குடமுழா - நூல் குறிப்பு
இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.
காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை
தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.
சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து செய்த பண்பாட்டு ஆய்வு முறை.
நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.
பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோயில்களின் வரலாற்றை சிற்பவியல், படிமவியல் மற்றும் ஆகம பின்புலத்தில் ஆய்வு செய்து பெரு நூல்களை எழுதியுள்ளார். 100க்கும் மேற்பட்ட கலை விமர்சன கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இந்த நுண்வரலாற்று தளத்தில் எழுதப்பட்ட ஒரு முக்கியமான படைப்பு குடமுழா - பஞ்சமுக வாத்தியம் என்னும் நூல்.
குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு முறையென்பது இலக்கிய சான்று, கல்வெட்டு சான்று, சிற்பவியல் சான்று என்ற முக்கோணத்தில் நிகழ்வது.
சங்க இலக்கியத்திலிருந்து தாளக்கருவிகள் குறித்த ஏராளமான குறிப்புகள் கிடைக்கின்றன என்றாலும் குடமுழா எனப்படும் இந்த பஞ்சமுகவத்தியத்தை குறித்த குறிப்புகள் காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகத்தில் இருந்து கிடைக்கின்றன. அதனை தொடர்ந்த கல்லாடனரின் பெருங்கதை என்னும் நூல் ஐங்கண் முழவத்தை குறித்த குறிப்புகளை கொடுக்கிறது.
சிற்பவியல் நோக்கில் இந்திய அளவில் முழவின் உருவங்களையும் வடிவத்தின் பரிணாமத்தையும் ஒப்பீட்டு ஆய்விற்கு உட்படுத்துகிறது. முழவின் வேறு வடிவங்கள் அஜந்தா குகைகளில் தொடங்கி, கீழை கங்கர்கள், கூர்ஜர பிரதிகாரர்கள், மேலை சாளுக்கியர்கள், கல்யாணி சாளுக்கியர்கள், ராஷ்ட்ரகூடர்கள், நுளம்பர்கள் என்ற பல அரச வம்சத்தின் கலைவடிவங்களில் முழவின் வடிவ மாறுபாடுகளை ஒப்பிடுகிறது. முழவு ஆடல்வல்லானின் சிற்பத்தில் மட்டுமன்றி நாடகம் மற்றும் ஆடலிலும் முக்கியமான தாள கருவியாக இருந்துள்ளது என்பதற்கு சான்றாக பல சிற்பங்கள் உள்ளன.
தமிழகத்தின் சிற்பங்களில் பல்லவர்கள், முற்கால பாண்டியர், விஜயாலயன் தொடங்கி முதலாம் குலோத்துங்கன் வரையிலான சோழ பேரரசின் கலைப்பாணியில் மாற்றங்களை ஆய்கிறது.
இலக்கிய, சிற்பவியல் சான்றுகளை கொண்டு 11-13ம் நூற்றாண்டில் தான் முழா ஐந்து முகம் கொண்டதாக வளர்ந்தது என்ற ஆய்வு முடிவை முன்வைக்கிறார்.
முழவிசைப்பவர்கள் நந்தீச என்ற முன்னோட்டை கொண்டிருப்பர் என்று திருமணஞ்சேரி கோயிலின் கல்வெட்டுகளை கொண்டு விளக்குகிறார். முழவின் முதல் ஆசிரியனாக நந்தீஸ்வரர் கருதப்படுகிறார். பஞ்சமுக வாத்ய லக்ஷணம் என்ற முழவு நூல் பஞ்சமுக வாத்தியத்தை வாசிப்பவர்கள் பாரசைவமரபினர் என்று சொல்லி அவரகளுக்கான நியமங்களையும் வகுத்துரைக்கிறது.
திருவாரூரில் தியாகராஜருக்கான சிறப்புகளுள் குறிப்பிட்டு சொல்லப்படுவது பஞ்சமுக வாத்தியம், இதன் புராண பின்புலத்தை ஆராயும் அத்தியாயம் சுவரஸ்யமானாது. சதாசிவமூர்த்தியின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியதாக கருதப்படும் பஞ்சமுக வாத்தியம், சோடச உபசாரத்தின் போது வாசிக்கப்படும் முறை முதலியவை விவரிக்கப்பட்டுள்ளது.
சதாசிவ வடிவத்தோடு இணைந்து வளர்ந்த வாகீசர் வழிபாடு குறித்தும் அதன் படிமவியல் குறித்தும் சில குறிப்புகளை கொடுத்திருக்கிறார். ஈசன் பிரம்மாவிற்கு நாட்டிய சாஸ்திரத்தை கற்பிக்கும்போது அதனை கேட்ட நந்தீஸ்வரர் அதனை பரத முனிவருக்கு போதித்ததாக நாட்டிய சாஸ்திரம் விவரிக்கிறது. யோகம், தத்துவம், இசை, நாட்டியம், சாத்திரம் அனைத்திலும் வல்லவரான நந்தீஸ்வரர் சிவனின் வடிவமாகவே கருதப்படுகிறார். ஆரூரில் பஞ்சமுக வாத்தியம் இசைத்த சங்கரமூர்த்தி முட்டுக்காரரின் சிறு வரலாறும் இணைக்கப்பட்டுள்ளது. முழவு தற்போது கேரளத்தின் கூத்தம்பலத்தில் நிகழும் நாடகங்களில் முக்கியமான மைய தாள கருவியாக விளங்குகிறது.
ஒரு முக முழவின் நாதம் செப்பு குடத்தில் எதிரொலித்து மற்றொரு முகத்தில் அதிர்வில் பன்மடங்காவதென்பது இந்த வாத்தியத்தின் கட்டுமானத்தில் கூட ஒரு மகத்தான பாய்ச்சல். தாள வாத்தியத்திலேயே கூட சிம்ம கர்ஜனை போன்ற வாத்தியம். தற்போது திங்கள் மற்றும் வெள்ளி நாட்களில் மட்டும் ஆரூர் தியாகராஜரின் சாயரட்சையின் போதும் திருத்துறைப்பூண்டியிலும் மட்டும் இசைக்கப் படுகிறது.
| ஆனைக்கா ஆடல்வல்லான் சிற்பம் |
செப்பு படிமங்கள் என்ற இயலின் குறிக்கப்பட்டுள்ள சோழர் கால ஆடல்வல்லானின் திருமேனியில் குஞ்சிதபாதத்திற்கருகில் ஐங்கண் முழவிசைக்கும் முப்புர அசுரர்களின்(தாரகாக்ஷன், வித்யுன்மாலி, வானாசுரன்) ஒருவனான வானாசுரன் மிக முக்கியமான ஒரு அங்கம். திருவானைக்கா பேராலாயத்தில் முதல் பிரகாரத்தில் உள்ள ஆடல்வல்லான் திருமேனியிலும் இந்த பஞ்ச முக முழவம் உள்ளது என்ற குறிப்பை கொண்டு, சென்று பார்த்து வந்தேன். இந்திய கலைவரலாற்றின் உச்சங்களுள் ஒன்றான ஆடல் வல்லானின் செப்புத்திருமேனியின் காலத்தையும் அதன் புராண பின்புலத்தை மற்றுமொரு தளத்திற்கு பஞ்சமுக முழவம் உயர்த்துகிறது, அதன் பரிணாமத்தை ஆராயும் இந்த நூல் மிக முக்கியமான படைப்பு.
| ஆனைக்கா ஆடல்வல்லான் சிற்பத்தில் பஞ்சமுக வாத்தியம் |
இணைப்புகள்
- எழுத்தாளர் ஜெயமோகன் உரை - https://youtu.be/m6j1b85XoOo?si=dQXqcCxYWDiyku_T
- குடமுழா - https://www.commonfolks.in/books/d/kudamuzhaa
- மனோ
அருமையான பதிவு
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDelete