நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை - ஒரு பேரன்புக்காரனின் பூங்கொத்து ! பவா செல்லதுரை சமீபத்திய கலை இலக்கிய வட்டாரத்தில் பெரிதும் புழங்கும் பெயர். பெருங்கதையாடல் என்னும் கதை சொல்லும் வடிவத்தை என் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியவர். ஜெயமோகனின் யானை டாக்டர், வெள்ளையானை, S ராமகிருஷ்ணனின் இடக்கை, இமையத்தின் செல்லாத பணம், சமீபத்தில் நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானை, செந்தில் ஜெகநாதனின் நித்தியமானவன் என்று பல நாவல்களை கதையாக சொல்லி பெரும் வாசகபரப்பிற்கு கொண்டு சேர்த்திருக்கிறார். சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய அவரது நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை என்ற சிறுகதை தொகுப்பினை குறித்த வாசிப்பனுபவம். முதலில் பவாவின் கதைகள் அறிமுகம் செய்வது பெரும் பாறைகளாலும் கட்டாந்தரைகளாலும் ஆன மலைப்பிரதேசத்தை. எங்கும் பச்சையம் நிறைந்த காவிரிக்கரையில் வாழும் எனக்கு பாறை முடுக்குகளும், பழங்குடியின மக்களும், நள்ளிரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஜெபங்களும் நான் கண்டிராத கதைக்களம். முகம் - ஒரு திருமணமும் அதில் ஒவ்வொரு முகத்திலும் காணும் உணர்ச்சி கொப்பளிப்புகளும் திருமண ஆல...