விலங்கினங்கள் என்று மொத்த கைலாயத்தையும் உளியால் வரைந்திருந்தனர்.
கோஷ்டத்தில் ராமாயண சிற்பங்கள், நரசிம்மர், லிங்கோத்பவர், லகுலீசர், சந்தியா தாண்டவத்தில் ரிஷப தண்டம் கொண்ட ஈசன், உமா சந்திரசேகரர், அந்தகாசுர வதம் புரியும் ஈசன், யானை உரித்த தேவர்(கஜசம்ஹாரர்), ஹரிஹரர் போன்ற கோஷ்ட சிற்பங்களை காண முடிந்தது. மகா மண்டபத்தில் உள்ள தூண்கள் அனைத்திலும் மகாபாரத, ராமாயண சிற்ப தொகைகள் காணப்படுகின்றன.
சிறிய வெளிச்ச கீற்றுக்குள் பார்த்த மகிஷாசுரமர்தினியின் சிற்பம் மூன்று பிறவி எடுத்து ரசிக்க வேண்டியது. சூலத்தையும் வாளையும் ஒரே நேரத்தில் குத்தி மகிஷனுக்கு மோட்சமளிக்கும் அன்னை அத்தனை காருண்யத்தை வதனத்தில் கொண்டிருக்கிறாள்.
தொடர்ந்து பாபநாதர் கோயிலை தரிசித்து பழங்களை கொண்டு மதிய உணவை முடித்துக்கொண்டோம். பின்னர் மஹாகுடேஸ்வரா, சங்கமேஸ்வரா கோயில்களை தரிசித்தோம். குளத்துடன் கொண்ட ஆலய வளாகம் எத்தனை முழுமை கொண்டது ?
வரும் வழியில் வண்டியில் ஆரண்யா கேட்டுக்கொண்டதன் பேரில் இளமை என்னும் பூங்காற்று பாடினார். இரவு உரையாடலின் போது நண்பர்கள் அனைவரும் அவரவரின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அமுதா mam சொல்லிய உவமை, கோபுரம் என்பது வேள்வித்தீயின் வடிவம் என்றால், இத்தனை கோபுரங்கள் கொண்ட வளாகத்திற்குள் நுழைவது யாக சாலைக்குள் இருக்கும் உணர்வை கொடுத்தாக கூறினார். செல்வா சார் இன்னும் செய்யவேண்டிய பயணம் நிறைய இருக்கிறது ஆனால் நேரம் குறைவாக இருப்பதாக நெகிழ்வுடன் கூறியது, அனைவரையும் பேசிவிட்டு சிறப்பாக பேசிய ஆய்வாளர் லிங்கா அண்ணா, வழக்கம் போல் சிறப்பான ரசனை உரையாற்றிய கவிஞர் சாம்ராஜ் அண்ணா, இரண்டு முறை வந்து பாபநாதர் கோயில் அருவியை காணமுடியாத ஏக்கம் இந்த முறை தீர்ந்ததாக சொன்ன அரசி அக்கா, புதிய தங்கை விஜி, மகிஷாசுரமர்த்தினி ஓவியம் தடை பட்டதால் வருத்தம் கொண்ட ஓவியர் ஜெயராம், போடியிலிருந்து வந்திருந்த டாக்டர் சுபத்ரா, உதவி இயக்குனர் ஆனந்த், முதல் மாணவர் விஜய் சேகர், பாடகர் ராம்கி, மாரத்தான் பிரதீப். எல்லா கோயில்களுக்கும் உடன் வந்து உதவிய உள்ளூர் ஆலோசகர் பசவராஜ், ஓயாத பேச்சு கொண்ட நண்பர் மஞ்சு, ஒருங்கிணைப்பாளர்கள் லால்குடி தினேஷ், கலைவாணி, அட்சயா மற்றும் பயணத்தை அத்தனை உயிர்ப்புடன் வைத்திருந்த மழலைகள் மஞ்சு, அகல்யா, ஆரண்யா மற்றும் அத்தனை நண்பர்களுக்கும் அன்பும் நன்றியும். சனிக்கிழமை மாலையே நண்பர்கள் கிளம்ப தொடங்கிவிட்டிருந்தனர்.
கவிஞர் சாம்ராஜுடன் |
ஞாயிறு அதிகாலை கிளம்பி malegetti சிவாலயம் சென்று வந்தோம். காவலர் வந்து திறந்துவிடும் வரை காத்திருந்து மலையேறி சென்று வந்தோம். உணவு முடித்து லக்குண்டி புறப்பட்டோம், ஆசிரியர் லக்குண்டியில் 11 கோயில்கள் இருப்பதாக சொல்லியிருந்தார். நாங்கள் ஒரு ஜைன கோயிலையும், சிவன் கோயிலையும் மட்டும் பார்த்துவிட்டு புறப்பட்டோம். ஹொய்சாள கலைப்பணியின் சில அம்சங்கள், ஒன்றோடொன்று தொடர்ந்து இருக்கும் சிற்ப வேலைப்பாடுகளை இங்கேயே காண முடிந்தது. நண்பர் ஆனந்த் இங்கிருப்பவை Soap stone வகையை சேர்ந்தவை என்றார்.
லக்குண்டி ஜைன கோயில் யட்சி |
Malegetti சிவாலய ஈசன் |
பாதாமி திரும்பியபின் மாலை, இரவு கிளம்பும் நண்பர்களுடன் சேர்ந்து மீண்டும் குடைவரைகளையும், அருங்காட்சியகத்தையும் கண்டுவந்தோம். குளக்கரை படித்துறையில் அமர்ந்து சிறிது நேரம் நினைவுகளை கிளறிக்கொண்டிருந்தோம். Yellama கோயில் மற்றும் முதல் குடைவரை சென்று சில குறிப்புக்கள் எடுத்துக்கொண்டு ரயில் நிலையம் திரும்பினோம்.
குளக்கரையிலிருந்து பூதநாதர் கோயில் |
எல்லம்மா கோயில் |
இந்த பயணத்தின் மற்றொரு சிறப்பென்பது JK அண்ணா கைபேசியில் வைத்திருக்கும் மின் நூலகம். நாகசாமி ஐயா அவர்களின் பதிவுகளில் இருந்து நிறைய நூல்களை அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருந்தார். உதாரணமாக சாகைகளை குறித்த நாகசாமி ஐயாவின் குறிப்பு, கருடனின் உடம்பில் உள்ள 8 நாகங்கள், Adam Hardy ன் Kavakshas கட்டுரை போன்றவற்றை அவ்வப்போது பகிர்ந்தது பயனுள்ளதாக அமைந்தது.
லக்குண்டி கோயிலின் கஜசம்ஹாரர் |
லக்குண்டி சிவாலயம் |
வெள்ளிக்கிழமை இரவு உரையாடலின் போது சாம்ராஜ் அண்ணா சொன்ன ஒரு முக்கிய கூற்று "மொத்த இந்தியாவிலும் இப்படி ஒரு இரவில் 40 பேர் ஒன்றாக கூடி இலக்கியம், ஆலயம், கலை என்று பேசுவது நிச்சயம் நிச்சயமாக வேறு எங்கும் நிகழ வாய்ப்பே இல்லை என்றார்."
முன்னர் சென்றிருந்த பயணம் முற்கால சோழர்கள் காலத்தைய கட்டிடக்கலையை காண்பதற்கு, விஜயாலய சோழீஸ்வரம், கோரங்கநாதர் போன்ற கோயில்களுக்கு, தற்போது சாளுக்கிய மன்னர்களின் கட்டிடக்கலை அறிய, அடுத்து பாண்டிய மன்னர் காலத்தைய பயணம் திட்டமிட்டிருக்கிறோம். இத்தகைய பயணம் வரலாற்று அறிவை மட்டுமன்றி ஆளுமையையும் செதுக்குகிறது. வரலாறு மேலும் அறிய அறிய சித்திரம் முழுமை அடைந்தே வருகிறது. தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில்கள், இதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குப்தர் காலத்தைய கட்டுமானங்கள் இவை அனைத்திற்கும் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்து பிரமிடுகள் இவற்றை எல்லாம் எண்ண எண்ண போலி பெருமிதங்கள் அனைத்தும் அகன்று புறவயமான வரலாற்று பார்வை கிடைக்கிறது.
மெய்யாகவே பயணம் முழுதும் வெய்யோனும் இந்திரனும் பேரன்புடன் இருந்தனர், வேண்டியபோது பொழிந்தும் வாடியபோது பொறுத்தும் அருளினர் ✨✨
நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கும் என் வாழ்வில் ஒரு மாற நிழலில் அமர்ந்து இளைப்பாறி குவளை நீர் குடிக்கும் தருணமாக இப்பயணம் அமைந்தது. இது போதும் அடுத்த பயணம் வரை வண்டி ஓடும். வாழ்நாள் முழுக்க கற்றலுக்கு கற்பித்தலுக்குமாக கொண்டிருக்கும் ஆசான் JK எமக்கு அமைந்தது எம் நல்லூழ். நான்கு நாட்களும் நண்பர்கள் ஒரு சொல் கூட வீணான சொல் அல்லாமல் அத்தனை களிப்புடன் கற்றல் அமைந்தது. இயற்கைக்கு நன்றி !!
இத்தனை நல் வாய்ப்பிற்கும், நண்பர் குழுவுக்கும் காரணமாக அமைந்த ஆசான் ஜெயமோகனுக்கும், ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அவர்களுக்கும், கவிஞர் சாம்ராஜ் அவர்களுக்கும், பயணத்தில் கரம் பற்றி, தோள் தட்டி அழைத்து சென்ற நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் அன்பும். 💙
ஆசிரியருடன் |
🤍🩶
ReplyDeleteExcellent
ReplyDeleteஅற்புதமான அனுபவ பகிர்வு நன்றி
ReplyDelete