Skip to main content

ஆடு ஜீவிதம் - நாவல் வாசிப்பனுபவம்

வேலை நிமித்தமாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் புலம் பெயர் தொழிலாளி ஒருவரின் வாழ்க்கையை சற்றும் புனைவில்லாமல் கூறும் வாழ்க்கை வரலாற்று நூல். 2009ம் ஆண்டு மலையாளத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்.




குடும்ப வறுமை காரணமாக 1992ம் ஆண்டு பல்லாயிரம் கனவுகளோடு சவுதிக்கு செல்லும் நஜீப் தான் கனவில் கண்ட எந்த ஒரு குணாதிசயமும் அல்லாத ஒரு வெற்று பாலை நிலத்தின் நடுவில் ஆட்டுப்பட்டியில்(மஸாரா) ஆடுமேய்க்க விதிக்கப் படுகிறார்.

கர்ப்பமுற்ற தன் மனைவியையும், உப்பா, உம்மாவையும் தனியாக விட்டுவிட்டு பிறக்கவிருக்கும் தன் மகன்/மகளுக்கு நல்லதொரு எதிர்காலத்திற்காக வெளிநாடு செல்ல முடிவு செய்கிறார் நஜீப். மலபார் மண்ணில் அன்றாடம் நீரை சுவாசித்தது மணல் அள்ளும் வேலையை செய்யும் நஜீப்பிற்கு குளிப்பதற்கும் இதர அன்றாட தேவைகளுக்கும் கூட சிறிதளவு நீர் தர மறுக்கும் அர்பாபிடம் மூன்று ஆண்டுகள் சிக்கி அவர் படும் இன்னல்களும் அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதும் தான் முழு நாவல்.

காலை கடனை முடித்து சுத்திக்காக ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீரை சிறிதளவு எடுத்த நஜீப்பிற்கு முதன் முதலாக அர்பாபிடமிருந்து முதுகை பிளக்கும் படியான அடி விழுகிறது. அன்று தொடங்கி வாழ்க்கை நஜீபை வதையின் அத்தனை விளிம்புகளுக்கும் இட்டுச்செல்கிறது.

காலையில் ஒரு குவளை ஆட்டுப்பால், அதுவும் அர்பாப் குடித்து முடித்து மீதம் வைத்தது, பின் நீரில் நனைத்த இரண்டு குபூஸ்கள் இரவிற்கு மீண்டும் இரண்டு குபூஸும் ஒரு குவளை நீரும் என்று ஆட்டின் வாழ்க்கை போல அன்றாடம் கடந்து செல்கிறது. அவ்வப்போது புல் மற்றும் கோதுமை தானியத்தை இறக்கிவிட்டு செல்லும் பாகிஸ்தானிய பட்டான் ஒருவரை தவிர எந்த ஒரு மனித வாடையும் இல்லாமல் நாட்கள் கடக்கின்றன நஜீப்பிற்கு. 

பகலில் தகிக்கும் பாலைவனம், இரவில் நடுங்கும் குளிருடன் ஒவ்வொரு நாளும் வலிகள் பீடித்த வாழ்க்கையே நஜீபினது. உடன் பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடுகளுக்கு ஊரில் தான் கண்ட மனிதர்களின் பெயர்களான நபீல், அராவு ராவுத்தர், போச்சக்காரி ரமணி, மேரிமைமுனா, இண்டி பொக்கர், நண்டு ராகவன், பாரிப்பூ விஜயன், சக்கி, அம்மிணி, கௌசு, ரௌபாத் என்று ஒவ்வொரு பெயர்களாக வைத்து அவற்றுடன் வாழ பழகிக்கொள்கிறார். அவற்றை போல தனதும் ஒரு ஆட்டின் வாழ்க்கை தான், ஆர்பாபின் ஆணைகளை நிறைவேற்றுதலன்றி தன்னால் இயன்றது ஏதுமில்லை என்ற எண்ணத்தை அடைகிறார்.

அல்லாவின் கருணையால் அங்கிருந்து தப்புவதாக முடிவு செய்து, இப்ராஹிம் காதிரியின் துணையுடன் மூன்று நாட்கள் பாலை மணலில் ஓட்டம் பிடித்து விஷ பாம்புகள், பல்லிகள் என்று பல கொடுக்குகளிடமிருந்து தப்பித்து, நெடுஞ்சாலையை அடைந்து குஞ்சிக்கா துணையுடன் தாய் நாடு அடைகிறார்.

சில மக்களின் வாழ்க்கையை அறியும்போது தான் நமக்கு எத்தனை ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை விதிக்கப் பட்டிருக்கிறது என்னும் புரிதல் வருகிறது. நஜீபின் கதை அத்தகையது. இன்றும் லட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர் தொழிலாளிகளாக தன் தாய் நிலத்திலிருந்து அலைக்கழிக்கப்படும் எண்ணற்ற மனிதர்களுடன் என் எண்ணங்கள் நிலைத்திருப்பதாக.

இந்நாவலின் மையச்சரடாக என்னை கட்டிவைத்தது எதையேனும் பிடித்துக்கொண்டிருத்தல். கடவுள், இயற்கை என்று எதையேனும். ஒவ்வொரு முறை சிறு ஒளிக்கீற்று அகப்படும்போதெல்லாம் அது அல்லாவின் கருணை என்கிறார் நஜீப். ஒவ்வொரு தண்டனைக்கும் இது அல்லா நம் மீது கோபமாக இருப்பதென்கிறார். முதல் முறையாக குட்டையையும் பேரிச்சம் மரங்களையும் கண்டபோது இது அல்லா தன்மீது கொண்ட பிரியத்தினது என்கிறார். உங்களுக்கும் நான் பரிந்துரைப்பது அதையே. எதையேனும் பிடித்துக் கொண்டிருங்கள். இசை இலக்கியம், கடவுள் இயற்கை எதையேனும். அதுவே மீட்சி !!

- மனோ 


Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...