நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை - ஒரு பேரன்புக்காரனின் பூங்கொத்து !
சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய அவரது நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை என்ற சிறுகதை தொகுப்பினை குறித்த வாசிப்பனுபவம்.
முதலில் பவாவின் கதைகள் அறிமுகம் செய்வது பெரும் பாறைகளாலும் கட்டாந்தரைகளாலும் ஆன மலைப்பிரதேசத்தை. எங்கும் பச்சையம் நிறைந்த காவிரிக்கரையில் வாழும் எனக்கு பாறை முடுக்குகளும், பழங்குடியின மக்களும், நள்ளிரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஜெபங்களும் நான் கண்டிராத கதைக்களம்.
முகம் - ஒரு திருமணமும் அதில் ஒவ்வொரு முகத்திலும் காணும் உணர்ச்சி கொப்பளிப்புகளும் திருமண ஆல்பம் வரும்போது முற்றிலும் வேறு உச்சத்திற்கு சென்றுவிடுகின்றன. மழலை முகமும் அதன் கள்ளமற்ற தன்மையும் என்றும் கறைபடாதிருக்கிறது.
வேறு வேறு மனிதர்கள் - ஜேக்கப் சார் உம் அவரது கையறு நிலையும் கர்த்தரை தவிர வேறு எந்த ஒரு ஜீவனிடமும் பற்றற்று போன அவர் மனைவியின் வலியும்.
மண்டித்தெரு பரோட்டா சால்னா - முதல் முறையாக தந்தையிடம் சொல் உதிர்க்கும் தனையனின் குரல்.
நடுத்தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கையில் "டேய் ஈஸ்வரா ஓட்றா ஓட்றா நாலு ஸ்டிராங் டீ" என்று ஒரு குரல் வந்துவிடுமோ என்ற பதட்டத்தில் ஒரு வாத்தியார் வாழ்ந்து கொண்டிருப்பதில் அதிகபட்ச காயம் உனக்கு இன்னும் கூட புரிபடவில்லை என்பது பெரிய துயரம் தான்.
ஏழுமலை ஜமா - கலைஞன் அமரத்துவம் அடையும் ஒரு உட்ச தருணம், இந்த கதை. டோஸ்டோயேவ்ஸ்க்கியின் எந்த ஒரு கதைக்கும் நிகராக வைக்கக் கூடிய மகத்தான கதை.
சிங்கார குளம் - தன்னை அறியாமலே பிஞ்சு கரங்களில் புரட்சி வெடிக்கும் தருணம்.
வேட்டை - தானும் இயற்கையும் என்றல்லாமல், இயற்கையின் ஒரு துளியே தானும் என்று ஏற்றுக்கொள்ளும் வேட்டைக்காரனின் கதை.
பச்சை இருளன் - மரகத லிங்கத்தின் வெளிச்சமும் இருளனின் திரட்சியும்.
ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் - நினைவோடையில் நீந்தும் மனிதனை குறித்த மாயாஜால யதார்த்தவாத கதை.
சத்ரு - ஒரு வயிற்றை ஊரே சேர்ந்து குளிர்விக்க, அதை பார்த்த மாரியாத்தா மொத்த ஊரையும் குளிர்விக்கிறாள்.
நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை - தேவன் பிறப்பு கருவுற்ற அன்னைக்கு நற்செய்தி அறிவிக்கும் தருணம் 💙
இந்த 11 கதைகளையும் படித்து முடிக்கையில் ஒரு புத்துயிர்ப்பு தருணம் போல் தோன்றும். இந்த சமூகத்தை குறித்து நாம் புரிந்து வைத்துள்ள அத்தனை புரிதல்களையும் கலைத்து போடும். தி ஜா, ஜி நாகராஜன், கி ரா, வண்ணதாசன் என்ற மாமேதைகளின் வரிசையில் பவா தனக்கான இருக்கையை உறுதிசெய்திருக்கிறார்.
Comments
Post a Comment