![]() |
தில்லை கிழக்கு கோபுரம் |
ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன் ஜனவரி 17-19, 2025 ஆகிய தேதிகளில் சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு சென்றுவந்த பயணக்கட்டுரை.
தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல் திருச்சிற்றம்பலம். சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.
மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி தாண்டும்போது தோணியப்பர் கோயில் என்று ஒவ்வொரு நிலையமாக இறங்கி தல யாத்திரை செய்தல் வாழ்நாள் முழுக்க செய்யலாம்.
வழியில் ஒரு கடையில் உணவுண்டு தெற்கு கோபுரத்தருகில் ஒரு கடையில் மூட்டை முடிச்சுகளை வைத்துவிட்டு உள்ள சென்றேன். கோபுரத்தின் இடதுபுறம் திரு ஞானசம்பந்தர் நுழைந்த வாயில் என்ற வாசகத்தோடு தில்லை மூவாயிரவரை குறிக்க மூன்று அந்தணர்கள் சம்பந்தருக்கு பூர்ண கும்பம் கட்டும்படியான சுதை சிற்பம் உள்ளது. தில்லையில் நான்கு கோபுரங்களும் 7 நிலை கோபுரங்கள். ஒவ்வொன்றும் தம்மளவில் பெரும், பெரும் சிற்பத்தொகைகள். தெற்கு கோபுரத்தின் விதானத்தில் உள்ள கரண சிற்பங்கள், கோஷ்ட சிற்பங்களை பார்க்கவே அரைமணிநேரம் பிடித்தது. விதானத்தில் இணைக்கயல் சிற்பம் பொறிக்கப்பட்டிருந்தது.
தில்லையின் நான்கு ராஜ கோபுரங்களுக்கும் பல மன்னர்கள் பலவேறு காலகட்டத்தில் திருப்பணி செய்திருக்கிறார்கள். ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் தனது கோபுர கலை மரபு என்ற நூலில் அவற்றை பட்டியலிட்டிருக்கிறார்.
![]() |
தில்லை கிழக்கு கோபுரம் |
வலமாக சுற்றி மேற்கு வாயில் வழியாக உள்ளேசென்று முக்குறுணி விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகளை கடந்து தாயுமானவர் சன்னதியை அடைந்தேன். இவர் எங்க ஊர்க்காரர். மலை மீது வீடு. பின்னர் சமயக்குறவர்கள், சந்தான குறவர்கள், திருமுறை கண்ட விநாயகர் சன்னதிகளை தரிசித்து திருமூலட்டானர் சன்னதியை கடந்து சிற்றம்பலத்தை அடைந்தேன். ஆடல்வல்லான் மதிக்குழவி மட்டும் ஒளிவிட்டிருந்தது. உருவத்தை முழுதும் உணர்வதற்கே சில நொடிகள் பிடித்தது. காலை நேரம் என்பதால் கூட்டம் சற்று குறைவு. ஹர ஹர மஹாதேவ் என்ற கோஷம் தவிர வேறு எந்த சத்தமும் இல்லை. silence please keep silent என்று தீட்சிதர்கள் கத்திக்கொண்டிருந்தனர். நிருத்த சபையில் சரபேஸ்வரர் ஊர்த்துவ தாண்டவர் சன்னதிகள். அதை தொடர்ந்து முருகர் சன்னதி தரிசித்து வலம் வந்தேன். சிவகாம சுந்தரி அம்மன் சன்னதி அடைந்து பின்னர் சிவகங்கை குளத்தில் அமர்ந்திருந்தேன்.
12 மணி அடிக்கவே கலைவாணி குழுவில் சரியாக 12.40க்கு எல்லோரும் ரயில் நிலையத்தில் கூடவேண்டும் என்று தகவல் அனுப்பியிருந்தார். இரண்டு பேருந்துகள் பிடித்து ரயில் நிலையத்தை அடைந்தேன்.
ரயில் நிலையத்தில் நண்பர் விஜய் சேகர் இருந்தார். ஆசிரியர் ஜெயக்குமார், கவிஞர் சாம்ராஜ் நண்பர்கள் ஆரண்யா, கலைவாணி, பிரதீப், சுந்தரபாண்டியன், இனியன், அமுதன் மற்றும் சென்னை நண்பர்கள் அனைவரும் வந்திறங்கினர். சூழ இத்தனை பேர் இருக்க "ச்ச என்னோட ஊற்ற கூட்டாளிகள் யாரும் வரவில்லை" என்று கவிஞர் ரயிலிலேயே தொடங்கியிருக்கிறார்.
லக்ஷ்மி விலாஸ் சென்று மதிய உணவுண்டு சிறிய நடை சென்றோம். இரவு கவிஞரின் உரை இங்கு கேட்கலாம் என்று சிறிய அரங்கம் ஒன்றை பார்த்து வந்தோம். மாலை 5 மணிக்கு காப்பி குடித்து சிதம்பரத்திற்கு கிளம்பினோம்.
![]() |
தில்லை கிழக்கு கோபுரம். கோஷ்டத்தில் கங்காளர் சிற்பம் |
சரியாக நாங்கள் ஊரை சுற்றி கிழக்கு கோபுரத்தை அடைவதற்கும் அந்தி சாய்வதற்கும் சரியாக இருந்தது. இது நாங்கள் செல்லும் 2 அல்லது மூன்றாவது பயணம் ஆதலால் பயணத்தின் இலக்கணத்திற்கு அனைவரும் பழக்கப்பட்டிருந்தோம். ஆலயத்திற்குள் நுழைவதற்கு முன் ஆசிரியரின் உரை, ஆலயத்தை குறித்த ஒரு சிறிய அறிமுகம் அதன் பின் கருவறை இருந்தால் அங்கு சென்று வேண்டுதல் உள்ளவர்கள் வேண்டிக்கொள்ளலாம், மற்றவர்கள் தரிசித்துக்கொள்ளலாம் அல்லது பார்த்துக்கொள்ளலாம் பின்னர் சுற்றி வந்து சிற்பங்கள் மற்றும் கட்டிடக்கலையை அவதானித்தல்.
பொன் அந்தி வேளையில், காலம் எங்களை கடந்து போவது போல மக்கள் திரள் கடந்துபோய் கொண்டே இருக்கிறது. ஆதவன் அஸ்தமித்துக்கொண்டே இருக்கிறது. ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள் அங்கு குறித்த அறிமுகம் தில்லை கோயிலை புரிந்து கொள்வதற்கு பெரும் திறப்பாக இருந்தது. ஏறத்தாழ அரைமணி நேரத்திற்கும் மேலாக நின்று கேட்டுக்கொண்டிருந்தோம். எனது குறிப்புகளுக்காக உரையை ஒலிப்பதிவு செய்து பயணம் முடிந்ததும் தட்டச்சு செய்து வைத்திருக்கிறேன். கோயிலின் தொன்மம், புராணங்கள், ஆகமங்கள், சித்தாந்தம், திருமுறைகள், சிற்பக்கலை , ஓவியம், நடனம் என்று பல கோணங்களில் தில்லையை குறித்து பரந்த அறிமுகத்தை கொடுத்தார். தில்லை பெருங்கோயில் வரலாறு என்ற வெள்ளைவாரனரின் புத்தகத்தை பரிந்துரைத்தார். ஏறத்தாழ ஒருமணி நேரம் கிழக்கு கோபுரத்தருகிலே செலவிட்டோம்.
![]() |
தில்லை கிழக்கு கோபுரம் |
சிற்றம்பலத்தை குறித்த அவரின் உரையின் ஒரு பகுதி
96 சாளரங்கள் 96 தத்துவங்களை குறிப்பது. நான்கு தங்க தூண்கள் நான்கு வேதங்களை குறிப்பது. ஐந்து படிகள் பஞ்சாட்சரத்தை குறிப்பது. பஞ்சாட்சரத்தை கடந்த நாதாந்த நிலையில் ஆனந்த நடனம் புரியும் நடராஜர் இருக்கிறார். 28 ஆகமங்கள் குறிக்க 28 தூண்கள் உள்ளன. 64 கலைகளையும் குறிக்கும் 64 தூண்கள் உள்ளன. அம்பலத்தில் உள்ள 21,600 பொன் தகடுகள் மனிதன் ஒரு நாளைக்கு எடுக்கும் மூச்சுகள், போன் தகடுகளை பிணைக்கும் 72000 ஆணிகள், மனித உடம்பின் நாடிகளை குறிப்பவை. நவசக்திகளை குறிக்கும் 9 கலசங்கள் உள்ளன. ஸ்தூலமும் சூக்ஷுமமும் ஒரே இடத்தில் அமைந்துள்ளன.
பரிவார ஆலயங்களை சுற்றி திருமூலட்டானர் சன்னதியை அடைந்தோம். காலை நான் வந்த பொழுது மூலட்டானர் சன்னதியை பற்றி படித்திருக்கவில்லை. இந்தமுறை தான் ஆசிரியர் மூலட்டானரை குறித்த திருமுறைகளை சொல்லி விளக்கினார்.
6 கால பூஜையின் ஒரு அங்கமாக பூஜைகள் தொடங்க இருந்த நேரத்தில் சிற்றம்பலத்தை அடைந்தோம். கோவிந்தராஜன் சன்னதிக்கு முன் நின்றிருந்தபோது பிறங்கு பேரம்பல மேரு என்று ரீங்கரித்துக்கொண்டே இருந்தது. சிறு குழுக்களாக கனகசபையில் ஏறி தரிசனம் செய்தோம். சிதம்பர ரகசியத்தை நீங்க பாத்திங்களா நீங்க பாத்தீங்களா என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டிருந்தோம். அம்பலவாணனின் வலகரத்திற்கு மேல் கருப்பு திரையும்(மாய யவ்வணிகா) பின், சிகப்பு திரையும்,வெளிர்சிகப்பு திரையும் அதன் பின் தங்க வில்வ இலைகளும் அதற்கும் பின் சிவசக்ரமும், ஸ்ரீசக்ரமும் உள்ளன.
![]() |
சிவகங்கை குளம் |
அதன் பின் பின்னர் ஸ்படிக லிங்கத்திற்கும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கும் நீராட்டு தொடங்கியது. ஒவ்வொரு நாளும் முறைவைத்து தில்லை வாழ் தீக்ஷதர்கள் இதனை செய்துவருகின்றனர். ஆளுக்கொரு இடம் பிடித்து தூண்கள் மறைக்காதபடி ஸ்படிக லிங்கத்தை பார்த்திருந்தோம். கனகசபையில் அமர்ந்திருக்கும் தீக்ஷிதர் தெப்பக்குள மைய மண்டபத்தை போல சுற்றி இருக்கும் மக்களின் எந்த ஒரு பாதிப்பும் தன் மீது படறாதபடி ரத்னசபாபதிக்கு பூஜைகள் செய்திருந்தார். ராஜ சபையில் நடராஜர் வீற்றிருக்கும்போது கூட ரத்னசபாபதிக்கான பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.
சிவகாம சுந்தரி சன்னதி நாங்கள் சென்றிருந்தபோது நடை அடைக்கப்பட்டிருந்தது. விதானத்தில் உள்ள ஓவியங்களை பார்த்திருந்தோம். யானை லிங்கத்திற்கு பூ சொரியும் ஓவியத்தை பார்த்து நானே அமைதியாய் இருந்தாலும் நண்பர்கள் உங்க ஊரு உங்க ஊரு என்று சொல்லியிருந்தனர். நடை திறந்தபின் தரிசித்து வலம் வந்திருந்தோம்.
கவிஞரும் நானும் இறுதியாக வந்திருந்தபோது காரண சிற்பங்களை காட்டி அண்ணா உங்களுக்கு இந்த சிற்பங்கள் தரும் உணர்வு என்ன என்றேன்.
"மனோஜ்ஜ்ஜ்ஜ்... இந்த மனிதன் எவளோ துளியினுந் துளி, அழிஞ்சுருவோம்னு தெரிஞ்சு ஏதோ ஒரு வகைல காலத்துல நிக்க பாக்குறான். இந்த செலைய பாருங்க(ஒரு இசைக்கலைஞர் சிற்பத்தை காட்டி) எத்தனையோ நூற்றாண்டுக்கு முன் இதை செஞ்சவனும் நானும் இப்போ ஒரே புள்ளியிலே சந்திக்கிறோம். எங்க ரெண்டு பேருக்கு நடுவுல இப்போ யாருமே இல்ல", என்றார்
கோவிந்தராஜர் சன்னதியை தரிசித்து வலம் வந்து பின் இரவுணவுக்காக கிழக்கு வாயில் வழியாக வெளியே வந்தோம்.அருத்ராவின் திருவிழாவின் போது நடந்த தேர் திருவிழாவிற்கு பின் தேர்கள் மூடப்படாமல் இருந்தன. உணவு முடிந்து மீண்டும் சிற்றம்பலத்தை அடைந்து அர்த்த சாம பூஜைக்கு காத்திருந்தோம். சண்டேசர் சன்னதிக்கு அருகில் இருக்கும் கிணற்றிற்கு பரமானந்த கூவம் என்று பெயர். அதை ஒட்டி அனைவரும் நின்றிருந்தோம். பரா பரா பரமேஸ்வர என்ற பாடல் கேட்டுக்கொண்டிருந்தது.
![]() |
சிவகாமி சன்னதி பிரகாரத்தின் விதான ஓவியம் |
நான் உட்பட நண்பர்கள் பலரும் இதற்கு முன் தில்லை அர்த்தஜாம பூஜை கண்டதில்லை. JK நிகழ்வுகளை விளக்கிக்கொண்டிருந்தார். திடீரென்று காவலர்கள் சிலர் எங்களை விலக்கி 4X4 அளவுள்ள சட்டகத்தை போட்டார். தி ஜா கதையில் வரும் ஒரு மடிசார் அணிந்த மாமி அந்த சட்டகத்துக்குள் கரைத்துவைத்த அரிசிமாவில் கோலமிட்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கு நிகழ்ந்தவை அனைத்தும் ஒரு மேற்கத்திய சிம்பொனியை ஒத்த ஒத்திசைவை கொண்டது. கோலம் போடும்போதே நடராஜர் பாதுகைகளின் பல்லக்கு தயாராக இருந்தது. பல்லக்கு சட்டகத்திற்கு வருவதற்குள் அனைவரும் பூவை சமர்பித்திருந்தனர். தூபங்களும் கைலாய வைத்தியமும் முழங்க தொடங்கிவிட்டன. சட்டென்று கனகசபை பொற்கதவுகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. இதற்கு நடுவில் இரு அடியார் சிறுவர்கள் பெருமணியை முழங்கிக்கொண்டிருந்தார். கோவிந்தராஜர் எப்போதோ உறங்க சென்றுவிட்டார்.
![]() |
பொன்னம்பலம் |
எத்தனை நூற்றாண்டுகளாக நிகழ்ந்திருந்தால் இவர்களுக்குள் இந்த ஒத்திசைவு வந்திருக்கும். இந்த அறுபடாத தொடர்ச்சியின் மீது காழ்ப்பு கொண்டவர்கள் பரப்பும் அவதூறு இந்த தீக்ஷிதர்களை ஒருபோதும் தீண்டுவதில்லை. இவர்களின் உரையாடல் எல்லாம் நடராஜரோடு மட்டும் தான். சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்கு தில்லை வாழ் அந்தணர் என்று இறைவன் முதலடி எடுத்துக்கொடுத்தது சரிதான் என்று பட்டது. இவர்கள் இன்னும் 12ம் நூற்றாண்டிலேயே இருக்கிறார்கள் என்று சொல்லினர். அப்படியே இருக்கவேண்டும் என்று விரும்பினேன்.
![]() |
முதல் பிரகார விதானத்தில் உள்ள ஓவியம் |
பாதுகைகள் இருப்பதே தெரியாமல் முழுக்க பூக்களால் மெல்ல மிதந்து வந்து பல்லக்கில் அமைந்தது. வாத்தியங்கள் உச்ச ஸ்தாயியை அடைந்தன. பல்லக்கு வலம் வருவதற்காக எடுத்துச்சென்றனர் நாங்கள் பள்ளியறைக்கு நேராக சுவற்றை ஒட்டி நின்று கொண்டோம். தாளக்கருவிகள் வெளி பிரகாரத்தை அடைந்த பின்னும் நாதம் கேட்டுக்கொண்டே இருந்தது.
சுற்றிலும் அடியவர்கள் பாடல், முழங்கும் தாளமும் சங்கும், பொன்னம்பல தகடுகளில் தூப தீப புகை சுருள், செவி மடல்களில் மென் பனி, வெவ்வேறு தாளத்தில் மணிகள், ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் மினுங்க, இதுதானே கைலாயதிற்கான விளக்கமும் ?
சேரமான் பெருமானும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் வந்துவிடுவார்களோ என்று பார்த்துக்கொண்டிருந்தேன். பல்லக்கு பள்ளியறைக்கு சென்று நடையடைக்கும் வரை யாரும் பேசிக்கொள்ளவில்லை. பின் பைரவரின் சன்னிதியில் பூஜைகள் தொடங்கின. ஆலயத்திலிருந்து இறுதியாக வெளியில் வந்த சிலரில் நாங்களும் அடக்கம். சில தீட்சிதர்கள் இரவு இங்கேயே நடேசருக்கு காவலாக உறங்குவார்கள் என்றனர். இரவு சிறிது நேரம் கவிஞர் உடன் உரையாடியிருந்தோம்.
பின்னிரவில் படுக்க சென்று காலை மீண்டும் தில்லை. காலை உணவு முடித்து நண்பர் கார்த்திக்கிடம் ஆசானுடன் சென்ற பயண அனுபவங்களை பற்றி கேட்டுக்கொண்டிருந்தேன். இன்று தெற்கு கோபுரம் வழியாக செல்லலாம் என்று முடிவு. உள்ளே சென்று மேற்கு கோபுரத்தருகில் நின்று அண்ணா பாபநாசம் சிவனின் "காண வேண்டாமோ" பாடல் பாடினார். ஓட்டம் என்னும் சொல்லில் விழுந்த சஞ்சய் சுப்ரமணியத்தின் சங்கதியை விக்னேஸ்வரன் போன்ற நண்பர்கள் மகிழ்ந்து ரசித்தனர்.
![]() |
சிவகங்கை குளக்கரை, நன்றி: விஜி |
10.30 மணி அளவில் நடைபெற்ற பூஜையை பார்த்துவிட்டு சிவகாம சுந்தரி சன்னதிக்கு அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சன்னதி முன் நின்றிருக்கும்போது ஆசிரியர் "ஒரு ராஜா கோவிந்தராஜர் இன்னோருத்தர் நடராஜர், ரெண்டே ராஜர் தான் " என்றார். ஆசிரியரின் உடயையும் நங்கள் சுற்றி அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்ததையும் கண்ட மக்கள் ஏதோ தாந்திரீகம் என்று எண்ணி சற்றுநேரம் வேடிக்கை பார்த்து சென்றனர். நடராஜ தத்துவம் என்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகளை வாசித்திருந்தோம். இப்போ கடந்து போற மக்கள் ஒரு ரெண்டு நிமிஷம் என்னபேசுறோம்னு கேட்டுட்டா வாழ்க்க மாறீரும், அனா கேக்கமாட்டாங்க என்றார் கவிஞர்.
நேற்று காலை இங்கு வந்த போதே நிருத்தசபையில் பெருந்தூண்கள் மற்றும் கொடிமரம் திருவானைக்காவல் கோயில் மாதிரியே இருக்கே என்று எண்ணி வந்து கொண்டிருந்தேன். S ராமகிருஷ்ணன் ஒரு உரையில் "நான் உலகின் எந்த ஊருக்கு சென்றாலும் மல்லாங்கிணறு என் பாக்கெட்டில் அடி ஸ்கேல் மாதிரி என் பையில் இருக்கும். பாரிசுக்கு போனாலும் நான் என் தெருவை வைத்து தான் அளந்து பாத்துகிடுவேன்" என்றார். அதை போல ஆனைக்கா எப்போதும் என்னுடனிருக்கும். தெற்கு கோபுரத்தில் உள்ள நுழைந்த போதே சுந்தரபாண்டியன் கோபுரம் மாதிரியே இருக்கே என்ற எண்ணத்தை விலக்கித்தான் உள்ளே சென்றேன். சரியாக தாயார் சன்னதி அருகில் செல்லும்போது நண்பர் விஜய சேகர் "திருவானைக்காவல் லயும் இந்த மாரி பெரிய தூண்கள் இருக்குமே" என்றார். சிரித்துக்கொண்டேன்.
லக்ஷ்மி விலாஸின் சாம்பாருக்கு அடியாமையாகி இன்றும் மதிய உணவிற்கு அங்கேயே சென்றுவிட்டோம். மாலை மென்தூரல். நண்பர் அமுதன் கடும் கோவக்காரர். எதற்க்கோ கோவித்துக்கொண்டு நான் வரவே முடியாது என்று அமர்ந்து கொண்டிருந்தார். ஒருவழியாக சமாதானம் செய்து புறப்பட்டோம்.
![]() |
மேல்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் |
மேலகடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலை அடையும்போது தூறல் வலுத்திருந்தது. முதலாம் குலோத்துங்கன் காலத்தைய கோயில். பத்மபந்த அதிஷ்டானம்,ஏகதள (1+1) திராவிட விமானம் கொண்ட கருவறை. கடம்பூர் விஜய் என்ற நண்பர் இக்கோயிலை குறித்து முகநூலில் எழுதியிருக்கிறார். நண்பர்கள் சிலர் அவரை முன்னரே படித்திருந்தனர். புதிதாக Grill கம்பிகள் போட்டு கோவிலை குலைத்ததை குறித்து வருத்தப்பட்டார்.
கோயில் தேர் போன்ற அமைப்பில் உள்ளது(கரக்கோயில்). சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் பாடல் பெற்ற தலம். மழையில் நனைந்து கருங்கற்கள் மின்னிக்கொண்டிருந்தன. இங்குள்ள மிக முக்கியமான சிற்பம் வங்கத்திலிருந்து முதலாம் ராஜேந்திரன் கவர்ந்து வந்த (வெற்றி சின்னமாக !) தசபுஜ ரிஷப தாண்டவ மூர்த்தி சிற்பம். பிரதோஷ தினத்தன்று மட்டும் இந்த சந்நிதி திறக்கப்பட்டு சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன. கோயில் சிவாச்சாரியார் சக்கரத்தை அசைக்கலாம் ஆனால் வெளிய எடுக்கமுடியாது என்று முயன்று சுழற்றி காண்பித்தார்.
![]() |
அர்த்தநாரீஸ்வரர் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் கோஷ்ட சிற்பம் |
இளஞ்சிவப்பு பட்டும் வேஷ்டியும் அணிந்த மிகசிறந்த அர்த்தநாரிஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, மகா விஷ்ணு, விநாயகர், அகத்தியர், கங்காதரர், துர்க்கை கோஷ்ட சிற்பங்களும், இராவணன் கையலயத்தை அசைப்பது, கஜசம்ஹாரர், பேயார் தலையால் நடந்து கைலாயத்தை அடைவது, பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள் மற்றும் பல நூறு குறுஞ்சிற்பங்களும் கொண்ட கோயில்.
![]() |
துர்க்கை வாகனம், மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் கோஷ்ட சிற்பம். |
தொடர்ந்து கீழக்கடம்பூர் கோயில் சென்றோம். பொன்னியின் செல்வன் படம் வெளிவந்த பின் இங்குள்ள மக்கள் அனைவரும் தங்களுக்கான ஒரு பொன்னியின் செல்வன் வடிவத்தை வைத்திருக்கின்றனர். இங்குள்ள பூசகர் அவர் ஒரு வடிவத்தை சொல்லிக்கொண்டிருக்கையிலேயே ஒவொருவராக விடைபெற்று வந்தோம். கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் சிற்பத்தின் பீடத்தில் கல்வெட்டை எழுத்துக்கூட்டி படிக்கும்போது லிங்கபுராண தேவர் என்று சொல்லி ஆசிரியர் கடந்து சென்றார்.
![]() |
தசபுஜ ரிஷப தாண்டவ மூர்த்தி, மேல்கடம்பூர் நன்றி: Wikipedia |
அறைக்குசென்றபின் உணவுண்டு கவிஞரின் உரைக்கு தயாரானோம். எங்கள் பயணத்தில் காணும் எந்த மகத்தான சிற்பத்திற்கும் இணையான உரையை கவிஞர் சாம்ராஜ் வழங்குவார். அருவத்தையும் உருவத்தையும் குறித்து 20 நிமிடங்கள் உரையாற்றினார். ஒலிப்பதிவு செய்துவைத்திருக்கிறோம்.
![]() |
கவிஞர், உரைக்குப்பின். |
ஞாயிறு காலை வீராணம் ஏரியோரம் ஒரு காலை நடை. பறவை பார்த்தால் நண்பர்கள் ஒவொன்றாக அடையாளம் கண்டுகொண்டிருந்தனர். ஆரண்ய ஜாங்கோ என்ற பறவையை கண்டுபிடித்தான் (இரட்டை வால் கருவியாம்).
கிட்டத்தட்ட 30 பேருக்கும் பில்டர் காப்பி போட்டு தந்த அண்ணனை குறிப்பிடவேண்டும். உணவுண்டு கிளம்பி கங்கைகொண்ட சோழபுரம் சென்றோம். குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களின் "ராஜேந்திரசோழன் - வெற்றிகள் தலைநகரம் திருக்கோயில்" என்ற புத்தகத்தை பரிந்துரைத்திருந்தார். முழுதும் படித்து முடிக்காவிடிலும் உடன் எடுத்துசெண்டிருந்தேன்.
புல்வெளியில் நின்று கோயிலின் அறிமுகத்தை அளித்தார். இக்கோயிலின் சில பகுதிகள் கீழணை கட்டுமானத்தின் போது வெடிவைத்து தகர்க்கப்பட்டு கற்கள் இங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டுள்ளன. குடவாயில் ஐயாவின் புத்தகத்தில் இதை பற்றி விரிவாக எழுதியுள்ளார். இரு அடுக்கு திருச்சுற்று மாளிகையில் 32 பரிவார ஆலயங்கள் இருந்து அழிந்த அடித்தள சுவடுகள் மட்டும் உள்ளன. இந்த கோவிலில் ஒரு இடத்தில கூட ராஜேந்திர சோழன் தான் எடுப்பித்தான் என்ற கல்வெட்டு குறிப்பு இல்லை. (தஞ்சையில் நாம் எடுப்பிச்ச கற்றளி என்று ராஜராஜன் கல்வெட்டு உள்ளது).
![]() |
கங்கைகொண்ட சோழீஸ்வரம் |
முதலில் சாளுக்கிய நட்டு சௌரபீடம் (வெற்றி சின்னங்களில் ஒன்று) மற்றும் செப்பு சிலைகளை பார்த்துவிட்டு கருவறை அடைந்தோம். போர் கோலத்தில் நின்றபடி அருளும் முருகன் சிற்பம் மிகச்சிறந்த ஒன்று. முக மண்டபத்தின் உட்சுவர்களில் உள்ள தொடர் சிற்ப காட்சிகளை கண்டோம். சண்டீச நாயனார் புராணம், கண்ணப்பர் புராண காட்சி, கிராதார்ஜுனியம், இமவான் மகளான பார்வதியை சிவனார் திருமணம் புரிந்துகொள்ளும் காட்சி, இராவணன் கயிலையை பெயர்தல், பின் கயிலைநாதன் அருளுதல் ஆகிய சிற்ப தொடர்களை கண்டோம். பின்னர் கருவறையில் பெருவுடையாரை தரிசனம் செய்துவிட்டு சில நண்பர்கள் முன்னரே இறங்கிவிட்டனர். நண்பர் தினேஷுக்கு அழைத்து "எங்க இருக்கீங்க" என்று கேட்டதற்கு, "நந்திகிட்ட, இல்ல.. ரிஷபத்துக்கிட்ட" என்றார். JK வின் தாக்கம். நான்கு பக்கமும் வாயில்கள் உள்ள கருவறை சர்வதோபத்ரம் என்பர். கிழக்கு திசையில் இருப்பவர்கள் நந்தி, மாகாளன். தென்திசையில் ஹேரம்பன் பிருங்கி, மேற்கு திசையில் துர்முகன் பண்டூரன், வடதிசையில் சித்தன் அசிதன் என்று நான்கு திசை துவாரபாலகர்களை சைவாகமங்கள் குறிக்கின்றன.
![]() |
சண்டீசநுக்கிரகமூர்த்தி கோஷ்ட சிற்பம் கங்கைகொண்ட சோழீஸ்வரம் |
ஒரு பெரு நகரத்தை நிர்மாணிக்கும் நிர்பந்தத்தில் இருந்த ராஜேந்திரன் காலத்து சிற்பிகளின் அவசரத்தை இங்கு காண முடியும். தஞ்சையை போன்று நேர்த்தி கட்டுமானத்தில் இல்லை. ஆனால் கோஷ்ட சிற்பங்கள் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. கஜலக்ஷ்மி, விநாயகர், உமையொருபாகன், காமனை எரித்த கண்ணுதற்டவுள், மாலவனுக்கு ஆழி ஈந்த பெருமாள், ஆலமர்செல்வர், ஆலங்காட்டு அழகன் என்று குடவாயில் ஐயா சிற்பங்களை கவிச்சொற்களாலே அடையாளப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கோஷ்ட சிற்பத்திற்கும் அதன் புராண கதையுடன் விளக்கியிருக்கிறார்.
கீழ்நிலை மற்றும் மேல்நிலை கோஷ்ட சிற்பங்களை பார்த்துவிட்டு இறுதியாக சண்டீசநுக்கிரகமூர்த்தி எதிர் புறம் உள்ள கலைவாணி கோஷ்டங்களை கண்டோம். ஒவ்வொரு இழையாக எடுத்து சீவியது போன்ற ஜடாமகுடம், அப்போதுதான் மலர்ந்தது போன்ற மலர்கள் கொண்ட சண்டீசரின் மாலை. சில நிமிடம் மௌனமாக அமர்ந்திருந்தோம்.முதலாம் ராஜேந்திரன் கால சிற்பங்களில் தலை சிறந்த மூன்று சிற்பங்கள் என்றால் நிச்சயம் சண்டீசநுக்கிரகமூர்த்தியும், நடராஜர் சிற்பமும் இருக்கும். திருவாலங்காட்டை விளக்கும் சிற்ப கோஷ்டத்தில் இருக்கும் நடராஜர் சிற்பம் புகழ்பெற்றது.
![]() |
கலைவாணி கோஷ்ட சிற்பம், கங்கைகொண்ட சோழீஸ்வரம் |
பின் தென் கைலாய, வட கைலாய சந்நிதியை கண்டோம். பாலா sir santa claus போன்று தின் பண்டங்களை எடுத்து கொடுத்துக்கொண்டே இருந்தார். மழை வலுக்கவே சண்டிகேஸ்வரர் சன்னதியில் சிறிது நேரம் நின்றுவிட்டு பயணத்தை தொடர்ந்தோம். வட கைலாயத்தில் சில உள்ளூர் பெண்கள் நேர்த்திக்கடன் என்று சுவற்றில் குங்குமத்தால் ஸ்வஸ்திக் வரைந்துகொண்டிருந்தனர். சென்று திட்டிவிட்டு வந்தேன். படையெடுப்பில் எஞ்சிய சில செல்வங்களையும் சூறையாடுவதற்காக கிளம்பியிருக்கும் மூர்க்க கும்பல்கள் இவை. நம் பக்தர்களிடமிருந்து முதலில் ஆலயங்களை காப்பாற்றவேண்டும்.
![]() |
கணக்கு பிள்ளையார், கங்கைகொண்ட சோழபுரம் |
கோயிலுக்கு அருகிலேயே உள்ள சாளுக்கிய நட்டு பிள்ளையார் அமர்ந்துள்ள கணக்கு பிள்ளையார் கோயிலுக்கு சென்றோம். தனியான சிறிய கோயிலில் விநாயகர் காணாமல் போனவராக அமர்ந்திருந்தார். கோயில் சாவியை திரும்ப கொடுக்க போகும் போது அந்த அக்கா "அடுத்த வாரம் கோயில் கும்பாவிசேகம் தம்பி, எல்லாரும் கண்டிப்பா வந்துருங்க" என்று அழைத்திருந்தார்.
தொடர்ந்து சோழன்மாளிகை அகழாய்வு தடத்திற்கு சென்றோம். ராஜேந்திரனின் மாபெரும் கட்டுமானமான பெருங்கோயிலையும் அரண்மனை இருந்த இடத்தின் தடயங்களையும் ஒரேநாளில் பார்த்தோம். காலத்தை அறைகூவி நிற்கும் ஒரு கலைப்படைப்பும் அதை எழுப்ப காரணமாக இருந்தவரின் எச்சங்களையும் பார்த்தது பல எண்ணங்களை எழுப்பியது. பாண்டியாரான கவிஞர் சற்று ஏளனத்துடனேயே அகழாய்வு குழிகளை சுற்றி வந்திருந்தார். கிடைத்த பொருட்களை அருகில் உள்ள சிறிய அருங்காட்சிகையகத்தில் காட்சி படுத்தியுள்ளனர்.
குடவாயில் ஐயாவின் புத்தகத்திலிருந்து |
செங்கமேடு நிசும்ப சூதினி கோயில். தஞ்சையை தலைநகராக்கி விஜயாலய சோழன் எடுப்பித்த நிசும்ப சூதினி கோயிலைப்போல ராஜேந்திர சோழன் எழுப்பிய போர்த்தெய்வம். சும்ப நிசும்ப வதம் முடித்து அதே கோபம் மிச்சமிருக்க கோரைப்பற்கள், ஜ்வாலாகேசத்துடன் கைகளில் ஆயுதமேந்தி அமர்ந்திருந்தாள். பிரேதகுண்டலத்தை புகைபடமெடுக்க கிட்ட சென்றபோது "என்னடே" என்று எழுந்து வந்துவிடுவாள் போலிருந்தது. எதிரி வீரர்களுக்கல்ல சோழ படைக்கே கூட அம்மை அச்சமூட்டியிருக்கக்கூடும். மாத்ரு ரூபம் எல்லாம் இவளுக்கில்லை. ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் தணியாத ரௌத்திரம். குடவாயில் அய்யா புத்தகத்தில் இப்படி குறிப்பிடுகிறார்.
செம்மாந்த இத்திருவடிவம் தான் ராஜேந்திர சோழதேவரின் இத்தனை வெற்றிகளுக்கும் உந்து சக்தியாக இருந்திருத்தல் வேண்டும். இலட்சக்கணக்கான சோழ படை வீரர்களுக்கு இந்த நிசும்ப சூதினியே வெற்றித்திருவாக போர்த்தெய்வமாக திகழ்ந்தாள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
கோயிலை தற்போது பார்த்துக்கொண்டிருந்த அக்காவிடம் வச்சுக்கோங்க என்று பணத்தை கொடுத்ததற்கு வெடுக்கென்று துள்ளி வேண்டாம் என்றுவிட்டார். அருகில் உள்ள நுளம்ப சாளுக்கிய நாட்டு சிற்பங்களை பார்த்தோம். சாளுக்கிய நாட்டு காளி, பைரவர், பைரவி மற்றும் கலிங்க பைரவர், பைரவி சிற்பங்களை பார்த்தோம். இந்த பயணத்தில் இன்னும் Google Mapsல் குறிப்பிடப்படாத கோயில் ஒன்றுமே பார்க்கவில்லை என்று எண்ணியிருக்கும்போது தான் ரெட்டி தெரு காளி கோயில் செல்வோம் என்றார் ஆசிரியர். சில மனமகிழ் மன்றங்களை கடந்து சிறிய கோயிலை அடைந்தோம்.
![]() |
ரெட்டி தெரு காளி |
சாளுக்கிய நாட்டு மகிஷாசுரமர்த்தினி தனியாக ஆலமரத்தடியில் நீண்டிருந்தாள். மீண்டும் கங்கை கொண்ட சோழபுரம் வந்து காப்பி குடித்துவிட்டு சிறிது நேரம் உரையாடி பிரியாவிடை பெற்றோம். ஒரு கண் இமைப்பிற்குள் முடிந்து போன பயணம்.
இது வரை சென்ற பயணங்கள் ஸ்தூலமாக கண் முன் நிற்கும் சிற்பங்கள், கட்டிடக்கலை ஆகியவற்றை அவதானிப்பதற்கு. இந்த பயணம் அதையும் கடந்த சூக்ஷுமமாக அமைந்த சிலவற்றை உணர்வதற்கான பயணமாக இருந்தது. அதிகமும் மௌனத்தில் தான் உரையாடிக்கொண்டோம். உருவம் அருவம் அருவுருவம் மூன்றும் ஒன்றாக அமைந்த தில்லை நீண்டதொரு அக பயணத்தின் முதல் அடி.
வெளி இணைப்புகள்
"பிரேதகுண்டலத்தை புகைபடமெடுக்க கிட்ட சென்றபோது "என்னடே" என்று எழுந்து வந்துவிடுவாள் போலிருந்தது. எதிரி வீரர்களுக்கல்ல சோழ படைக்கே கூட அம்மை அச்சமூட்டியிருக்கக்கூடும்." -- அதே அதே. புகைப்படத்தில் எவ்வளவு பெரிய சிலையும் சிறியதாகத்தான் தெரிகிறது. நேரில் பார்க்கும்போதுதான் அதன் ரௌத்திரத்தின் முன், அதன் பிரம்மாண்டத்தின் நாம் ஒரு திடுக்கிடலை உணர்கிறோம்.
ReplyDeleteமிக நேர்த்தி. விரிவான விளக்கங்கள். நன்றி.
ReplyDeletethe chandikesar you refer to near paramananda koopam...not koovam..is actually Brahma with 4 heads..next visit watch carefully...I noticed this, after reading a lecture by kanchi mahaswamy.
ReplyDeleteCongrats! Very good article detailing your own personal experience of the travel rather than a mere travelogue. You also seem to be popular as can be seen from the above internet examiner.
ReplyDeletemanoj..attakasam
ReplyDelete