சென்ற வாரம் நண்பர்களுடன் திருவாரூர் தேர் பார்க்க சென்று வந்தோம். ஒற்றை வரியில் கண் பெற்ற பயன் அடைந்த தருணம். ஆரூர் கிழக்கு கோபுரம் சனி(28 மார்ச் 2026) காலை மயிலாடுதுறை வந்து நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம். காலை ஆதி கும்பேஸ்வரர் மற்றும் சார்ங்கபாணி கோயிலுக்கு சென்று வந்து மாலை திருவாரூர் புறப்படுவதாக திட்டம். கும்பகோணத்தில் எந்த கோயில் என்று தேர்ந்தெடுப்பதில் பெரிய குழப்பம் problem of plenty. கல்லணைக்கு கீழே தொடங்கி காவிரியின் கழிமுகம் வரை நூற்றுக்கணக்கான கோயில்கள். டெல்டா காவிரி மற்றும் கோயில்களால் நிரம்பிய பகுதி. திருவையாறு தியாகராஜர் ஆராதனையின்போது நண்பர் தினேஷுடன் வண்டியில் சென்றுகொண்டிருந்த போது தஞ்சையில் இருந்து புள்ளமங்கை செல்லும் வழியில் 50 மீட்டருக்குள் மூன்று திவ்யதேசங்கள் கடந்து வந்தோம். இந்திய கோயில் கட்டிடக் கலையில் கோபுரமென்பது தத்துவார்த்தமாக யாக அக்னியின் வடிவமாக கருதப்படுவது. அந்த அக்னியாலும், நுழைவாயில் நிலைக்காலில் வைக்கப் பட்டிருக்கும் கங்கை யமுனை நதிதெய்வங்களாலும் அகம் தூய்மையடைந்து கோயிலுக்குள் நுழைகின்றனர். கல் ஹாரம் வரைக்கும் உள்ள பகுதி வேதிகையா...