ஆகுதி ஒருங்கிணைத்த மொழிபெயர்பாளர் நிர்மால்யாவின் ஒருநாள் கருத்தரங்கில் ஆசான் ஜெயமோகன் அவர்களின் உரையின்போது "ஒரு படைப்பு எழுதப்படும்போதே ஒரு மொழி பெயர்ப்பு நடந்துவிடுகிறது, முதலில் படைப்பு நிகழ்வது என்பது கனவில் தான், கனவிலிருந்து அரூபமான அது மொழியென்னும் ரூபத்தை அடைகிறது" என்றார். எந்த ஒரு படைப்பும் முதலில் நிகழ்வது கனவில். தஞ்சை பெருங்கோயிலிருந்து அஜந்தா ஓவியங்கள் வரை, எகிப்து கோபுரங்களில் இருந்து ஆனந்த தாண்டவ மூர்த்தி வரை, அத்தனை படைப்புகளும் முதலில் கனவில் நிகழ்கிறது. அதற்கு மொழி என்னும் வடிவம், எனக்கு இன்னும் கற்பனைக்கான இடத்தை கொடுக்கிறது. குதிரையில் சென்று கொண்டிருக்கும் வீரன் என்ற வரியை படிக்கும்போது நான் சோழ தேசத்து வீரனை கற்பனை செய்கிறேன், மற்றொருவருக்கு அது ராஜபுத்திர வீரராக இருக்க கூடும். இப்படி பல்லாயிரம் மனிதர்களின் கனவுகள் உருக்கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு கனவு நிலம் புத்தக கண்காட்சி. அறுபத்துமூவர் சன்னதியின் அடுக்கப்பட்டிருக்கும் அத்தனை செப்பு படிமங்களையும் ஒருசேர காண்பது போன்ற பேரனுபவம். ...