மாலை ஆறுமணிக்கு S ரா சொற்பொழிவு என்ற அறிவிப்பை பார்த்து ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினேன். அரை மணி நேரம் ஆகவேண்டிய பயணம் காவிரி பாலத்தின் குறுக்காக புதிய பாலம் கட்டும் வேலைகள் நடைபெறுவதால் மாற்று வழியில் ஒருமணி நேரம் பிடித்தது. முதல் முறையாக மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் பிரிட்டிஷ் காலத்திய ராணுவ மைதானத்தின் கல்வெட்டை கண்டேன்.
வெஸ்ட்ரீ பள்ளி மைதானத்தை நெருங்கும் போதே கலைநிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. இந்த ஆண்டு சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்காக ஒரு அரங்கும் புத்தக கடைகளுக்காக தனி அரங்குமாக இரண்டு அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன.
கலை நிகழ்ச்சிகள் அப்போது தான் தொடங்கியிருந்ததால் முதலில் புத்தகங்களை பார்த்துவிட்டு பிறகு சொற்பொழிவு அரங்கத்திற்கு செல்லலாம் என்று நுழைந்தேன். பொன்னியின் செல்வன் வாங்குவதற்காக புத்தக கண்காட்சிக்கு வரும் மரபார்ந்த நிகழ்விற்கு திருச்சியும் விதிவிலக்கல்ல என்பதாக எந்த அரங்கில் நுழைந்தாலும் "பொன்னியின் செல்வன் இருக்கா" என்ற குரலை கேட்க முடிந்தது. கடந்த எழுபது ஆண்டுகளில் பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தவர்களின் எண்ணிக்கையை, கடந்த இரண்டு ஆண்டுக்குள் புத்தகமாக சுருக்கிய வடிவாக ஒலி புத்தகமாக என பல்வேறு வடிவங்களில் வாசித்த எண்ணிக்கை விஞ்சக் கூடும். மணிரத்னம் அவர்களுக்கு நன்றி.
கண்காட்சி தொடங்கிய தினத்தன்று நந்தலாலா எழுதிய ஊரும் வரலாறு என்ற நூல் வெளியிடப் பட்டது. திருச்சியை பற்றிய micro history வடிவிலான வரலாற்று நூல். நந்தலாலா இதை விகடனில் தொடராக எழுதி வந்தார். தற்போது அனைத்து கட்டுரைகளும் தொகுக்கப் பட்டு நூலாக வெளிவந்திருக்கிறது. இந்த கண்காட்சியில் வாங்க விரும்பிய முதல் புத்தகத்தில் இதுவும் ஒன்று. விகடன் அரங்கில் இந்த புத்தகத்தையும் மீனாட்சி புத்தக நிலையம் அரங்கில் ஆசான் ஜெயமோகனின் வெண்கடல் சிறுகதை தொகுப்பையும் பெற்று சொற்பொழிவு நடக்கும் அரங்கில் சென்றமர்ந்தேன்.
அரங்கிற்கு அருகில் S ரா வாசகர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார் சமீபத்தில் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய மணியிடுங்கள் தந்தையே நாவலை படித்ததை குறித்து அவரிடம் பேச விரும்பி பின்பு தயங்கி தவிர்த்துவிட்டேன். ஏழரை மணிக்கு S ரா சொற்பொழிவு தொடங்கியது. வரலாற்றின் மௌனம் என்ற தலைப்பில் ஒன்றரை மணி நேரம் உரையாற்றினார். அநேக தலைப்புகளை தொட்டுச் செல்வதாக அமைந்த உரை. S ராவின் சொற்பொழிவை முதல் முறையாக நேரில் கேட்டது புதிய அனுபவமாக இருந்தது.
சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அநேக கல்லூரி மாணவர்களையும் குழந்தைகளையும் கண்காட்சியில் காணமுடிந்தது. குடும்பமாக புத்தக கண்காட்சிக்கு மக்கள் சென்று வருவதை காட்டிலும் வேறென்ன உவகை தரும் செயல் இருக்கப் போகிறது சக வாசகனுக்கு.
Comments
Post a Comment