சென்ற வாரம் நண்பர்களுடன் திருவாரூர் தேர் பார்க்க சென்று வந்தோம். ஒற்றை வரியில் கண் பெற்ற பயன் அடைந்த தருணம்.
சனி(28 மார்ச் 2026) காலை மயிலாடுதுறை வந்து நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம். காலை ஆதி கும்பேஸ்வரர் மற்றும் சார்ங்கபாணி கோயிலுக்கு சென்று வந்து மாலை திருவாரூர் புறப்படுவதாக திட்டம். கும்பகோணத்தில் எந்த கோயில் என்று தேர்ந்தெடுப்பதில் பெரிய குழப்பம் problem of plenty. கல்லணைக்கு கீழே தொடங்கி காவிரியின் கழிமுகம் வரை நூற்றுக்கணக்கான கோயில்கள். டெல்டா காவிரி மற்றும் கோயில்களால் நிரம்பிய பகுதி. திருவையாறு தியாகராஜர் ஆராதனையின்போது நண்பர் தினேஷுடன் வண்டியில் சென்றுகொண்டிருந்த போது தஞ்சையில் இருந்து புள்ளமங்கை செல்லும் வழியில் 50 மீட்டருக்குள் மூன்று திவ்யதேசங்கள் கடந்து வந்தோம். இந்திய கோயில் கட்டிடக் கலையில் கோபுரமென்பது தத்துவார்த்தமாக யாக அக்னியின் வடிவமாக கருதப்படுவது. அந்த அக்னியாலும், நுழைவாயில் நிலைக்காலில் வைக்கப் பட்டிருக்கும் கங்கை யமுனை நதிதெய்வங்களாலும் அகம் தூய்மையடைந்து கோயிலுக்குள் நுழைகின்றனர். கல் ஹாரம் வரைக்கும் உள்ள பகுதி வேதிகையாகவும் அதன் மீது எழும் சுதை அக்னியாகவும் பாவிக்கப் படுகிறது. அதைக்கொண்டு பார்த்தால் டெல்டா பகுதி மக்கள் அனைவருமே யாக சாலைக்குள் கால் மடக்கி அமர்ந்திருகின்றோம்.
பில்டர் காப்பியின் பிறப்பிடமாக கருதப்படும் ஆதி கும்பேஸ்வரர் கோயில் வாசலில் உள்ள மங்களாம்பிகா விலாஸ் ட்ரம்ப் பாகவதரால் மூடப் பட்டிருந்தது. குளக்கரையில் கோயில் யானை மங்களாம்பிகா வெயிலுக்கு இதமாக குளித்துக்கொண்டிருந்தாள். கரிய பாறையில் அருவி நீர் வழிந்தோடுவது போன்று மத்தகதத்தில் நீரள்ளி விட்டு குளித்துக்கொண்டிருந்தாள். நான்கு பாகன்கள் தேய்த்துவிட்டுகொண்டிருந்தனர்.
கும்பேஸ்வரர் தான் கும்பகோணத்தின் பூர்வ வாசி. 143வது பாடல் பெற்ற காவிரி தென்கரையின் 26வது தலம். பிரம்மனின் அமுத கலசத்தை கிராத மூர்த்தியாகிய சிவன் தகர்த்தெரிந்ததால் அந்த அமுத துளிகள் பொற்றாமரை குளத்திலும்(மதுரை அல்ல கும்பேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள பொற்றாமரை) மகா மக குளத்திலும் சிந்தியதாக தல புராணம் சொல்கிறது. சோழர் காலத்திய மையக் கருவறை. மூலவர் புற்று மண்ணால் ஆனவர். மேலே கவசத்தால் காப்பிட்டு நீராட்டு செய்கின்றனர். நம் பகுதிக்கே உரிய மையக் கட்டுமானங்களில் இருந்தே எந்த மாற்றத்திற்கும் ஆளாகாமல் தப்பித்து வந்திருக்கும் துவார பாலகர்கள் சிற்பம். இருவரும் பாலகர்கள் போன்றே அமைப்புடன் இருந்தனர். தெற்கில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, கிழக்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா மற்றும் துர்க்கை என்ற பஞ்ச கோஷ்டங்கள் அமைந்த கருவறை. சோழர் காலத்திய மிகச் சிறந்த நடராஜர், சிவகாமி திருவுருவங்கள் முகமண்டபத்தில் உள்ளன. விரிசடை இல்லாமல் இருக்கும் உருவம்.
| ஆதி கும்பேஸ்வரர் கோயில் ஆடல்வல்லான் |
தலபுராணத்தை விளக்கும் கிராதமூர்த்தி என்ற பெயர் பலகை இடப்பட்ட திரிபுரந்தகர் சன்னிதி முதல் சுற்றில் அமைந்துள்ளது. தாராசுரத்தில் உள்ளது போன்ற மின்னும் கருமை கொண்ட சிலை. முப்புரம் எரித்த புன் சிரிப்போடு ஈசன் முன்னிரு கரங்களில் வில் அம்பு ஏந்தி பின்னிரு கரங்களில் மான் மழு தாரியாக விளங்குகிறார். பைரவர் மற்றும் அட்சமாலை ஏந்திய தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. அறுபத்து மூவர் செப்பு படிமங்களுள் உள்ள நடராஜர் மற்றும் அதிகார நந்தி படிமங்கள் சிறப்பாக இருந்தன.
| ஆதி கும்பேஸ்வரர் கோயில் கிராத மூர்த்தி |
மங்காளாம்பிகா சன்னிதி பிற்காலத்தில் எழுப்பப் பட்டுள்ளது. ஏதோவொரு நான்கு எழுத்து initial கொண்ட செட்டியார் கைங்கர்யத்தால் மின் விளக்குகள் மின்னும் பள்ளியறை மங்களாம்பிகா சந்நிதிக்கு வடக்கே அமைந்துள்ளது. கொடிமரத்திற்கு அருகில் விதானத்தில் ராசிச்சக்கரமும் 27 நட்சத்திரங்களும் புடைப்பு சிற்பமாக அமைக்கப்பட்டிருந்தன.
கும்பேஸ்வரரை தொடர்ந்து சார்ங்கபாணியை(சாரங்கம் அல்ல சார்ங்கம் தான்) பார்க்க சென்றோம். ராமநவமியை ஒட்டி தாயார் புறப்பாடு கண்டருளிய நேரம் நாங்கள் சென்றிருந்தோம். பல்லக்கில் தாயார் கொடிமரத்திற்கருகில் நின்றிருக்க கோஷ்டி பிரபந்தம் சொல்லிக்கொண்டிருந்தனர்.
| சார்ங்கபாணி ராஜகோபுரம் |
குடந்தை கிடந்த மாமாயன் (பனை உறை தெய்வம் தொகுப்பில்) என்ற குடவாயிலின் கட்டுரை சார்ங்கபாணியை குறித்த சிறந்த அறிமுகம். இடம் பெயர்ந்து எழுந்த கோபுரங்கள் என்ற தலைப்பில் கோபுரக் கலை மரபு புத்தகத்திலும் சார்ங்கபாணி கோயிலின் ராஜகோபுரம் மற்றும் இங்குள்ள முருகனின் கரண சிற்பங்கள் குறித்து எழுதியுள்ளார். கோபுரத்து வாசலில் உள்ள வாள் ஏந்திய இரண்டு துவாரபாலகர் மற்றும் கரணசிற்பங்கள் அருகில் உள்ள சோமேஸ்வரர் கோயிலில் இருந்து இங்கு இடம்பெயர்ந்து எழுந்திருக்கலாம் என்கிறார். சோழர் கால மையக் கட்டுமானம் தஞ்சை நாயக்கர் காலத்தில் விரிவு படுத்தப்பட்டுள்ளது. மேலக் கடம்பூர் போன்ற சக்கர வடிவில் ஆன கரக்கோயில். மூலவர் கிடந்தகோலம். சென்ற வாரம் தான் தமிழகத்தின் மிகப் பெரிய தேர்களில் ஒன்றான சார்ங்கபாணி கோயிலின் தேர் திருவிழா முடிந்திருந்தது. முதலாழ்வார்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்காளாசாசனம் செய்த தலம். திருவரங்கத்திற்கும் திருமலைக்கும் அடுத்து அதிக ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பட்ட திவ்யதேசம். உத்ராயணம் வாசல் வழியாக மேலே சென்று கிடந்த கோலத்தில் இருந்த மூலவரையும் வில்லுடன் நின்றிருக்கும் சார்ங்கபாணியையும் தரிசித்தோம். இருபுறமும் தேவியர் அமர்ந்த நிலையில் அஞ்சலி ஹஸ்தத்துடன் இருந்தனர். நடந்த கால்கள் நொந்தவோ என்று திருமழிசையாழ்வார் பாசுரத்தை கேட்ட பெருமாள் சற்றே எழுந்த நிலையில் இருப்பதால் உத்தான சயன பெருமாள் என்று அழைக்கப் படுகிறார்.
கோஷ்டத்தில் லிங்கோத்பவரை போன்று தூணில் இருந்து வெளிப்படும் அவதார நரசிம்மர், ஹிரண்ய கசிபுவுடன் போரிடும் யுத்த நரசிம்மர், உடல்கிழிக்கும் சம்ஹார நரசிம்மர், சம்ஹாரம் முடிந்த பின் யோகத்தில் அமர்ந்த யோக நரசிம்மர், பரவசுதேவர், திரிவிக்ரமர், வைகுண்டநாதர், வேணுகோபாலன் சிற்பங்கள் உள்ளன.பாதாள சீனிவாசனை தரிசித்து வலம் வந்து முடித்தோம்.
| சார்ங்கபாணி கோயில் கோஷ்ட சிற்பம் |
மாலை திருவாரூர் பயணம். 1300 ஆண்டுகளுக்கு முன் ஏறத்தாழ இதே நாளில் அப்பர் ஆரூரனை பாடியிருக்கிறார். “ஆழித்தேர் வித்தகனை நான் கண்டதாரூரே” என்று. ஆரூரன் முதல் முறை அடியேனுக்கு தரிசனம் வழங்கியதே சென்ற திருவாதிரை பாத தரிசனத்தின்போது தான். ஒவ்வொரு சன்னிதியாக ஓடி ஓடி தரிசித்தது நினைவில் உள்ளது. வழிபாட்டில் உள்ள ஒவ்வொரு ஐம்பொன்னும் அந்த சிற்பியின் உட்சபட்ச சாத்தியமாக இருக்கும். பின்னர் சென்ற மாதம் சிவனிரவின் அடுத்த நாள். அன்று சாயரட்சையின் போது உள்ளூர் அக்கா ஒருவர் தேருக்கு வாங்க அதும் முதல் நாளே வந்துருங்க தியாகராஜர் அஜபா தாண்டவமாடி போவாரு, கைலாயமே அதிரும் என்றாள் அவள் வாக்கு பலித்தது.
மார்ச் 29 தேர் என்று தெரிந்தநாளே பயணச்சீட்டுகள் பதிவு செய்துவிட்டோம். தமிழகத்தின் கோயில்கள் அனைத்தையும் விட நீண்ட பிரம்மோற்சவம் கொண்டது ஆரூர். தைபூசத்தன்று பந்தக்கால் நடப் படுகிறது. மாசி ஹஸ்தத்தில் மகாதுவஜாரோஹனம் பங்குனி ஆயில்யத்தில் தேர் என்பது மரபு. அதற்கு முன்பே ஊர் பிடாரியம்மனுக்கு திருவிழா 10 நாட்கள், அய்யனார் உற்சவம் 5 நாட்கள், அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புறப்பாடு விநாயகர், முருகர் தொடங்கி, காட்சி கொடுத்தார், பைரவர் என்று ஒவ்வொரு நாளும் புறப்பாடு. சிவன் ராத்திரி அன்று தில்லையில் ஆடலரசனை தரிசித்துவிட்டு திங்களன்று சாயரட்சிக்கு ஆருரனை காண வந்திருந்தோம். அன்று பிடாரியம்மன் உற்சவம் முடிந்து அய்யனார் புறப்பாடு நடந்துகொண்டிருந்தது.
தியாகராஜர் வசந்த விழா காணும்பொருட்டு நடத்தப் படுவதே இந்த உற்சவம். முத்துசுவாமி தீக்ஷிதர் ஸ்ரீ ராகத்தில் அமைந்த மகாத்வஜாரோஹணம் என்றொரு பெரிய கீர்த்தனை பாடியிருக்கிறார். வசந்த விழாவின் அத்தனை நிகழ்வுகளும் அதில் ஆவணப் படுத்தப் பட்டுள்ளன. திருவொற்றியூரில் இருக்கும் சுந்தரர் வசந்த காற்று வீசியவுடன் ஆரூரில் இப்போது வசந்த விழா காணவேண்டுமே என்றெண்ணி சங்கிலியாருக்கு கொடுத்த சத்தியத்தையும் மீறி திருவொற்றியூர் கடந்தபோது கண்பார்வை இழக்கிறார். பின் கச்சி ஏகம்பனிடம் இடது கண் பார்வையும் ஆரூர் அடைந்தவுடன் வலது கண் பார்வையும் பெறுகிறார்.
மகாதுவாஜாரோகனம் முடிந்தபின் தியாகராஜர் சன்னிதியில் ஆச்சாரியர்கள், ஆதீனங்கள், கோயில் முக்கியஸ்தர்கள் கூடியிருக்க, “நம்மணுக்கும் நமது வன்தொண்டனான ஆலால சுந்தரனுக்கும்” என்று தொடங்கி அடிமுடி தேடிய வீதிகளில் ஆழித்தேர் நடக்கவிருப்பதால் “சகல புவனத்து அடியார்களும் தங்களது பரிசின்னங்களுடன் திருவாரூருக்கு வரவும் இது தியாகராஜ மகாராஜா ஆக்ஞை” என்று தியாகராஜர் தன்னிலையில் இருந்து ஒரு ஆணை பிறப்பிப்பார். உயிர்கள் அனைத்தும் ஆணை என்று வணங்கி புறப்படுகின்றன.
| ஆரூர் மேற்கு கோபுரம் |
அந்த ஆணை சண்டேசருக்கு சென்று அவரில் இருந்து எல்லாருக்கும் செல்லும். கமலாலய குளக்கரையில் நின்று அன்றைய அஸ்தமனம் பார்த்தோம். பிரம்மாண்டமான குளத்தில் நீர் பொன்னுருக்கி ஊற்றியது போன்று மின்னிக்கொண்டிருந்தது. மாலை 6 மணி போல் தேரடியை அடைந்தோம். விநாயகர் முருகர் தேருக்கு பின் ராஜாங்கமாக வீற்றிருந்தது ஆழித்தேர். ஒரு பெருங்கோபுரம் நிற்பது போன்று நின்றிருந்தது. விண்ணவர்கள் ஆரூரனை பார்க்க மண்ணிறங்கி இறங்கி வரும் படி போன்றிருந்தது. தேரின் நிழலில் 500 பேருக்கு மேல் நிற்க முடியும் 500 டன் எடையிருக்கும்.
பாவபக்தி என்பது அறியவியாலத பிரபஞ்ச ஆற்றலை, நமது கைக்குள் அடக்கும் வடிவமாக பாவித்து உபசரித்து பக்தி செலுத்துவது. கடலில் இருந்து அள்ளிய ஒரு கைப்பிடி நீரை கடலாகவே பாவிப்பது. தியாகராஜர் மகாராஜனின் ஸ்தானத்தில் பூஜிக்கப் படுகிறார். ராஜனின் புறப்பாடு என்பது ராஜ்யத்தில் உள்ள அனைத்து பரிசனங்களும் சேர்ந்து செய்யவேண்டிய ஒன்று. தேருக்கு முன் வெள்ளை பருத்தி துணி நீண்டிருந்தது. தியாகராஜரின் சந்நிதியில் இருந்து பெரியகொடிமரம் வழியாக வந்து யாகசாலையில் தீபாராதனை கண்டருளி ராஜநாராயணன் மண்டபத்தை சுற்றிக்கொண்டு வெளியேறி, தேவாசிரியன் மண்டபத்திற்கு அருகில் அணுக்கண் வாயில் வழியாக கல்தேரை சுற்றிக்கொண்டு கிழக்கு வாயில் முன் வந்து நேராக தேருக்கு செல்லும் வழி வரையில் வெண் பருத்தி விதானம் விரிக்கப் பட்டிருந்தது. முன்னாளில் இருந்து பட்டாக இருந்து இப்போது பருத்தி விரிக்கப் படுகிறது.
| கமலாலய குளம் |
தியாகராஜர் வெயில் படாத திருமேனி. தேருக்கு முதல் நாள் இரவே எழுந்தருளுவார். தேருக்கு ஒருவாரம் முன்பு பட்டோத்சவம், தியாகாரஜரின் பட்டம் ஏற்று சந்திரசேகரர் புறப்பாடு கண்டருளுவார். நாங்கள் அணுக்கன் வாயிலை கடந்து தேவாசிரியன் மண்டபத்தை நெருங்கும்போது சந்திரசேகரர் கைலாய வாகனத்தில் புறப்பாடு தொடங்கி இருந்தது. மற்ற நாட்களை காட்டிலும் இன்று விரைவாக புறப்பாடு முடியும். இங்கு சுவாமி யோக மூர்த்தியாக இருப்பதால் பஞ்ச மூர்த்தி புறப்பாடு என்பது விநாயகர் முருகர் சந்திரசேகரர் சண்டீசர் நான்கு மூர்த்திகள் மட்டும் தான். இன்று மூர்த்திகள் நான்கு வீதிகளில் வலம் வந்து முடித்த பின் தியாகராஜர் புறப்பாடு தொடங்கும்.
இங்குள்ள ஆதி சண்டீசர் மழு ஏந்துவதற்கு முன்னுள்ள கோலம். சண்டீச பக்தி என்றால் என்ன என்பது இந்த திருமேனியை கண்டால் புரியும். அத்தனை குழைவு இளகிய தோள்கள் அஞ்சலி ஹஸ்தமாக இருக்கும் இந்த சண்டீசர் எல்லா நாளும் புறப்பாடு உண்டு. அவர் தான் உற்சவத்தை முன்னின்று நடத்துபவர்.
தியாகராஜருக்கு இரண்டு வாள் உண்டு வீரகட்கம், ஞானகட்கம். மாலை தேருக்கு தியாகராஜர் புறப்படும் அன்று காலையே வீரகட்கம் தனியாக புறப்பாடு செய்விக்கப் பட்டு தேரில் எழுந்தருள்விக்கப் படும். தெய்வத்தின் ஆயுதம் அங்கு வந்துவிட்டால் இடம் அப்போதே புனிதப் படுகிறது. கோயிலின் நான்கு கோபுரங்களும் ஈசனின் நான்கு முகங்களாக பாவிக்கப் படுவதால் புறப்பாடு கண்டருளும் திருமேனிகள் கிழக்கு வாயில் அருகில் உள்ள அணுக்கன் வாயில் வழியாகத் தான் வெளி வருவர். திருவாரூர் மண்ணை அடைந்துவிட்ட அனைவருமே சிவ பூதகணங்கள் என்பதால் தியாகராஜருக்கு மலர் சொரியும் உரிமை அனைவருக்கும் உண்டு. திருவாரூரில் அனைத்துமே பிரம்மாண்டம் தான், மகா துவஜாரோஹணம், ஆழித்தேர், மகா யாகசாலை பிரம்மாண்ட கமலாலய குளம் என்று. மகா யாகசாலைக்கு முன் இடம் பிடித்து அமர்ந்து கொண்டோம். அடியார்கள் பலர் மூட்டை மூட்டையாக பூக்களை கொண்டுவந்து அனைவரின் கைகளிலும் திணித்துக்கொண்டிருந்தனர். அப்பர்
அருமணித்தடம் பூண்முலை
அரம்பையரொ டருளிப்பாடியர்
உரிமையிற் றொழுவார்
உருத்திர பல்கணத்தார்
விரிசடைவிர திகளந்தணர்
சைவர்பாசுப தர்கபாலிகள்
தெருவினிற் பொலியுந்
திருவாரூ ரம்மானே. 4.020
என்ற பதிகத்தில் திருவாரூரில் உரிமையில் தொழுவார், உருத்திரர், மாவிரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், காபாலிகர் ஆகியோர் உள்ளனர் என்கிறார். அதனை அடியவர்களும் ராஜனின் ஆணைக்கிணங்க வந்து கூடியிருந்தனர்.
தியாகராஜர் ரஹஸ்ய மூர்த்தி. பாத தரிசனம் உத்ராயணத்தில் ஒன்றும் தட்சிணாயணத்தில் ஒன்றுமாக இரண்டு முறை மட்டுமே. மற்ற நாட்களில் திருமுகத்தையும் கொண்டியம்மையின் திருமுகத்தை மட்டுமே பார்க்க முடியும். ரஹஸ்ய மூர்த்திக்கான அலங்காரம் நயினார்களுக்கு மட்டுமே உரியது. யோகபீடத்தில் அமர்ந்துள்ள தியாகரை பிள்ளை தண்டில் வைத்து காட்டும் ரஹஸ்யம் ஸ்ரீபாதம் தாங்கிகளுக்கானது.
அல்லியங்கோதை சன்னிதி முன் மண்டபத்தில் கமலாம்பாள், நீலோத்பலாம்பாள் உற்சவர் முழு அலங்காரத்தில் காத்திருந்தனர். தாள வாத்தியங்களில் உடுக்கை, இடக்கை, முழா, சுத்த மத்தளம், தவில், தாளம், சிலம்பு முழங்க காற்று வாத்தியங்களில் எக்காளம், கொக்கரை, கொம்பு,தாரை, திருச்சின்னம், வெண்சங்கு, நாகஸ்வரம் கருவிகள் ஒலிக்க, இந்திராதி அஷ்டதிக் பாலகர்களின் கொடி சின்னங்கள், ரிஷபக்கொடி, ரிஷபதண்டம், கவரி என்ற பரிசின்னங்கள் எல்லாம் ஆயத்த நிலையில் இருந்தன. சந்திரசேகரர் உலா முடிந்து முதல் பிரகாரத்திற்குள் பிரவேசித்தபின் எந்நேரமும் தியாகராஜரர் புறப்பாடு ஆகலாம் என்று செவ்வந்தி, மரிக்கொழுந்து, முல்லை, மல்லி, செவ்வரளி என்று பூக்களை கையில் வைத்துக்கொண்டு காத்திருந்தனர். கைலாய வாத்திய குழுக்களே 50ம் மேல் இருக்கும் பிரம்மாண்டமான ஆரூர் கோயில் வளாகம் முழுவதும் திருமுறையும், வேதமும், நாதமும், இசையும், இனிய மலர்களின் மனமும் என்று ஒரு பித்த நிலை நிலவியது.
வெண்முரசில் படித்த அத்தனை அரசர் அவை நுழைவும் இங்கு கண் முன் நிகழ்ந்து கொண்டிருந்தது. அலை வந்து கறை தழுவுவது போல அரூரா தியாகேசா என்று அவ்வப்போது கோஷங்கள் ஒலித்தடங்கும். தீவெட்டி கொளுத்தும் உரிமையுடைய குழுவினர் அல்லியங்கோதை சந்நிதிக்கருகில் கொளுத்திய பந்தங்களுடன் நின்றிருந்தனர். அடுக்கு பந்தங்கள் பலவும், தியாகராஜருக்கு மேல் பிடிக்கும் விதானமுமாக ஒரு அடியார் கூட்டம் மைலாப்பூரில் இருந்து வந்திருந்தனர். இறுதியாக 10 மணி போல் தியாகேசரை சுமந்து வரும் தண்டு வெளியில் தெரிய தொடங்கியது. “ஐராவனம் ஏறாது ஆனேர் ஏறி, அமரர் நாடாளதே ஆரூர் ஆளவந்த பிரான், தக்கார்க்கு தக்கன கொடுக்கும் பிரானார் யோக மார்க்கத்தின் மிக உயர்ந்த அஜபா தாண்டவமாடி தோன்றினார்”. அப்போது தோன்றிய ஆரூரா தியாகேசா கோஷமும் அங்கெழுந்த உன்மத்த நிலையும் சொல்லுள்ளுள் அடங்காதவை. கண் பெற்ற பயனாக உயிர்கள் அங்கிருந்து தரிசிக்கவேண்டும். கின்னரர்கள், கிம்புருடர்கள், யக்ஷர்கள், தேவர்கள், கோள்கள், நதிகள், ரிஷிகள், பூதங்கள், அசுரர்கள், மாலவன், நான்முகன் முதலான அனைவரும் அங்கு நெருக்கி அடித்து நின்று தங்களால் இயன்ற பூவை தூவி கொண்டாடினர். தியாகராஜருக்கான நாமங்களுள் அடிக்கு ஆயிரம் பொன் அளந்த பிரான் என்றொரு நாமம் உண்டு. அவரது ஒரு அடி அழகிற்கு ஆயிரம் பொற்காசுகள் ஈடாகுமாம்.
தில்லை கூத்தனின் ஆடல் செல்லும் அனைவரும் பார்க்கக் கூடியது. ஆரூர் அமர்ந்த அரசனின் ஆடல் அத்தனை எளிதில் கிட்டுவதல்ல. ஓடி ஓடி சென்று தரிசித்தோம்.
வேதகோஷங்களும், திருமுறை விண்ணப்பிப்பவர்களும் செல்ல, தொடர்ந்து கைலாய வாத்திய குழுக்கள்(ஆம் வாத்தியங்கள் அல்ல வாத்திய குழுக்கள்) முழங்க பலவித அடுக்கு தீப்பந்தங்கள் செல்ல, கொடிபடங்கள் தொடர, இருபுறமும் கவரி வீசியபடி அடியார்கள் வர, செல்லும் வழியெங்கும் மலர்களால் அர்ச்சிக்கப்பட்டு மேலே விதானமும் அதற்குமேல் வெண் பருத்தியும் விரிந்திருக்க ஆழித்தேர் அமர்ந்தான் அரசன்.
தேரில் ஏறியவுடன் தீபாராதனை நடந்து திரையிடப் பட்டது. புதிய மலர்கள் மற்றும் அலங்காரம் முடிந்து 1 மணி நேரத்திற்கு பின் மகா தீபாராதனை நடைபெற்றது. நான்கு வேதங்களும் நான்கு குதிரைகளும் நடுவில் குண்டலினி சக்தியை குறிக்கும் யாளமும் பூட்டப்பட்ட ரததத்தில் நான்முகன் சாரதியாக அமர்ந்த தேரில் திரிபுராந்தக வடிவமாக அரூரார் அமர்ந்திருந்தார். 10 லட்சதிற்குமான மக்கள் குழுமியிருக்க அத்தனை பிரம்மாண்டமான ஆழித்தெரில் பெரியகோயில் விமானத்தின் மீது ஏற்றப்படும் சுடராக தியாகராஜரின் முகம் மட்டும் தெரிந்தது. ஒருவகையில் தேர் மைய பீடத்திற்கு கீழுள்ளவை அதலம் விதலம் சுதலம் தலாதலம் மகாதலம் ரசாதலம் பாதாளம் என்ற ஏழு உலகங்களாகவும் பீடத்திற்கு மேல் உள்ள மூங்கில் கட்டுமானங்கள் பூலோகம், புவர், சுவர், மஹர், ஜனோ, தபோ, சத்யலோகம் என்று லோகங்கலாகாவும் இறையுருவம் இந்த கணத்தில் பூலோகத்தில் தோன்றி காட்சியளப்பதாகவும் தோன்றியது.திரை விலகியதும் தேவரடியார் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் ஒரு கீத்தனையை பாடி அதுக்கு தீபாராதனை எடுத்த நயினார் “ராஜாதி ராஜாய சாஹினே... ... என்று தொடங்கி குபேராய வைஷ்ணவனாய மகாராஜா யனமஹா” என்று முடித்தார். “ஆம், எம் கோ !”
கலை, இலக்கியம், வரலாறு, ஆலயம் சார்ந்து கொஞ்சம் வாசிப்பு வந்தவுடன் வரலாற்று நூல்கள் மற்றும் பக்தி இலக்கியங்கள் என வாசிக்கும் அனைத்திலும் இந்த தெய்வ உருவங்கள் உருவாகி வந்த பரிணாமத்தை தொல் படிமங்களை, அதன் அடியை தேடி மணம் சென்றுகொண்டிருக்கிறது. இந்த திரிபுராந்தக வடிவம் என்றோ ஒருநாள் வில்லேந்தி சென்ற காட்டாளன் கிராதன். தற்போது வெண்முரசில் கிராதம் படித்துகொண்டிருப்பதால் இன்னும் அந்த ஆழம் விரிவடைகிறது. அந்த இறை படிமங்களின் அடி அறியமுடியா ஆழம். ஆனால் அதன் முடி இதோ இப்போது என் கண் முன் தூலமென இருக்கிறது. ஆழ் படிமங்கள்(archetypes) மீது அர்த்தம் ஏற்றி ஏற்றி தியாகராஜன் என்ற சிவனின் உருவகத்தை அதன் உச்சத்திற்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறோம்.
சமீப காலம் வரைக்கும் தேரில் தியாகராஜர் ஏறியவுடன் அவர்முன் தேவரடியார் தேர் மீது ஏறி அபிநயம் பிடித்து அடவு எடுத்து ஆடுவர். அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த மருந்து பிரசாதம் நெய்வேத்யம் செய்ப்பட்டிருந்தது. தற்போது பாடல் மட்டும் என்ற வகையில் சுருங்கிவிட்டது.
1 மணிக்கு திரையடப் பட்டது. அதன் பின் கூட்டம் மெல்ல களைய தொடங்கியது. இதற்கு பின் எல்லாம் சென்று திரும்பி வருவதென்பது இயலாது என்று தெற்கு வாசலுக்கு அருகில் உள்ள மண் திட்டில் படுத்துக்கொண்டோம். கோயில் முழுக்க அடியார்கள் படுத்திருந்தனர். சிறுவயதில் நானும் தங்கையும் பல அமாவாசை இரவுகளில் பாட்டியுடன் சமயபுரத்தில் உறங்கியிருக்கிறோம். அதன் பின் இப்போது தான் கோயிலில் உறங்கினேன்.
| ஆழித்தேரில் தியாகராஜர் ! |
காலை 5 மணிக்கு விநாயகர் முருகர் தேர்கள் புறப்பட்ட சத்தம் கேட்டு விழித்து கிளம்பினோம். மீண்டும் திருவாரூர் அடைய நண்பகல் ஆகி விட்டது. விளமல் தாண்டி எந்த வண்டியும் செல்லவில்லை அங்கிருந்தே நடந்து சென்றோம். தேர் 9 மணிக்கு வடம் பிடிக்கப் பட்டது நாங்கள் சென்றபோது ஆரூரர் அக்னிமூலையில் இருந்தார். தேர் வடம் பிடிக்க தொடங்கும்போது திரிபுராந்தகர் புன்சிரிப்பால் முப்புரம் எரித்ததை குறிக்கும் மூன்று வேட்டுகள் போடுவர்.
ஆழித்தேர் நகரும் பெருங்கோபுரமென அசைந்துவந்தது. தேர் இழுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், ஒவ்வொரு முறையும் திரும்புவதற்கும் 1-1.30 மணி நேரம் பணி செய்யும் கோயில் ஊழியர்கள். மொத்த தமிழகத்தில் இருந்தும் வந்துள்ள காவல் பணியர்கள் மற்றும் தன்னார்வலர்கள். வேட்டு போட்டுக்கொண்டு வரும் குழுவினர், நூற்றுக்கணக்கான இசைகலைஞர்கள், முட்டுக்கட்டை போடுபவர்கள், முட்டுக்கட்டை சுமந்து வரும் வண்டிகளை இயக்குபவர்கள் என்று ஒரு அடி தேர் நகர்வதற்கு ஆயிரகணக்கானோர் வேலை செய்யவேண்டும். இது போன்ற பெருஞ்செயல்களில் அனைவருமே ஒற்றை விராடவடிவத்தின் பல கைகள் என்று தோன்றுவதுண்டு. தனியொருவன் என்று இங்கு யாருமில்லை.
வடக்கு நோக்கி தேர் எங்களை கடந்து சென்றபின் தேருக்கு பின் முன்னுள்ள அதே அளவு உழைப்பும் விருவிருப்பான பணிகளும் நடந்து கொண்டிருந்ததை பார்த்தோம். சமீப காலமாக பின்னிரு சக்கரங்களும் Bulldozer கொண்டு தள்ளப் படுகின்றன. அதை இயக்குபவர்கள், வேலி பிடித்து வேட்டு போடுபவர்கள் புதிய முட்டுக்கட்டைகளை எடுத்துச் செல்பவர்கள், நொறுங்கிய முட்டுக்கட்டைகளை மீண்டும் வண்டிக்கு எடுத்துசெல்பவர்கள், அடுத்த திருப்பத்திற்கு ஆயுத்தமாக இரும்பு தட்டுகளும் greese வாலிகளும் நிரம்பிய வண்டி என்று அங்கொரு உலகம் இயங்கிகொண்டிருந்தது. அப்பரின் வரிகள் நேற்றிலிருந்தே ஓடிக்கொண்டிருந்தாலும் உயிராவனம் இருந்து என்ற திருத்தாண்டக வரிகள் சட்டென நினைவிற்கு வந்தன.
நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்
நிலாத் திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி
ஓரூரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும்
உலகமெலாம் திரிதந்து நின்னைக் காண்பான்
தேரூரும் நெடுவீதி பற்றி நின்று
திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள்
அமரர்கள் தம் பெருமானே ஆரூராயே.
ஆரூரா ஆரூரா என்று நான்முகனும் திருமாலும் தேர் ஊர்ந்த தடத்தை நோக்கி அழைத்துக்கொண்டே செல்கிறார்களாம். தேடிப்பார்த்தோம். இன்னும் வரவில்லை போல.
தெற்கு பார்த்து தேர் வலம் தொடங்கும்போது அகோரமுகமாகவும் பின் மேற்கு சத்யோஜதமாகவும் பின் வடக்கு நோக்கிய வாமதேவமாகவும் இறுதியாக கிழக்கு நோக்கிய தத்புருஷமாகவும் வடமேற்கில் திரும்பும் பொது ஈசானம் என்று ஐந்து முகமாகவும் தேர் பவனி வரும். வடமேற்கு மூலைக்கு வந்தபோது மதிய உணவிற்காக தேர் சில மணி நேரங்கள் நிறுத்தப் பட்டது. 7 மணிக்கு மேல் தேர் நிலைக்கு வந்தது. நிலையை அடைந்து சிகப்பு கொடி கட்டியபின் ஒவ்வொரு வரும் தங்கள் அளவில் ஒரு சாதனையை நிகழ்த்தியது போன்று அழுது புரண்டு கண்ணீர் விட்டு ஆரூரா தியாகேசா என்று உச்ச நிலைக்கு சென்றனர். திரையிட்டு அலங்காரம் தொடங்கியது. அந்த நேரத்தில் விநாயகர் தேரில் ஏறி பார்ப்பதற்கு அனுமதித்தனர். ஐங்கலக்காசு விநாயகர் அந்தியொளியில் பொன்னென மின்னினார்.
நிலைக்கு வந்தபின் திரையிட்டு அலங்காரம் முடிந்தபின் அன்றைய சாயரட்சை தேரிலேயே நடைபெற்றது. நித்ய பிரதோஷமாக தினந்தோறும் தியாகராஜரின் எதாஸ்தானத்தில் நடைபெறும் சாயரட்சை அன்று தேரிலேயே நடைபெற்றது. சோடச உபசாரம் திருமுறை விண்ணப்பம் முடிந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இன்னும் நீண்ட சோடச உபசாரம் பார்க்கவேண்டுமென்றால் எங்கள் அகிலா நவராத்திரி கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும்போது வந்து பார்க்கவேண்டும்.
தேரில் இருந்து இவர் கிளம்பி தாண்டவமாடி ராஜ நாரயாணன் மண்டபம் செல்ல நள்ளிரவாகிவிடும் என்பதால் தேநீர் மட்டும் குடித்துவிட்டு புறப்பட்டோம். காலை மீண்டும் சஹஸ்ர கலசாபிஷேகம் பார்க வருவதாக திட்டம்.
திங்களன்று மதியம் மீண்டும் பூங்கோயில் அடைந்தோம். காலை தொடங்கிய சஹஸ்ரகலசாபிஷேகம் அப்போதும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஆயிரம் கலசங்கள், ஆயிரம் சங்குகள் ஸ்தாபிக்கப் பட்டு யாகம் வளர்த்து தேரில் சென்று வந்ததற்காக தியாகராஜர், அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள், வள்ளி தெய்வானை சமேத முருகர், ஆதி சண்டேஸ்வரர் ஐங்கலக் காசு விநாயகர் அனைவருக்கும் மஹா அபிஷேகம் நடைபெற்றது. கலசங்கள் சங்குகள் மட்டுமின்ற பால் தயிர் முதலிய அனைத்து திரவியங்களாலும் நீராட்டு நடைபெற்றுகொண்டிருந்தது.
ராஜ நாராயணன் மண்டபத்தில் வீற்றிருந்த தியாகராஜர் வெண்பட்டால் உடல் மறைக்கப் பட்டு ரஹஸ்ய மூர்த்தியாக காட்சி கொடுத்தார், அருகில் உள்ள கொண்டியம்மையும் ரஹஸ்ய மூர்த்தியாக முருகர் மறைந்திருந்தார். அப்பர் இந்த சோமாஸ்கந்த வடிவத்தில் இருக்கும் தியாகராஜரை “ஐ ஐந்தின் அப்பாலாய்” என்கிறார். 25 மாகேஸ்வர மூர்த்தங்களையும் கடந்தவர் இந்த மூர்த்தி.
தியாகராஜருக்கு வலப்புரம் அமர்ந்திருந்த விநாயகருக்கு பின் நின்றிருந்தோம். யோக மரபில் குறிப்பிடும் மூலாதாரம் சுவாதிஷ்டானம் முதலான 7 சக்கரங்களில் ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு தெய்வம் கூறப் பட்டுள்ளது. மூலாதாரத்திற்கான தெய்வம் விநாயகர். ஆரூர் மூலாதார தலம் என்பதால் இங்கு இவருக்கு சிறப்பு அதிகம். எல்லா வகையான விநாயகரும் இங்கு பார்க்கலாம்.
விநாயகர் உருவம் நல்ல ஒரு குண்டு குழந்தையை அமர வைத்து செம்பை காய்ச்சி ஊற்றியது போன்ற அத்தனை அழகான திருமேனி. யாரும் பற்காதபோது மிட்டாய் வாங்கிதரேன் என்று சொல்லி ஏமாற்றி கூட்டி வந்துவிடலாம். பின்னிலிருந்து பார்த்தல் நல்ல Obesity உள்ள குழந்தை போன்று இரு தோள்களுக்கும் கீழ் தசை தொங்கல்களும் உருண்டையான முகமும் மத்தகத்தத்தின் இருபுறமும் வழவழப்பும் பார்க்க பார்க்க அள்ளி கொஞ்சவேண்டும் என்பது போன்றதொரு திருமேனி. வெண்முரசின் கிராதத்தின் பாசுபத பகுதியில் வரும் கொம்பன் என்ற விநாயகரின் உருவத்தை குணங்களை பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.
தியாகேசர் அங்கு இருப்பதையே மறந்து விநாயகரின் பாதத்தையே பார்த்துக்கொண்டிருந்தோம். பல குழந்தைகளில் பார்பது போன்ற மெத்தென்ற கணுக்கால் மற்றும் விரல்களின் தடிமன். திருவாரூரில் வழிபாட்டில் உள்ள ஐம்பொன் திருமேனிகள் அனைத்துமே Masterpiece. அதில் ஒரு சிலை அருங்காட்சியகத்தில் இருந்தாலும் அது ஒரு உச்சம். காட்சிக்கொடுத்தர் என்னும் ரிஷபாந்திகர், பிட்சாண்டவர்(திருவாதிரையன்று வெறும் ஒரு செவ்வந்தி சரடு மற்றுமே சாற்றப் பட்டு நான்கு கரங்களை வீசிய அவரின் நளினத்தை பார்த்தது இன்னும் நினைவில் உள்ளது), குழந்தை நடராஜர் போன்ற நடராஜர் திருமேனி, பைரவர், பரவையார் சங்கிலியார் உடனான சுந்தரர், அசலேஸ்வரர் கோயிலில் உள்ள அம்பிகையின் உருவம், ஆதி சண்டீசர், வன்மீகநாதர் கருவறையில் உள்ள போகசக்தி அனைவரை விடவும் ஏன் தியாகராஜரின் திருமேனியை விடவும் விநாயகர் திருமேனி கொள்ளை அழகு.
| திருவாரூர் விநாயகர் |
ஞாயிறன்று மாலை தேரிலிருந்து விநாயகர் முருகரை இறக்கும்போது சகடத்தை கூட்ட நெரிசலுக்குள் கொண்டுவர முடியாததால் சிலைகளை அப்படியே தூக்கி சென்று சகடத்தில் ஏற்றினர். விநாயகரை தும்பிக்கையை பிடித்து தூக்கி சென்றபோது குழந்தையை காதை பிடித்து எழுத்து செல்வது போன்று தோன்றியது. சந்தனம் மேளம் நாகஸ்வரம் சூழ கொண்டுவரப் பட்டு நீராட்டு செய்விக்கப் பட்டு மகா தீபாராதனை காட்டப் பட்டது. மண்டபத்தில் இருந்து இறங்கி மூலவரையும் தரிசித்து விடைபெற்றோம். இன்று மாலை திரிபுராந்தகர் மற்றும் பிட்சாண்டவர் புறப்பாடு. ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களை திரிபுராந்தகர் அறுக்க அதனை பெற்றுக்கொள்ள பிட்சாண்டவர் புறப்பாடு செல்கிறார். பிட்சாண்டவர் சந்நிதியில் திரையிட்டு அலங்காரம் தொடங்கியிருந்தனர். இத்துடன் திருவிழா முடிவதில்லை இன்றிலிருந்து இன்னும் 4 நாட்களுக்கு தியாகரின் உற்சவம் உள்ளது. பக்த காட்சி முடித்து அவர் எதாஸ்தானம் திரும்பியதும் கமலாம்பாள் உற்சவம் தொடங்கும் அதனை தொடர்ந்து சண்டீஸ்வரர் உற்சவத்துடன் த்வஜ அவரோகணம் பின் ஆச்சாரியர் உற்சவம் முடிந்து விழா நிறைவுறும்.
திருவாரூர் திருவிழாவை குறித்த பல அறிய செய்திகள். திருவிழா பத்ததிகள் குறித்து அறிந்துகொள்ள தருமையாதீன புலவர் மதுசூதனன் கலைச்செல்வனின் உறைகள் பெரிதும் உதவியாக இருந்தன. திருமுறை குறிப்புகள் வரலாற்று சான்றுகள் பலவற்றை குறித்து விரிவான விளக்க உரைகள் youtubeல் கிடைக்கின்றன. அடுத்த ஆண்டு செல்ல விருப்பவர்கள் பார்த்துவிட்டு சென்றால் திருவிழா அனுபவம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.
தேர் அன்று இரவு நண்பர் கவிநிலவனையும் தேர் அன்று நண்பர் விஜய்சேகரையும் கண்டோம். இன்னும் சந்திக்காத பல நண்பர்கள் வந்திருக்ககூடும். மாயவரம் வந்து ரயிலேறி இல்லம் சேர்ந்தோம். ஏப்ரல் 2ம் தேதி பக்த காட்சி தேர் போன்றே அதுவும் முக்கியமான திருநாள். பாத தரிசனம் முடித்து தட்டஞ்சுற்றி மண்டபத்தில் பக்த காட்சி கொடுத்து தியாகராஜர் எதாஸ்தானம் திரும்புவார் அதற்க்கும் திட்டமிட்டு செல்ல முடியாமல் போனது. தமிழகத்தின் அடையாளமாக ஒன்றான பெருந்திருவிழா ஒன்றில் பங்குகொண்ட இனிமை. ஒரு மகத்தான ஓவியத்தை அல்லது நிகழ்த்துக் கலையை கண்ட நிறைவுடன் வீடடைந்தோம்.
ஸ்ரீ தியாகராஜ மகாராஜோ விஜயதே. !!
அரூரா தியாகேசா !!
- மனோ
திருச்சி
சுட்டிகள்
- மகா தீபாராதனை காணொலி - https://www.instagram.com/reel/DWccDiuEwQj/?utm_source=ig_web_copy_link
- மதுசூதனன் கலைச்செல்வன் உரை https://youtu.be/NkCcp8whgLY?si=sMZxn6g56ugHTDjd, https://www.youtube.com/watch?v=zrfex5ikEYQ
Comments
Post a Comment