அனேகமாக இது எனது முதல் திரைப்பட காட்சி அனுபவக் குறிப்பாக இருக்கக் கூடும். வேலை நிமித்தமாக பெங்களூருவில் தங்கியிருந்த தொடக்க காலத்தில் பல நேரங்களில் துணையாக இருந்தது பாப்புலர் கிளாசிக் ஆன பொன்னியின் செல்வன் நாவல். திருச்சியை பற்றிய நாவல் என்ற குறிப்போடு பார்த்திபன் கனவை கல்லூரி நாட்களில் படித்து முடித்த நினைவு இருக்கிறது. பார்த்திப சோழனின் கனவை விக்ரமன் தொடங்கி பிற்கால சோழர்கள் ஆகிய ராசராசன் காலத்தில் நனவாகியது என்று பார்த்திபன் கனவு முடிவுறும்.
ஏறத்தாழ படித்து முடித்த அதே கால கட்டத்தில் தான் வேலைக்காக பெங்களூரு சென்றேன். ஆடிப்பெருக்கு நாளில் தொடங்கியது நாவல். எம்மை போன்ற காவிரி கரையோரம் வாழும் மக்களுக்கு ஆடிப்பெருக்கு மகா மங்கலமான ஒரு பெருவிழா. வாலான் அரிசியையும், வெல்லத்தையும், கீறிப்போட்ட தேங்காய் சில்லுகளையும் மஞ்சள் தடவிய கையோடு என் பாட்டி கிளறுகின்ற காட்சி இன்றும் என் மனக்கண்ணில் விரிகின்றது.
பள்ளி அரைநேரம், அலுவலகங்கள் உள்ளூர் விடுமுறை,திருவரங்கம் திருவானைக்காவல் வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம், பூக்கள், பழங்களின் விலை உயர்வு என்று ஊரே விழாக் கோலம் பூணும். புது மண தம்பதிகள் இந்நாளுக்கென்றே ஆயிரக்கணக்கில் செலவழித்து வாங்கி சில மணி நேரங்களே அணிந்த மாலைகளை பரண்மீதிருந்து இறக்கி படித்துறைகளுக்கு எடுத்துவருவர்.
இத்தகைய அமுதப் பெருவிழாவில் தொடங்கிய கதையை முடித்தே தீரவேண்டும் என்று தொடர்ந்து படித்து முடித்தேன். ஒவ்வொரு அத்தியாயமும் இன்னும் ஒன்று, இன்னும் ஒன்று என்று தொடர்ந்து இட்டுச் சென்றுகொண்டே இருந்தது. பிறருக்கு எவ்வாறோ நான் அறியேன். தீவிர இலக்கிய வாசிப்பிற்குள் நான் வந்தது பொன்னியின் செல்வனில் தொடங்கி தான்.
கல்கி கையாண்ட நடை காட்சிப் படிமத்திற்கு மிக நெருக்கமான ஒரு நடை. (சிலர் இன்று படத்தின் மீது தங்கள் அதிருப்தியை பதிவு செய்வது கல்கிக்கு ஒருவகையில் வெற்றிதான் நாவலை படித்த அத்தனை பேரின் கற்பனை காட்சிகளையும் பூர்த்திசெய்வது மிகப் பெரிய சவால்). இதை எவரேனும் ஒருவர் திரைப்படமாக ஆக்கினால் power rangers ஐ மட்டுமே நாயகர்களாக பார்த்துப் பழகிய என் தலைமுறை நிஜமான சரித்திர நாயகர்களை அறிந்து கொள்ள பெரும் பேறாக இருக்குமென்று எண்ணிய நாட்கள் உண்டு.
ஒவ்வொரு கலை படைப்பும் தனக்காக தன்னையே பலி கொடுக்கக் கூடிய ஒருவனை ஆகர்ஷித்துக் கொள்வதை வரலாறு முழுக்க பார்க்க முடியும். இத் திரைப்படமும் அப்படியே.
பாகுபலி முடிந்து ஒரு நேர்காணலில் ராஜமௌலி இவ்வாறு சொல்லியிருந்தார்
"A Director's job is not to get the maximum acting out of the actor/actress, it is about getting the correct amount of acting for that particular character"
"இயக்குனரின் பணி என்பது நடிகர் நடிகையரின் முழு நடிப்பை வெளிக் கொணர்வதல்ல, அந்த பாத்திரத்திற்கான சரியான நடிப்பை வெளிக் கொணர்வது" என்று. அவ்வகையில் வந்தியத்தேவனாக கார்த்தி அவர்களும் ஆதித்த கரிகாலனாக விக்ரம் அவர்களும் அற்புதமாக பொருந்தியிருந்தனர். இன்று வரை கர்ணன் என்ற சொல் சிவாஜி கணேசன் என்ற பேராளுமையோடு நினைவுகூறப்படுவது போல இனி வரும் 500 ஆண்டுகளுக்கு வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன் என்று கட்டியும் கேட்கும் போதெல்லாம் ரத்தக்கறை படிந்த விக்ரம் அவர்களின் முகம்தான் நினைவுகூறப்படும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்நிலத்தில் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்க்கை எவ்வாறு இருந்தது இருந்தது என்று மிக எதார்த்தமாக காட்சிகள் அமைந்திருந்தன. குடிசையின் கதவை ஆதித்தன் திறக்கும்போது என்னுள்ளும் ஒரு இறைஞ்சுதல் சட்டென தோன்றி மறைந்ததை உணர முடிந்தது. போர் காட்சிகளால் சில நேரங்கள் குருதி நெடி வீசியதையும், படம் முடியும் தருவாயில் தோன்றிய ஆழ்கடல் காட்சிகலில் என்முகத்திலும் சில சாரல் துளிகள் வீழ்ந்தன.
அனைத்துக்கும் மேலாக புத்தகத்தின் ஒருவரி கூட படித்தே இராத ரசிகர்களும் ஒரு நொடி கூட திரையிலுருந்து விழி நகர்த்த முடியாத வண்ணம் திரைக்கதை அமைத்ததில் எம் ஆசான் ஜெயமோகன் அவர்களும் குமரவேல் அவர்களும் வென்றிருக்கிறனர். Mani Sir the Guru என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். வானதியின் ஓலையை பொன்னியின் செல்வன் பிரித்து படிக்கும்போது பின்னணியில் ஒளிக்கும் சுடலைப் பொடி பூசியென் உள்ளம் கவர் கள்வன் என்ற தேவார வரியை சேர்த்தது எவராயினும், அவர் நீடுழி வாழக்கடவர் . மொத்தத்தில் இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் வெற்றி. அரைநூற்றாண்டு காத்திருப்பின் கனி. படம் விட்டுச் சென்ற சில வெற்றிடங்களை இரண்டாம் பாகம் நிரப்பும் என்று காத்திருக்கிறேன்.
மனோ
👏
ReplyDeleteThanks Siva!!
Delete🙏🏻❤️
ReplyDeleteThanks macha!!
DeleteBeautiful write up mano
ReplyDeleteThanks a lot ka !!
Deleteஅற்புதமான விமர்சனம்.அணுஅணுவாக சரிந்தேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி
DeletePS-I, thirappadathai thaandiyathoru anubavam.. Nam tamil makkal, masala ethirpaaramal, ithai etru kondu kondaduvathu perum magizhchi!! Eppothum pondru azhagiya katturai nanbaa!!
ReplyDeleteNandri nanba!!
DeleteA well written review 🔥👌🏾
ReplyDeleteThanks a lot !!
Delete