Skip to main content

திருமயிலை 😍

    திருமயிலை கபாலீஸ்வரம்.


        புத்தக விழா முடித்து மறுநாள் காலை சென்னையை சுற்றி பார்க்க கடற்கரை ரயில் ஏறினேன். என்னை போன்ற சென்னை வாசி அல்லாத ஒருவனுக்கு இந்நகரம் ஒரு  வரலாற்றின் பேரகராதி. கற்கால மனித நாகரீகத்திலிருந்து வெள்ளையர் ஆட்சி காலம் வரைக்கும் அறுபடாத அத்தியாயங்களை கொண்ட புத்தகம் . ஒவ்வொரு தெருக்களிலும் கட்டிடங்களிலும் வரலாற்று எச்சங்களை இந்நகரம் கொண்டிருக்கிறது.


        மூன்று மாதங்கள் தொடர்ந்து அலைந்து திரிந்தாலும் பார்த்து முடிக்க முடியாத அத்தனை வரலாற்று பண்பாட்டு தலங்கள் இந்நகரத்தில் உள்ளன. அரைநாளுக்குள் இல்லம் திரும்புவதால் கபாலீஸ்வரத்திற்கு மட்டும் சென்று வர திட்டம். குளக்கரையில் இறக்கிவிட்ட ராபிடோ நண்பர் இது தான் ராஜகோபுரம் என்று சொல்லிவிட்டு சென்றார்.

தேவதேவனின் கவிதை ஒன்று 

மார்கழி மாதம் –
வேறென்ன வேண்டும்?

உயிரின் உயிரைத்
தீண்டுகிறது குளிர்.
கோலங்களில் வந்தமர்கிறது
மலர்.

கொடியதொரு காலம்.
உயிரை ஜில்லிட வைத்து
மரக்கச் செய்கிறது
ஆரம்பத் திகில்.
அலங்கோலமெங்கும்
தெறிக்கும் குருதி
அவன் பிரக்ஞைக்கு வராது.

கொடியதொரு காலத்தில்
கொடியதொரு காலமேயாயிருக்கும்
மனிதர்கள்.

        இந்த மாதத்தில் நகரம் அப்போதுதான் குளித்து முடித்தது போல ஒரு வசீகரத்தில் உள்ளது. சென்னை போன்ற இரைச்சலும், தூசும், வெக்கை நமைச்சலும் நொடிக்குநொடி பரபரத்து ஓடிக்கொண்டிருக்கும் நகரத்தில் கபாலீஸ்வரம் மட்டும் பெரு நகரத்தின் எந்த சாயலும் இன்றி விண்ணில் எங்கோ மிதந்திருந்தது. நான் சென்ற அன்று (12 ஜனவரி 2025) மயிலாப்பூர் விழா கொண்டாடிக்கொண்டிருந்தனர். தெருவெங்கும் வண்ண கோலமும், திருப்பள்ளியெழுச்சியும் கேட்டபடி இருந்தன. கோயிலுக்குள் ஒரு ஆங்கிலேய குழுவும் ISKON குழுவும் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தனர்.

        ஆதியில் கபாலீஸ்வரர் கோயில் சாந்தோம் cathedral தேவாலயத்திற்கு அருகில் இருந்தது.  16ம் நூற்றாண்டில் போர்துகீசியர்களுக்கு புகலிடமாகவும் அமைந்துள்ளது. 

        "கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே" என்ற திருப்புகழ் வரி ஒன்று உள்ளது. தற்போது இருக்கும் கோயில் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. வாயிலுக்கு இடப்புறமே ஞான சம்பந்தருக்கும் ,  பூம்பாவைக்கும் சன்னதிகள் உள்ளன. வலப்புறம் அருணகிரிநாதர் முருகன் சன்னதியை நோக்கியபடி நின்றிருந்தார். 

        மயில் வடிவில் தன்னை வணங்கும் படி ஈசன் அம்பிகையை பணிக்க. இங்கு பார்வதி தேவி மயில் வடிவில் வந்து லிங்கம் அமைத்து வணங்கியதாக தலபுராணம். சிவநேசஞ்செட்டியாரின் மகள் பூம்பாவையை சம்பந்தர் மீண்டும் உயிர்ப்பித்த தலம். "துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை வாயிலான்" என்று சுந்தரர் பாடும் வாயிலார் நாயனாரின் ஊர். ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன் தெய்வப்புலவர் வாழ்ந்தது மயிலாப்பூர் என்றும் கூறுவார்.

        மேற்கு நோக்கிய கருவறையில் கபாலி சுற்றியும் விளக்குகள் சூழ லிங்கத்திற்குப்பின் கண்ணாடி தீபமும் திகழ கம்பீரமாக அமர்ந்திருந்தான். தரிசித்தபடி இடப்பக்கம் திரும்பியவுடன் திருவாதிரை கொண்டாட்டங்களில் முழு அலங்காரத்துடன் ஆடல்வல்லான், குஞ்சிதபாதம் மட்டும் தெரியும்படி அத்தனை மாலைகள். திருச்சுற்றில் இன்னும் பல நடராஜர் உருவங்கள், நால்வர், அறுபத்துமூவரின் செப்பு சிற்பங்கள், காசிவிஸ்வநாதர் விசாலாக்ஷி சன்னதி, க்ஷேத்ரபாலர் பைரவர் சன்னதி, தெற்கு கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மற்ற இரு இரு கோஷ்டத்தில்  விநாயகர், லிங்கோத்பவர் சிற்பங்களும் உள்ளன. வலப்புறம் அறுபத்து மூவரின் சிலாரூபங்கள்.

        கருவறைக்கு முன் நூறாண்டுகளுக்கு முன் கொடுத்த நிவந்தம் குறித்த இரு கல்வெட்டுகள் உள்ளன.

        கற்பகாம்பாளையும் தரிசித்து, புன்னை வன நாதர், நர்த்தன விநாயகர்  காசி விஸ்வநாதர் சன்னதிகளும் தாண்டி கிழக்கில் உள்ள ராஜகோபுரத்தை கண்டு வலம் வந்தேன்.

        வள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்த முருகர் சந்நதியையும் பார்த்துவிட்டு மண்டபத்தில் அமர்ந்திருந்தேன். Saivam.org, thevaram.org போன்ற தளங்களில் "மட்டிட்ட புன்னை" பாடலும் தலபுராணமும் படித்துக்கொண்டிருந்தேன். சற்குருநாத ஓதுவார் குரலில் பாடலும் கேட்டு அமர்ந்திருந்தேன். 


ஜெவின் வரியை துணைக்கழைத்தால் இன்றிலிருந்து ஐந்நூறு ஆண்டுகளில் இன்றிருக்கும் பார்த்தசாரதியும் கபாலியும் மட்டும் தான் எஞ்சியிருப்பர். சுற்றியுள்ள அனைத்தும் எந்த தடயங்களும் இல்லாது கூட போக கூடும். வாழிய கபாலி வாழ்க இந்நகரம்.

மனோ 


  1. https://shaivam.org/thirumurai/second-thirumurai/thirugnanasambandar-thevaram-thirumylapore-mattita-punnaiyang/#gsc.tab=0
  2. https://shaivam.org/hindu-hub/temples/place/191/thirumylapore-kapaleeswarar-temple/#gsc.tab=0

Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.   குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர்.  இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின்  கல்வெட்டுகளும்,  மூவர் பாடல் குறிப்புகளும். ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும். பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது.  சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள்.  யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"...