அசோகமித்திரனின் ஆகாயத்தாமரை நாவல் வாசிப்பனுபவம்.
2 3 வாரங்களாக மிக மெல்ல, அல்லது நகராது இருந்த வாசிப்பை மீட்டெடுக்க சரளமான easy read ஏதேனும் தேடிக்கொண்டிருந்தபோது புத்தக கண்காட்சியில் வாங்கிய ஆகாயத்தாமரை நாவல் கண்ணில் பட்டது.
வாழ்விலே ஒருமுறை தொகுப்பு, தண்ணீர் நாவல், மற்றும் சில அசோகமித்திரனின் படைப்புக்களை வாசித்திருக்கிறேன். எளிமையான அதே நேரம் திடமான, முடித்து விட்டு நாம் தனியாக அமர்ந்து சிந்திக்க பல துளிகளை வழங்கும் எழுத்து அசோகமித்திரனுடையது.
பகடியும் அங்கதமும் இரு இறகுகளாக கொண்டு பறப்பவர். ஒரு சிறுகதையில் நெற்றி நிறைய திருநீறுடன் நடந்து வந்தார். எங்கே குப்புற விழுந்து விடுவாரோ என்று பயமாக இருந்தது என்கிறார். அந்த ஒரு வரியை கொண்டே நாளை கடத்திவிடமுடியும். அன்றைக்கான எல்லா சத்துக்களும் அந்த ஒரு வரியில் உள்ளன.
நான் இலக்கிய வாசிப்பை இரண்டு வகையாக பிரித்துக்கொள்வேன் எனக்கு புரிதலுக்காக. முதல் வகை கற்பனையில் எட்ட முடியாத தூரத்திற்கு கதையையும் மாந்தர்களை சிருஷ்டித்து கதை சொல்வது. வெண்முரசு கொற்றவை போன்ற பெருங்காவியங்கள் உதாரணம். முழுவதுமாக நம்மை ஒப்புக்கொடுப்பவை. இரண்டாம் வகை அதிகமும் நமக்கு அணுக்கமான நிகழ்வுகள், இடங்கள், மனிதர்களை கொண்டு கதை சொல்வது. சற்று பொறுத்தால் கதை மாந்தர்களை சந்தித்து கை குலுக்க முடியும்.
அசோகமித்திரன் படைப்புலகம் என் வசிப்பிற்கெட்டியவரையில் இரண்டாம் வகை. அவர் காண்பித்த சென்னை இன்றும் காண கிடைக்கிறது. புலி கலைஞன் இன்றும் ஏதோ ஒரு சினிமா அலுவலகத்தில் வாய்ப்பு கேட்டு வந்துகொண்டு தான் இருப்பான்.
ஆகாயத்தாமரை என்ற தாவரம் தான் படிமம். வேலை பார்க்கும் இடத்திலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு ஒரு ஓவிய கண்காட்சியில் உதவியாளராக பங்கேற்று அதற்கென்று ஒரு ஊதியம் பெற்று கொள்கிறான் ரகு. அதன் பொருட்டு இடைநீக்கம் செய்யப்படுகிறான். மீண்டும் பணியில் சேர்வதற்குள் அவனை சுற்றியும் அவனுக்குள்ளும் நடக்கும் நிகழ்வுகள், அலைக்கழிப்புகள், கொந்தளிப்புகள் தான் நாவல்.
ரகுவுக்கும் அவன் அன்னைக்கும் நடக்கும் உரையாடல்கள் பல முறை நாம் நமது அன்னையுடன் நடத்தியதாக இருக்கும். பாலகிருஷ்ணனை போன்று அசரீரியான மனிதர்கள் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இருப்பர்.
ராஜப்பா ரகு மற்றும் மாலதியை சந்திக்கும் அந்த சிறு பொழுது மட்டுமே சுதந்திரமாக இருக்க முடிகிறது. அந்த சுதந்திரமான விசிராந்தையான வாழ்வு ரகுவிற்கு மீண்டும் பணியில் சேர்ந்த பின் அமைகிறது. அசோகமித்திரன் காட்டும் மனிதர்கள் அனைவரும் நாம் எங்கோ சந்தித்த முகங்களாக இருக்கின்றனர். நேற்று கூட ராஜாப்பாவை போன்ற ஒருவரை கடந்து வந்திருப்போம். ஆனால் பார்க்க தவற விட்ட அவரது பக்கங்களை அறிமுகம் செய்வதாக கதையோட்டம் இருக்கும்.
ஒரு மேகம் கடந்து போவது போன்றதொரு வாசிப்பு ஆகாயத்தாமரை. தண்ணீர், கரைந்த நிழல்கள் அளவிற்கு கவனம் பெறாத ஆகாயத்தாமரை நிச்சயம் வாசிக்கவேண்டிய நாவல்.
Comments
Post a Comment