ஜார் ஒழிக, கவிஞர் சாம்ராஜின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு. நீண்ட விடுமுறை தினங்களான இந்த நாட்களில் ஆண்டு தொடக்கத்தில் படிப்பதற்காக எடுத்து வைத்து முடிக்காமல் விட்ட புத்தகங்களை படித்துக்கொண்டிருக்கிறேன். மாலை தொடங்கி ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம் ஜார் ஒழிக. முதன் முதலாக இரண்டாம் நிலை ஆலயக்கலை வகுப்பில் பங்கேற்று கவிஞரை சந்தித்து வீடு திரும்பிய ரயில் பயணத்தில் ஜார் ஒழிக என்ற ஒரு கதையை மட்டும் படித்துவிட்டு அப்படியே வைத்திருந்தேன். சுஜாதாவை தன் ஆதர்சங்களில் ஒருவராக சாம்ராஜ் குறிப்பிட்டுள்ளார், எந்த ஒரு கதையும் சுவாரஸ்ய தன்மை குன்றாமல் வரிகளுக்கிடையில் பகடியை விட்டு செல்கின்றன. வாசகனாகிய எனக்கு இட்டு நிரப்ப சில இடைவெளிகளை தந்திருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் வருபவர்கள் நாம் அன்றாடம் காணும் மனிதர்கள் - குள்ளன் பினுவையோ, பரமேஸ்வரியையோ காலை பேருந்து நிறுத்தத்தில் நாம் பார்த்திருக்கக்கூடும். மரியபுஷ்பம் இல்லம் கதை மற்ற அனைத்து கதைகளை விடவும் மனதிற்கு நெருக்கமான ஒன்று, என் நிலத்தில் நடக்கும் கதை, மாம்பழ சால...