மாலை ஆறுமணிக்கு S ரா சொற்பொழிவு என்ற அறிவிப்பை பார்த்து ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினேன். அரை மணி நேரம் ஆகவேண்டிய பயணம் காவிரி பாலத்தின் குறுக்காக புதிய பாலம் கட்டும் வேலைகள் நடைபெறுவதால் மாற்று வழியில் ஒருமணி நேரம் பிடித்தது. முதல் முறையாக மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் பிரிட்டிஷ் காலத்திய ராணுவ மைதானத்தின் கல்வெட்டை கண்டேன். வெஸ்ட்ரீ பள்ளி மைதானத்தை நெருங்கும் போதே கலைநிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. இந்த ஆண்டு சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்காக ஒரு அரங்கும் புத்தக கடைகளுக்காக தனி அரங்குமாக இரண்டு அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன. கலை நிகழ்ச்சிகள் அப்போது தான் தொடங்கியிருந்ததால் முதலில் புத்தகங்களை பார்த்துவிட்டு பிறகு சொற்பொழிவு அரங்கத்திற்கு செல்லலாம் என்று நுழைந்தேன். பொன்னியின் செல்வன் வாங்குவதற்காக புத்தக கண்காட்சிக்கு வரும் மரபார்ந்த நிகழ்விற்கு திருச்சியும் விதிவிலக்கல்ல என்பதாக எந்த அரங்கில் நுழைந்தாலும் "பொன்னியின் செல்வன் இருக்கா" என்ற குரலை கேட்க முடிந்தது. கடந்த எழுபது ஆண்டுகளில் பொன்னியின் செல்வன் நாவ