அசோகமித்திரனின் ஆகாயத்தாமரை நாவல் வாசிப்பனுபவம். 2 3 வாரங்களாக மிக மெல்ல, அல்லது நகராது இருந்த வாசிப்பை மீட்டெடுக்க சரளமான easy read ஏதேனும் தேடிக்கொண்டிருந்தபோது புத்தக கண்காட்சியில் வாங்கிய ஆகாயத்தாமரை நாவல் கண்ணில் பட்டது. வாழ்விலே ஒருமுறை தொகுப்பு, தண்ணீர் நாவல், மற்றும் சில அசோகமித்திரனின் படைப்புக்களை வாசித்திருக்கிறேன். எளிமையான அதே நேரம் திடமான, முடித்து விட்டு நாம் தனியாக அமர்ந்து சிந்திக்க பல துளிகளை வழங்கும் எழுத்து அசோகமித்திரனுடையது. பகடியும் அங்கதமும் இரு இறகுகளாக கொண்டு பறப்பவர். ஒரு சிறுகதையில் நெற்றி நிறைய திருநீறுடன் நடந்து வந்தார். எங்கே குப்புற விழுந்து விடுவாரோ என்று பயமாக இருந்தது என்கிறார். அந்த ஒரு வரியை கொண்டே நாளை கடத்திவிடமுடியும். அன்றைக்கான எல்லா சத்துக்களும் அந்த ஒரு வரியில் உள்ளன. நான் இலக்கிய வாசிப்பை இரண்டு வகையாக பிரித்துக்கொள்வேன் எனக்கு புரிதலுக்காக. முதல் வகை கற்பனையில் எட்ட முடியாத தூரத்திற்கு கதையையும் மாந்தர்களை சிருஷ்டித்து கதை சொல்வது. வெண்முரசு கொற்றவை போன்ற பெருங்காவியங்கள் உதாரணம் . முழுவதுமாக நம்மை ஒப்புக்கொடுப...