சாகித்ய அகாதமி இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற பெயரில் இலக்கிய முன்னோடிகளின் வாழ்க்கை வரலாற்றை இலக்கியவாதிகளை கொண்டே வெளியிட்டு வருகிறது. அப்பர் , ஞானசம்பந்தர், அழ வள்ளியப்பா, பேரறிஞர் அண்ணாதுரை, ஜெயகாந்தன் என்று பலதரப்பட்ட ஆளுமைகளின் நூல்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் ஏ கே செட்டியார் குறித்து சா. கந்தசாமி எழுதிய நூலை நேற்று முன்தினம் நூலகத்திலிருந்து எடுத்துவந்து நேற்றும் இன்றும் வாசித்து முடித்தேன். அதன் வாசிப்பனுபவ பகிர்வு, இப்பதிவு.
ஏ கே செட்டியார் தமிழில் பயணக் கட்டுரைகளின் முன்னோடி, இதழாசிரியர், முதன் முதலாக முழு நீள காந்தியின் ஆவணப் படத்தை தயாரித்தவர் என்ற மூன்று பரிமாணங்களை குறித்த முன்னுரையை சா கந்தசாமி அளிக்கிறார்.
உலகம் சுற்றிய தமிழன் என்று பெயர் பெற்ற செட்டியார், தென்னாபிரிக்கா,இலங்கை, லண்டன், ஜெர்மனி, ரங்கூன் என்ற எண்ணற்ற நாடுகளுக்கு பயணம் செய்து பயணக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மலேயா முதல் கனடா வரை என்ற அவரது பயணக் குறிப்பு முக்கியமான பயணக் கட்டுரைகளில் ஒன்று. கப்பல், விமானம், ரயில், டிராம் பேருந்து, கட்டை வண்டி என்று பலவகையான பயணங்களை குறித்தும் அதில் சந்தித்த மனிதர்களையும் ஒவ்வொரு பயணத்தின்போதும் அந்தந்த நிலப் பரப்பின் பண்பாட்டு கலாச்சார வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறார்.
இரண்டாவதாக குமரி என்ற இதழை தொடங்கி நடத்தி வந்திருக்கிறார். அதில் கட்டுரைகள், புகைப்படங்கள், கவிதைகள் என்று பல படைப்புகளை பிரசூரித்திருக்கிறார். நான் படித்த bishop heber மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர், Cristian Fredrick Schwartz அவர்களுக்கும் தஞ்சை மன்னர் சரபோஜிக்குமான குரு சீடன் உறவென்பது இதுவரை நான் அறிந்திராத செய்தி. அதைக்குறித்தும் செட்டியார் அவர்கள், அவரது கட்டுரைகளில் குறித்து வைத்திருக்கிறார்.
மூன்றாவது காந்தியடிகளின் ஆவணப் படம். காந்தியடிகளின் தீவிர பக்தரான இவரது எந்த ஒரு குறிப்பிலும் காந்தியாரின் வரி இல்லாது இருப் பதில்லை என்கிறார் சா க . 1937 ஆம் ஆண்டு தொடங்கி 1940ம் ஆண்டுவரை இரண்டாவது உலக யுத்தம் தொடங்கிய காலகட்டத்திலும் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்தும் அழிவின் விளிம்பில் இருந்த பல்வேறு ஆவணங்களை சேகரித்தும் கிட்டத்தட்ட 50,000 அடிகள் நீளமுள்ள படத்தை தயாரித்து பின் சில காட்சிகளை நீக்கி 12,000 அடி சென்சார் செய்து வெளியிட்டார். 15 ஆகஸ்ட், 1947ம் ஆண்டு விடுதலை தினத்தன்று ராஜேந்திர பிரசாத் (முதல் குடியரசுத் தலைவர்) போன்ற பெருந்தலைவர்களுக்கு இப்படத்தை காட்சிப்படுத்தியுள்ளார். பல திரையரங்குகள் படத்தை காட்சிப் படுத்த முன்வராத போதிலும் போர்பந்தரிலிருந்து (காந்தியடிகளின் பிறப்பிடம்) சென்னையில் குடியேறிய சயானி திரை அரங்கின் அதிபர் முன் வரவே பின் பல திரை அரங்குகளில் படம் திரையிடப் பட்டது. David Attenbrough விற்கு கிடைத்தது போன்ற நிதியுதவியும் தொழில்நுட்ப வசதிகள் ஏதுமில்லாமல் செட்டியார் சாத்தித்து காட்டியது குறிப்பிடத்தக்கது.
தமிழின் முக்கியமான இலக்கியவாதியான ஏ கே செட்டியார் அவர்களை குறித்து அறிந்துகொள்ள இந்நூல் ஒரு நுழைவாயிலாக அமைந்தது.
பிகு: நான் படித்தது 2018ம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் பதிப்பு ஏராளமான அச்சுப் பிழைகள், துணையெழுத்து பிழைகள் உள்ளன. வாசகர்கள் அதையும் கருத்தில்கொண்டு படிக்கவேண்டும்.
Comments
Post a Comment