சாகித்ய அகாதமி இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற பெயரில் இலக்கிய முன்னோடிகளின் வாழ்க்கை வரலாற்றை இலக்கியவாதிகளை கொண்டே வெளியிட்டு வருகிறது. அப்பர் , ஞானசம்பந்தர், அழ வள்ளியப்பா, பேரறிஞர் அண்ணாதுரை, ஜெயகாந்தன் என்று பலதரப்பட்ட ஆளுமைகளின் நூல்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் ஏ கே செட்டியார் குறித்து சா. கந்தசாமி எழுதிய நூலை நேற்று முன்தினம் நூலகத்திலிருந்து எடுத்துவந்து நேற்றும் இன்றும் வாசித்து முடித்தேன். அதன் வாசிப்பனுபவ பகிர்வு, இப்பதிவு. ஏ கே செட்டியார் தமிழில் பயணக் கட்டுரைகளின் முன்னோடி, இதழாசிரியர், முதன் முதலாக முழு நீள காந்தியின் ஆவணப் படத்தை தயாரித்தவர் என்ற மூன்று பரிமாணங்களை குறித்த முன்னுரையை சா கந்தசாமி அளிக்கிறார். உலகம் சுற்றிய தமிழன் என்று பெயர் பெற்ற செட்டியார், தென்னாபிரிக்கா,இலங்கை, லண்டன், ஜெர்மனி, ரங்கூன் என்ற எண்ணற்ற நாடுகளுக்கு பயணம் செய்து பயணக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மலேயா முதல் கனடா வரை என்ற அவரது பயணக் குறிப்பு முக்கியமான பயணக் கட்டுரைகளில் ஒன்று. கப்பல், விமானம், ரயில், டிராம் பேருந்து, கட்டை வண்டி என்று பலவகையான பயணங்கள...