Skip to main content

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம் 


        1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல்.



கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர் 


        கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.

        நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்கோயில் தான் நந்திபுரம் என்ற முடிவிற்கு வந்துள்ளனர். 


        இந்த புள்ளியிலிருந்து குடவாயில் பாலசுப்ரமணியன் தனது ஆய்வினை தொடங்குகிறார். திருக்கோடிக்கா கல்வெட்டில் “பழையாறை நந்திபுரத்து” இன்னும் தொடரைகொண்டு இது போன்று பல நந்திபுரங்கள் இருந்துள்ளன, இருக்கின்றன என்று முதல் முடிவை முன்வைக்கிறார். உம்பள நாட்டு நந்திபுரம், கிழார் கூற்றத்து ஆயிரத்தளியான நந்திபுரம் என்று மற்ற நந்திபுரம் குறித்த கல்வெட்டுகளையும் பட்டியிலிடுகிறார். 


        நந்திபணி செய்தநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே” என்ற திருமங்கையாழ்வாரின் பாசுரத்தை கொண்டு நாதன் கோயில் தான் நந்திபுரம் அரண்மனை இருந்த இடம் என்பது அறிஞர்கள் கூற்று. ஒரு கலை விமர்சகராக, கட்டிடக்கலை மற்றும் சிற்பவியலில் முனைவர் பட்ட ஆய்வு செய்த பாலசுப்ரமணியன் அவர்களுக்கு இந்த முடிவு உவப்பனதாக இல்லை. அவர் அங்குள்ள திருமாலின் செப்பு திருமேனியின் அமைப்பை கொண்டு  இது பிற்கால பல்லவர் கலையமைப்பில் உள்ளது என்று கணிக்கிறார். இதனை தவிர்த்த கல்வெட்டு இலக்கிய சான்றுகள் ஏதுமில்லாததால் இந்த முடிவு ஏற்கத்தக்கதாக இல்லை. 


        சப்தஸ்தானத்தின் சில கோயில்களில் உள்ள கல்வெட்டுக்கள் நந்திபுர ஆயிரத்தளி என்று குறிப்பிடுவதால் நந்திபுரத்தில் ஆயிரத்தளி இருந்தது என்று இராண்டாவது முடிவை முன்வைக்கிறார். 


        பழையாறையில் உள்ள கோயில்களின் ஆயிரத்தளி இருந்ததற்கான சான்றுகள் இல்லையென்று மூன்றாவது முடிவை எட்டுகிறார்.


        ஆயிரத்தளியில் இருந்த கோயில்களை குறித்த ஆய்வில் நித்த விநோத வளநாட்டு  கிழார் கூற்றத்து ஆயிரத்தளியில் பராந்தாக தேவிச்சரம், வானவன் மாதேவிச்சரம் என இரண்டு கோயில்கள் கிடைக்கின்றன. சோழ அரசனிற்கு பள்ளிப்படை எடுக்கும் வழக்கம் பல கல்வெட்டுக்கள் கொண்டு நிறுவப்படுகிறது. எனவே இந்த இரண்டு கோயில்களும் இரண்டாம் பராந்தகர் என்ற சுந்தர சோழருக்கும் அவரது துணைவியார் வானவன் மாதேவிக்கும் எடுக்கப்பட்ட பள்ளிப்படை கோயில்கள்.


        அடுத்ததாக, இந்த ஆயிரத்தளியில் அரண்மனை இருந்ததற்கான சான்றுகள் தொகுக்கப்படுகின்றன. நந்திபுர முற்றுகையின்போது இரண்டாம் நந்திவர்மன் இங்கு அடைக்கலமிருந்ததை உதயேந்திரம் செப்பேடு, வைகுண்டபெருமாள் கோயில் சிற்பதொகுதிகள் உறுதிப்படுத்துகின்றன. இந்த அரண்மனை பின்னாளில் வந்த சோழ, பாண்டிய அரசுகள் நிலையும் விவரிக்கப்படுகிறது. 


        இரண்டாம் நந்திவர்மனின் புதல்வன் 3ம் தந்திவர்மன் காலத்திலும் நந்திபுர அரண்மனை பயன்பாட்டில் இருந்ததற்கான கல்வெட்டுக்களை தொகுக்கிறார். திருவையாறு ஐயாறப்பர் கோயில் கருவறையில் இந்த மன்னனின் ஒரு கல்வெட்டு உள்ளது (இந்த கல்வெட்டின் மீது renovation என்ற பெயரில் bathroom tiles ஒட்டப்பட்டுள்ளது என்று நாகசாமி ஒரு உரையில் குறிப்பிட்டு வருந்துகிறார்) 


        முதலாம் பராந்தகர் காலத்தில் சோழரின் ஆளுகைக்குள் வந்த ஆயிரத்தளியில் சுந்தர சோழரின் அரண்மனை இருந்ததற்கான சான்றுகளையும், பின்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் திருவானைக்கா கல்வெட்டு ஆயிரத்தளியில் அவன் பட்டமேற்றதை சான்றுகளையும் குறிப்பிடுகிறார். 


        ஆய்வாளர் குறிப்பிட்டுள்ள கல்வெட்டில் உள்ள மற்றுமொரு சுவாரஸ்யமாக தகவல் அரியணையின் பெயர்கள். 

  1. முதலாம் குலோத்துங்கன் காலத்து ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ்வரர் கோயில் கல்வெட்டு ஆயிரத்தளியில் இருந்த அரியணைக்கு சேதிராஜன் என்று அழைக்கப்பட்டதை குறிக்கிறது. 

  2. சிறிய லெய்டன் செப்பேடுகள்(Liden Small Copper Plates) ஆயிரத்தளியான ஆஹவமல்ல குலகாலபுரத்து அரண்மனையில் திருமஞ்சன சாலையில் காளிங்கராயன் இன்னும் கட்டில் இருந்ததை குறிப்பிடுகிறது.


        14ம் நூற்றாண்டில் நடந்த மாலிக் கபூரின் படையெடுப்பில் நந்திபுர நகரம் பேரழிவிற்கு உட்பட்டது. இதனை அமீர்குஸ்ரூ மற்றும் வசாப் போன்ற முகமதிய வரலாற்றாசிரியர்களின் குறிப்புகள் குறிப்பிடுகின்றன. இரண்டாம் நந்திவர்மன் களத்திலிருந்து மாறவர்மன் சுந்தரபாண்டியனின் பட்டமேற்பு வரை செழிப்புடன் இருந்த நகரம் மெல்ல குன்ற துவங்கி அழிந்தது.



கண்டியூர் ராஜகோபுரத்து துவாரபாலகர் 



        அதன்பின் நந்திபுர அரண்மனை அழிந்துபட்டதை தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் உள்ள இரண்டாம் வீரபாண்டியனின் கல்வெட்டு அவனது அரண்மனையை கண்டியூர் கோயில் என்று அழைப்பதன் மூலம் அறிய முடிகிறது. 


        நகரம் இருந்தது இடம் என்று தீர்மானிப்பதற்கு வைக்கும் அடிகள் தனித்துவமானவை. ஒவ்வொரு அடியிலும் கல்வெட்டு சான்றுகள், செப்பேட்டு சான்றுகள், சிற்ப அமைதி, பக்தி இலக்கிய சான்றுகள் என்று தீர்மானமான முடிவை எட்ட கிடைக்கும் அனைத்து சான்றுகளையும் தொகுக்கிறார், தொகுத்த தரவுகளை கள ஆய்வில் உறுதிசெய்கிறார். இந்த ஆய்வு அணுகுமுறை குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் தனித்துவம்.


        1987ல் தனது ஆசிரியர் நாகசாமியுடன் முதன் முதலாக  கண்டியூர் கோயிலுக்கு சென்ற அனுபவத்தை அத்தனை பரவசத்துடன் குறிப்பிட்டுள்ளார். பார்ப்பதற்கு பிரம்மா போன்றே உள்ள வாகீசமூர்த்தம் குறித்து கற்றுகொண்டதை ஒரு குழந்தையை போல பதிவுசெய்துள்ளார். அதன் பின் கள ஆய்வில் கண்டியூர் வட்டாரத்தில் உள்ள அத்தனை வாகீஸ்வரர் வாகீஸ்வரி மூர்த்தங்களையும் ஆவணப் படுத்துகிறார் (Boston மற்றும் மும்பையில் உள்ள தனி நபர் அருங்காட்சியகத்தில் உள்ள சிற்பங்கள் உட்பட).  


        கண்டியூர் கோயிலின் அதிஷ்டானத்தில் உள்ள குறுஞ்சிற்பத்தை கூட குறிப்பிடுவதால் இந்த ஆய்விற்கு ஆய்வாளர் அளித்துள்ள உழைப்பு வியக்கத்தக்கது.



கண்டியூர் கருவறை அதிஷ்டானத்தில் உள்ள வாகீசர் குறுஞ்சிற்பம்


        கள ஆய்வில் நந்திபுரம் என்னும் அத்யாயத்தில் ஒவ்வொரு பத்தியும் மொட்டவிழ்வது போல அரண்மனையின் எச்சங்களும், ஆயிரத்தளியின்  எச்சமாக நூற்றுக்கணக்கான லிங்கங்களும் கிடைக்கப் பெறுகின்றன. இவற்றை கொண்டு கண்டியூரின் ஒருபகுதி இரட்டைக்கோயில், நாலுசாமிமேடு ஆவிக்கரை, வீரசிங்கம்பேட்டை ஒன்றிணைந்த பகுதியே நந்திபுர நகரம் என்ற முடிவை எட்டுகிறார். 

 

        இரண்டாவது பகுதியில் கண்டியூர் கோயிலை பற்றிய கட்டுரை ஒரு துப்பறியும் நாவல் அளவிற்கு சுவாரஸ்யமானது. ஒவ்வொரு புள்ளியாக இணைத்து ஒரு சித்திரம் வரைவது போன்றது 


        கண்டியூர் வீரட்டானத்தின் கோபுரத்தில் இருபுறமும் உள்ள துவாரபாலகர், தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா, பூத கணம் இல்லாமல் விளங்கும் பிக்ஷாடனர், முருகர் ஆகிய சிற்பங்கள் அவற்றிற்குரிய கோஷ்ட அமைப்பில் இல்லாமல் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. இது முதல் அவதானிப்பு.


        மேலும் கோபுரத்தில் உள்ள திம்மரசனு என்ற விஜயநகர காலத்து பொறிப்பை கொண்டு இந்த கோபுரம் விஜயநகர காலத்தில் எழுபப்பட்டிருக்கலாம் அல்லது மீண்டும் கட்டப்பட்டிருக்காலம் என்ற முடிவை எட்டுகிறார். 


        கண்டியூர் வீரட்டானத்தின் அம்மன் கோயிலான மங்களாம்பிகை கோயிலில் உள்ள ராஜேந்திரன் கல்வெட்டுகள் 

  1. 1018ம் ஆட்சியாண்டு கல்வெட்டு வானவன் மாதேவீச்சாரம் என்ற பள்ளிப்படையில் ரகுளீச பண்டிதர் தலைமையில் இருந்ததை குறிப்பிடுகிறது.

  2. 1038ம் ஆட்சியாண்டு கல்வெட்டு பராந்தக தேவீச்சரம் என்ற பள்ளிப்படை பிரம்மசோம பண்டிதரின் தலைமையில் இருந்ததை குறிப்பிடுகிறது.


        இந்த இரண்டு பள்ளிப்படை கோயிலின் கல்வெட்டுகளையும், இதே வட்டாரத்தில் கிடைத்த இரண்டு பெரிய சிவலிங்கங்களையும் கொண்டு பள்ளிப்படை இருந்ததை உறுதி செய்கிறார்.  


மங்களாம்பிகை கோஷ்டத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி 


        மங்களாம்பிகை கோயில் சிற்பங்கள் குறித்து இந்த அவதானிப்புகளை முன்வைக்கிறார்.


  1. சிவன் கோயில்களில் விளங்கும் தனித்த அம்மன் கோயில்களின் கருவறை கோஷ்டங்களில் அம்மன் திருவுருவங்கள் மட்டுமே அமைப்பது மரபு. இங்கு மகிஷாசுரமர்த்தினி மற்றும் நர்த்தன விநாயகர் சிற்பங்கள் உள்ளன.

  2. தெற்கு நோக்கி அமைந்துள்ள இந்த சந்நிதியில் உள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இது வடக்கு நோக்கி அமைந்திருக்கவேண்டும் - பிரம்ம சிரகண்டீஸ்வரர் கருவறை கோஷ்டத்தை போல. 

  3. ஆடல்வல்லான் மற்றும் தக்ஷிணாமூர்த்தி கோஷ்டங்கள் அமைந்திருப்பதால்  இவை ராஜேந்திரன் காலத்தில் அம்மன் கோயிலாக அமைந்திருக்கவில்லை.

  4. தக்ஷிணமூர்த்தியின் கோஷ்டமும் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இதுவும் மரபன்று


        பள்ளிப்படை குறித்த கல்வெட்டுகளையும் ராஜகோபுரம் மற்றும் அம்மன் கோயில் சிற்பங்கள் என்ற இரண்டு சரடையும் இணைத்து, இவை ராஜேந்திரன் காலத்தில் எழுப்பப்பட்ட பள்ளிப்படை கோயிலில் கட்டுமானத்தில் இருந்த கற்கள் மற்றும் சிற்பங்கள் என்ற முடிவை எட்டுகிறார். கணித சமன்பாட்டின் ஒவ்வொரு தரவாக தொகுத்து இறுதியில் எனவே என்று முடிப்பதை போல முடித்திருக்கிறார். 


        ஒரு கலை வரலாற்று மாணவனாக இந்த ஆய்வு முடிவுக்கு வந்து சேரும் பயணம் அத்தனை பரவசமளிக்கக் கூடியது. இன்று தமிழகத்தில் காஞ்சி கைலாசநாதர் கோயில் போன்ற வெகு சில கோயில்கள் தவிர எல்லா கோயில்களும் ஏராளமான மாற்றத்திற்கு உள்ளாகின்றன. குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் செய்திருக்கும் இந்த ஆய்வு முறையை, இந்த templateஐ கொண்டு இன்னும் பல கோயில்களை பார்க்க முடியும், இன்னும் நுணுகி அணுகமுடியும். அந்த வகையில் அவரது தொடக்க கால ஆய்வுகளுள் ஒன்றான இந்த கட்டுரை மிக முக்கியமானது.




- மனோ

 


Comments

Popular posts from this blog

செய்நன்றி ❤️✨

எனது கல்லூரி துறைத்தலைவர் இப்போது Pollachi Institute of Engineering and Technology கல்வி ஆலோசகராக பணியாற்றுகிறார். அவர் அழைப்பின் பேரில் Pollachi Institute of Engineering and Technology என்ற கல்லூரியில் சென்ற திங்கள் அன்று முதலாம் ஆண்டு, மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களிடம் உரையாற்றினேன். இதை சொன்னபோது சில நண்பர்கள் ஆர்வத்துடன் என்ன பேசப்போகிறேன் என்று கேட்டனர், 2 நாட்கள் உழைத்து தயார் செய்த உரையென்பதாலும் பொதுவான உரையென்பதாலும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் ஆற்றிய உரையை இங்கு எழுதுகிறேன். (இது உரையின் எழுத்து வடிவம், சென்ற வாரம் கேட்டுக்கொண்டார்கள் என்பதை, “போன வாரம் கேட்டாங்க” என்று வாசிக்கவும்)  Dear Boys and girls சென்ற வாரம் mam அழைத்து முதலாம் ஆண்டு மாணவர்களிடம் பேசவேண்டும் என்று சொன்னபோது நான் கேட்ட முதல் கேள்வி ஆங்கிலத்திலா தமிழிலா என்று, பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள் அதனால் தமிழ் ஆங்கிலம் கலந்து பேசும்படி சொன்னார். முழுதும் தமிழில் பேசினாலும் செயற்கையாக இருக்கும், முழுதும் ஆங்கிலத்தில் பேசினாலும் பின் தொடர்வதில் சிக்கல் இருக்கும். மறுநாள் தான் ஒப்புக்கொண்ட...

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...