Skip to main content

இந்திர நீலம் முழுமை

  இன்று இந்திர நீலம் படித்து முடித்தேன். துவாரகையிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். முதற்கனல் தொடங்கி பிரயாகை வரையிலான நாவல்களை காட்டிலும் வெண்முகில் நகரம் எனக்கு மிகுந்த நெருக்கமான ஒரு பகுதி. இந்த குருபூர்ணிமா நாளன்று நித்தியவனத்தில் நடைபெற்ற கேள்வி பதில் போட்டியில் பீமனுக்கு எப்போது துரியோதனன் மீது வன்மம் பிறக்கும் என்ற கேள்விக்கு பதில் சொல்லியதற்காக பரிசாக கையெழுத்திட்டு ஜெயமோகன் அவர்கள் அளித்த நூல். முழு வீச்சாக இந்திர பிரஸ்தத்தின் ஆயுத்த பணிகளை படித்து முடித்தேன்.


நன்றி - முகநூல் Chitrayog Art Boutique 


       வெண்முகில் நகரம் முடித்த அதே நாளில் இந்திர நீலத்தை தொடங்கினேன். எட்டு திருமகள்களும் கிளம்பி சென்ற இடமான விண்ணளந்தோனின் வலமார்பினை அடையும் கதை இந்திர நீலம். நீலத்தில் வரும் கிருஷ்ணன் மாயன், பொற்பாதங்கள் நிலத்தை தொடாது பறந்தும் பின் சில சமயம் நடந்தும் மாயம் காட்டுபவன், இந்திர நீலத்தில் அவன் பேரரசன், அரசியல் மதியூகி, ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பும் பெரு வீரன். ஒவ்வொரு இளவரசியின் திருமணமும் இந்த பெரும் பகடையாட்டத்தின் காய் நகர்த்தல்கள்.

    கிருஷ்ணனை காட்டிலும் இந்திரநீலத்தின் நாயக/நாயகி கதாபாத்திரம் என்பது சியமந்தகம் தான். நாளங்காடி பூதத்திற்கு நிகராக காண்போர் ஒவ்வொருவரையும் வசீகரிக்கும் மாய மோகினி சியமந்தகம், நாவல் முழுக்க குருதிப்பலி கேட்டபடியே இருக்கிறது. இறுதியாக சாத்யகியையும் ஆட்டுவிக்கும் சியமந்தகம் காளிந்தியின் கையில் கொள்ளும் முடிவு மிக பொருத்தம். ஒரு உலகப்போர் முடிந்த நிம்மதியை கொடுத்தது. 


அரசியரின் காதல் 

    எட்டு திருமகள்களும் கிருஷ்ணனை அடையும் காதல் கதைகள் அதன் அரசியல் பின்னணி, விரிவாக பேசப்பட்டுள்ளது. கண்ணனை அடையும் வரை வடக்கிருப்பேன் என்றமரும் சத்யபாமையில் தொடங்கி, கண்ணனை கண்ட நொடியே விண்ணளந்தோன் என்றுணர்ந்து சரணடையும் காளிந்தி வரை, க்ஷத்ரிய குலமகளான ருக்மிணியை கந்தர்வ மணம் புரிவதிலிருந்து, சுபத்திரையோடு கூடி மித்திரவிந்தையை மணம் புரிவது வரை, ஜாம்பவர்களிடம் போரிட்டு ஜாம்பவதியை அடைவதிலிருந்து வித்யாலட்சுமி லக்ஷ்மணையை சுயம்வரத்தில் வெல்வது வரை திகட்ட திகட்ட காதல் ததும்புகிறது. 

 

சுபத்திரை 

    மூத்தோனுக்கு பெண் கவர கதை கொண்டு புரவியேறும் பலராமரின் பெண் வடிவான சுபத்திரை, அரை நாளுக்குள் கோசலம் சென்று கோசாலையை கவர்ந்து வருகின்றனர் அண்ணனும் தங்கையும். 


தொன்மங்களின் எடுத்தாள்கைகள் 

    நாவல் முழுக்க ஊடுபாவாக வரும் தொன்மங்கள் கச்சிதமாக பொருந்தியிருக்கின்றன. சிசுபாலன் - கிருஷ்ணனுக்கான சமர், முந்தைய யுகங்களில் கிருஷ்ணனுக்கு எதிராக நின்று சமராடும் சிசுபாலன் என்பதை வரதாவில் நீந்தி வென்ற சிசுபாலனுக்கு புகழ் மொழியாக ருக்மியின் சொற்கள் 

“தாங்கள் மானுடரல்ல. இப்பாரதவர்ஷத்தை ஆளவந்த பெருந்தெய்வம். ஆயிரம் கரங்கள் கொண்ட கார்த்தவீரியன். திசை யானைகளை நெஞ்சு பொருதி வென்ற இலங்கை மன்னன். மண்ணளந்த மாபலி. விண்வென்ற இரணியன்…”

    ஏழன்னையரின் காதல் கேள்விகளுக்கு சத்யபாமை பதிலளித்தல், சத்யபாமாவை பெண் பார்க்க வரும் சிசுபாலன் ஏழன்னையரின் உருக்கண்டு மூர்ச்சையாதல் ஒரு உச்ச தருணம்.


திருஷ்டத்யும்னன் பயணம் 

    பாண்டவர்களின் போரில் காயம்பட்ட திருஷ்டத்யும்னன் இந்திரப்ரஸ்தத்திற்கு நிதி கோர திரௌபதியால் கண்ணனிடம் தூதனுப்ப படுகிறார். எட்டு அரசியரின் திருமண கதைகளை கேட்டும், விதர்ப்ப அரசியை கவரும் போரில் கிருஷ்ணனுக்கு துணை நின்று, சாத்யகி என்னும் ஐங்குறி பெற்றவனை தோழனாக பெற்று நாவல் முடிவில் துவாரகையிலிருந்து வெளியேறும் அவர் சமர் வென்ற வீரனாகவும் சுஃப்ரையை குறித்து பஞ்சாலரிடம் சொல்லும் துணிவு பெற்ற வீரனாக கலம் ஏறுகிறார்.

ஒவ்வொரு அத்தியாயத்திற்கு 2-3 வரி சிறு குறிப்பும், மனதிற்கு நெருக்கமான சொற்றொடர்களையும் குறித்து வைத்திருக்கிறேன் அவற்றில் சில.

அவள் அவையில்தான் பாரதவர்ஷத்திலேயே சிறந்த ஆண்மகன்கள் வந்துசேர்கிறார்கள். சிற்பிகள், பாடகர்கள், கவிஞர்கள், தளபதிகள், அமைச்சர்கள்… அவளைப்பணிவதே தங்கள் ஆண்மையின் உச்சமென்பது போல வந்தபடியே இருக்கிறார்கள். அவள் முன் துர்க்கைமுன் பூதகணங்களாக பணிந்து நிற்கிறார்கள். 

பெண்களிலும் மலர்களிலும் அழகின்மை என்பதில்லை

சாத்யகி “எட்டு தடக்கைகளால் இளைய யாதவரை தன் மடியில் அமர்த்தியிருக்கிறார் அரசி. அவரும் தன் பல்லாயிரம் உருத்தோற்றங்களில் ஒன்றை மகவென அடிமையென அரசிக்கு அளித்து அப்பால் நின்று சிரிக்கிறார்” என்றான்.

அமுதென்பது உண்ணப்படுவதல்ல உணரப்படுவது

பொருளற்ற சொற்கள் போலிருந்தன அவை. பொருளற்றவையாக இருக்கும்போது மட்டுமே சொற்கள் அடையும் பேரழகையும் ஆற்றலையும் அடைந்தவையாகத் தோன்றின.

“விண்நீலம், விரிகடல்நீலம், விழிநீலம், விசும்பு எழுந்த மலர்நீலம்

கோல்விழும் முரசின் உட்பக்கம் என அதிர்ந்துகொண்டிருந்த மாளிகை வழியாக

அந்த மென்பரப்பை மூன்றுவிரல்களால் அழுத்தி அழுத்திச் சென்று பறவைகள் எழுதியிருக்கும் மொழி என்பது விந்தியன் தன் அமுதை உண்ணும் மானுடருக்கு அளிக்கும் வாழ்த்து.

கூந்தல் நீலமணிகளால் நிறைந்துள்ளது. இதற்கு மேல் என்ன?” என்றாள் முதியசேடி. “எத்தனை விண்மீன் சூடினாலும் இரவின் பரப்பு எஞ்சியிருக்கும்”

முகிலில் இருந்து மலை வழியாக கடல் நோக்கிய ஒரு கோடு மட்டுமே அது என. துயிலும் அன்னையிடம் பால் குடிக்கும் பன்றிக்குட்டிகள் போல படித்துறையில் படகுகள் முட்டிக் கொண்டிருந்தன.

அரசப்பெண்டிர் கலைமானின் கால்கணு போன்றவர்கள் என்பது முதுமொழி. விசையனைத்தும் வந்துசேரும் மெல்லிய தண்டு. தேர்ந்த வேடன் அங்குதான் உண்டிவில்லால் அடிப்பான்.


“அதில் ராமன் தன் விற்திறனை நிறுவ ஓர் அம்பில் ஏழு மரங்களை முறித்தான் என்றொரு கதை வருகிறது. அதற்கு நுண்ணிய வேதாந்தப் பொருள் கொள்வது வழக்கம்.”

“ஏழு மரங்களும் உடலில் சுழலும் ஏழு யோகத்தாமரைகளே என்பார்கள். மூலாதாரம் முதல் சகஸ்ரம் வரை மலர்ந்த ஏழு புள்ளிகள். அவற்றை தன்னிலை என்ற ஒற்றைப்பாம்பால் நேர்கோடென ஆக்கி ஊழ்கமெனும் அம்பால் முறித்து மெய் நிலையை அடைந்தான் ராமன் என்பதே அதன் பொருள் என்பார்கள்” என்றார் அக்ரூரர். திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “எளிய முறையில் ஏழு விண்ணுலகங்கள் என்பதுண்டு” என்றான்.

அக்ரூரர் “ஏழு கீழுலகங்கள் என்பவரும் உண்டு” என்றார். “ஏழு என்ற எண் ஊழ்கத்தளத்தில் நுண்பொருள் பல கொண்டது. எதுவாயினும் ஆகுக, இம்முறையும் அதற்கிணையான ஒன்றையே அமைக்கவேண்டுமென்று கோசலத்து அமைச்சர்கள் முடிவெடுத்தனர். அங்கே அவர்கள் பெருந்தொழுவத்தில் ஏழு களிற்றுக்காளைகள் இருந்தன. அவற்றுக்கு சூரியனின் ஏழு புரவிகளின் பெயர்கள் இடப்பட்டிருந்தன. காயத்ரி, பிருஹதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்தி.” திருஷ்டத்யும்னன் “வேதங்களின் ஏழு சந்தங்கள்” என்றான். “ஆம், ஏழுநடை” என்றார் அக்ரூரர்.

உப்பரிகையில் தன் இரு சேடியர் அருகே நிற்க அணிச்செதுக்கு மரத்தூணைப் பற்றி நின்ற அன்னை குனிந்து கீழே நோக்கினாள். அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.

பேரறம் ஒன்றுக்காக அனைத்துச் சொற்களும் கடந்து செல்லும் முடிவை எடுப்பதற்கே அங்கொரு அரசன் தேவையாகிறான். - 78
ஓலைக்கு வலிக்கும் என்று நான் அழுதேனென்று செவிலியர் நெடுங்காலம் சொல்லி சிரிப்பதுண்டு. முதுகணியர் சிரித்துக் கொண்டே தொடர்ந்து எழுத நான் எழுந்து சென்று என் களிப்பாவை ஒன்றைத் தூக்கி அவர் தலையில் அடித்தேன். அந்த ஓலையை அவர் கொல்கிறார் என்று கண்ணீர்விட்டு அழுதேன் - 78

“உருகிவிடுமா மூத்தவரே?” என்றாள் சுபத்திரை. குனிந்து புன்னகையுடன் “ஆம் தங்கையே. ஒருநாள் இவை முற்றாக உருகி மறையும். ஒரு சிறுதடம் கூட இங்கு எஞ்சாது” என்றார் நீலன். - 83

கலைந்துவிடுமென்ற அச்சமே கனவை பேரழகு கொண்டதாக ஆக்குகிறது”


மிக முக்கிய வாரியாக நான் கருதியது கீதைக்கான பீடிகை

“பின்பொருமுறை எண்ணினேன். இப்பெருமுரண்பாட்டை என்றேனும் அவர் விளக்கக்கூடும். இனிய அழகிய நூல் ஒன்று அவர் குரலால் இந்த மண்ணில் எழக்கூடும். தலைமுறைகள் குமிழியிட்டு மறையும் முடிவற்ற மானுடப் பெருக்கு ஒவ்வொருநாளும் அதைக்கற்று அப்பெருவினாவின் முன் சித்தம் திகைத்து பின் அதைக் கடந்து இங்குள்ள யாவற்றையும் சமைக்கும் அங்குள்ள ஒன்றின் புன்னகையை அறியக்கூடும்"


தொடர்ந்து காண்டீபம் தொடங்கியிருக்கிறேன். வாழ்நாள் முழுமைக்கும் உடனிருக்கும் பெருங்காப்பியமான வெண்முரசை அளித்த ஆசானுக்கு அன்பும் நன்றியும்.

 

Comments

Popular posts from this blog

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.   குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர்.  இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின்  கல்வெட்டுகளும்,  மூவர் பாடல் குறிப்புகளும். ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும். பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது.  சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள்.  யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"...

கொட்டுக்காளி - Subtlety 🤍

இன்று மாலை கொட்டுக்காளி படம் பார்த்தேன். அதனை பற்றிய ரசனைக்குறிப்பு. வெகு நாட்களுக்குப்பின் ஒரு முழு தமிழ் படம் பார்த்த உணர்வு. சமீபத்தில் பார்த்த ஏறத்தாழ அனைத்து தமிழ் படங்களிலும் துப்பாக்கி குண்டுகள் முழங்கியவண்ணம் இருந்தன. சண்டைக்காட்சிகளின் மொத்த தொகுப்பாகவும் இடைச்செருகலாக சிறு வசனங்களாகவும் இருந்தன. கொட்டுக்காளி உண்மையில் பாலமலைக்கு ஷேர் ஆட்டோவில் நானும் நெருக்கி பிடித்துக்கொண்டு சென்று வந்த உணர்வை கொடுத்தது. ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால்  பல அடுக்குகள் கொண்ட உண்மைக்கு மிக நெருக்கமான சினிமா,  கொட்டுக்காளி . பின்னணி இசை இல்லை என்பது படத்தின் இன்னொரு தனித்துவம். அந்த இடைவெளியை இயற்கையின் சப்தத்தையும், நிசப்தத்தையும் கொண்டு நிரப்பியிருக்கிறார்கள். ஒரு பேட்டியில் படத்தொகுப்பாளர் கதை ஒரே நாளில் நடப்பதால் வெயிலின் தொனி(tone) ஒன்றாக இருப்பதற்காக மெனக்கெட்டோம் என்று சொல்லியிருந்தார். ஒவ்வொரு காட்சியின் ஒளிக்கலவையிலும் ஒவ்வொரு புல்லின் அசைவில் வரும் ஒலியிலும் மெனக்கெடல் தெரிந்தது.   முதல் காட்சியில் மீனாவிற்கு வைக்கப்படும் திருநீறு நெற்றிப்பொட்டிற்கு நேராக அல்லாம...