இந்திய பயணம் ஜெயமோகன் மற்றும் அவரது நண்பர்கள் 2008ம் ஆண்டு ஈரோட்டிலிருந்து காசி வரைக்கும் செய்த பயணத்தின் பயணக்கட்டுரை நூல்.
வரலாறு மற்றும் இலக்கியத்திற்கு இணையாகவே பயணக்கட்டுரைகளும் சுவாரசியமானவை. ஒவ்வொரு கட்டுரைக்கும் முற்றிலும் புதிதாக நிகழும் காட்சிகள், மனிதர்கள், உணவு, கால நிலை, மொழி என்று ஒவ்வொரு மின்னல் வெட்டாக வந்து போகும் பின்புலங்கள். அத்தனை மின்னல் வெட்டுகளுக்கும் பொதுப்பண்பாக ஒளி கீற்று ஒன்றிருப்பது போன்று தோன்றும்.
முன்பு சிட்டி, தி ஜா வின் நடந்தாய் வழி காவேரி கட்டுரை, ஏ கே செட்டியாரின் பயணக்கட்டுரைகள், தொ.மு பாஸ்கர தொண்டைமானின் வேங்கடம் முதல் குமரி வரை நூலின் சில கட்டுரைகள், சமீபத்தில் S ராமகிருஷ்ணனின் தேசாந்திரி போன்ற பயணக்கட்டுரைகளை படித்திருக்கிறேன்.
இந்திய பயணம் நூல் 20 நாட்களுக்குள் சில நகரங்களை மட்டும் கண்டு செல்லும் சிறிய பயணம் குறித்த அனுபவங்கள், அவதானிப்புகள் அடங்கிய தொகுப்பு. பயணக்கட்டுரைகளில் காட்சி அனுபவங்கள் மட்டும் அன்றி இடை இடையில் வரும் இலக்கிய வரிகளுக்காக வாசிக்கலாம், அந்த நிலக்காட்சி, மனிதர்கள், மொழி, போன்ற பருவடிவங்கள் ஆழ் மனதில் பதிந்து அப்போது பூக்கும் பூவாக சில வரிகள் எழும். அவை முக்கியம். உதாரணமாக
"இருள் பிரியா நேரத்தில் ஒரு ஊரை விட்டு விளங்குவதில் கவித்துவமாக ஏதோ ஒன்று உள்ளது" என்ற வரி வெண்முரசில் ஒரு அத்தியாயத்தில் வைக்க தக்கது.
மேலும் தாரமங்கலம் கட்டுரையில் "ஊர் திரும்பும்போது அனேகமாக ஆழமான அமைதி நிலவும், அந்த அமைதி தான் நாம் பயணங்களில் ஈட்டுவது".
"நாயை கண்டு மரத்தில் ஏறிக்கொள்வது போலத்தான் அக்கால ஆட்சியாளர்கள் குன்றுகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள்"
"மண்ணுக்கு ஆத்மா போல ஓடும் இப்பெருநதிகள் அன்றி கண்முன் தெரியும் தெய்வங்கள் பிறிதில்லை என்று உணர்ந்திருந்தார்கள் முன்னோர்"
இந்த கட்டுரைகள் அனைத்து அன்றன்றைக்கே எழுதி வலைதளத்தில் பதிவேற்றப்பட்டவை, ஆகவே அளவில் சிறிய கட்டுரைகள். சுடச்சுட வாசிக்க கிடைத்தவை என்றும் சொல்லலாம்.
இந்த பயணத்தில் கோயில்கள் முக்கிய நிறுத்தங்களாக அமைந்துள்ளன. சில கோயில்களை விவரிக்கும்போது, அவற்றை குறித்த வரலாற்று பின்புலமும் விவரிக்கப்பட்டுள்ளது. லெபாக்ஷி கோயில் வரும் கட்டுரையில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் தொடக்கத்தை, மாலிக் கஃபூர் படையெடுப்பிற்கு பின் வித்யாரண்யர் சுவாமிகள் ஹரிஹரர், புக்கர் இருவரையும் மீண்டும் மதம் மாற்றி விஜயநகரம் என்னும் பேரரசு தொடங்கப்பட்ட வரலாற்றை விவரித்துள்ளார்.
ஒரு பேரரசு கண் முன் எழுந்து வரும் சித்திரத்தை அளிக்கும் அதே கட்டுரையில் சிவா ஒரு ஆலமரத்தில் ஆடியதையும் விவரித்துள்ளார். இந்த இருமை வாசிப்பை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. கவிஞர் கல்பற்றா நாராயணனும் ஒரு சக பயணி என்பதால் போற போக்கில் சொல்லும் சில கவிதைக்கு இணையான அல்லது கவிதை வரிகள் குறிக்கப்பட்டுள்ளன.
பயணக்கட்டுரைகளில் பல, சமயங்களில் நமது பயண அனுபவங்களை தொட்டெடுக்கும். காகதீய பேரரசின் நல்கொண்டா விமானங்களை அடுக்கடுக்கான சாளுக்கிய பாம்சன விமானங்களுடன் பொருத்திப்பார்க்க முடிந்தது.
ஈரோட்டில் தொடங்கிய பயணத்தை, தாரமங்கலம், லெபாக்ஷி, பெனுகொண்டா, நல்கொண்டா, வாரங்கல், தர்மபுரியில்,சாஞ்சி,காசி என்று முக்கிய நகரங்கள் அனைத்தையும் தொட்டு சென்றுள்ளனர்.
சாஞ்சி ஸ்தூபியை குறித்த கட்டுரை மற்ற கட்டுரைகளை காட்டிலும் மிக நெருக்கமான ஒன்று. நல்லதொரு வாசிப்பனுபவத்தை கொடுத்த முக்கியமான நூல்.
Well done
ReplyDelete