அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல் மழைக்குப்பின் பூதநாதர் கோயில் சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார். நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார். 16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...