நடந்தாய் வாழி காவேரி பயணக்கட்டுரை நூல் வாசிப்பனுபவம்.
நடந்தாய் வாழி காவேரி சிட்டி, தி ஜானகிராமன் இனைந்து எழுதிய பயணக்கட்டுரை. தமிழ் பயணக்கட்டுரை வரலாற்றில் ஏ கே செட்டியார் அவர்களின் பயணக்குறிப்புகளை போன்று குறிப்பிடத்தக்க ஒரு நூல். தி ஜா நாவல் உலகத்தில் ஒரு ஆசான், சு வேணுகோபால் போன்ற சமகால பல எழுத்தாளர்களுக்கு குருவாக விளங்குபவர். சிட்டி என்கிற பெ கோ சுந்தரராஜன் மணிக்கொடி இதழின் ஆசிரியராக இருந்தவர்.
சிட்டி, தி ஜா மட்டுமல்லாமல் உடன் ஒரு புகைப்பட கலைஞர், ஓவியர் மற்றும் மகிழுந்து ஓட்டுநர் என்று ஒரு குழுவுடன் செல்லும் பயணம் மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது.
1. தலைக்காவேரி - ஹொகேனக்கல்
பயனைக் கொண்டுதான் பெரியவர்கள் தொடங்கும் பணியின் நோக்கங்களையும் நுட்பங்களையும் அறிய முடியும் என்று காளிதாசன் அருளிய வாக்குக்கு ஒரு சான்று வேண்டுமானால் தலை காவேரியின் இந்த மௌனச் சுனையைதான் காணவேண்டும்.
தலைக்காவேரி தொடங்கி கிருஷ்ணராஜசாகர், ஸ்ரீரங்கப்பட்டணம், மேகதாட் வழியாக ஹொகேனக்கல் வரை சென்றடைந்துள்ளனர். வழியில் ஒரு முதியவரை சந்திக்கும் குழுவை குறித்து நவீன வசதிகளான மின்விசிறி ட்ரான்ஸிஸ்டர் போன்றவற்றை வைத்திருந்தார் என்று குறிப்பிடுகின்றனர்.
ஸ்ரீரங்கபட்டணத்தில் அவர்கள் தங்கியிருந்தபொழுது காலரா நோய் பரவி மக்கள் அவதியுற்றிருந்ததையும், நதியில் குடிநீர் எடுக்கச் சென்ற குழுவினர் தடுப்பூசி அலுவலருக்காக பயந்து உடனடியாக வண்டியை கிளப்பி சென்றதையும் நகைச்சுவையாக குறிப்பிடுகின்றார்.
12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ரங்கநாதர் ஆலயம், அதன் பாண்டியர் கால கட்டிட கலையையும் வியந்து பதிவுசெய்துள்ளார். மெக்கராவில் கண்ட தமிழ் பெண் ஒருவர் அவர்களை சென்று வாருங்கள் அண்ணா என்று விளித்ததை தவறாமல் குறிப்பிட்டுள்ளனர்.
தலைகாவேரியிலுள்ள பெரியதும் சிறியதுமான இரண்டு குண்டங்கள், பெரிய குண்டத்தில் மக்கள் விட்டுச் சென்ற பொன்னாபரணங்கள். காவேரி, காவேரியப்பா போன்ற பெயர்கள் குடகுப்பெயர்கள், குடகில் நடைபெற்ற திருமண காட்சிகள், பென்னாகரம் வாரச்சந்தை, அங்கு வாங்கிய பொருட்களின் வரிசைக்கிரமம் என்று ஹொகேனக்கல் வரையிலான மொத்த குறிப்பையும் பதிவுசெய்துள்ளார்.
பின் சென்னை சென்றுவிட்டு சிறிது நாட்களுக்கு பின் பூம்புகாரிலிருந்து தொடங்குகின்றனர்.
2. பூம்புகார், காவிரியின் தென்கரை வழியாக ஹொகேனக்கல்
காவிரிப்பூம்பட்டினத்தை குறித்து இவ்வாறு விவரிக்கிறார்
"இளங்கோவடிகள் ஊரும் இல்லை; காட்சியும் இல்லை இப்பொழுது. மருவூர்ப் பாக்கம் இல்லை; பட்டினப்பாக்கம் இல்லை. இரண்டுக்கும் நடுவேயிருந்த பெருவழியோ, அதன் இரு மருங்கிலும் நின்ற மரங்களோ மரங்களின் கீழுள்ள அங்காடிகளோ இல்லை. பல தேசத்து மாந்தரும், பல ஊர் மக்களும் பேசியும் கூவியும் சேடகும் கலந்த அரவம் இல்லை. கோழியை விரட்டக் காதணியைப் பிடுங்கி எறிந்த பெண் அமர்ந்த உலர் முற்றம் இல்லை. பல நாட்டுக் கப்பல்கள் இல்லை. யவனர் இல்லை. வேறொரு அந்நியரும் இல்லை. கடற்கரையில் இளங்கோ கண்ட நீண்ட வரிசையான அங்காடிகள் இல்லை. கடல்தான் வீசி வீசி அலையெறிந்து எங்களை வரவேற்றது. வேலிகளையும் வீடுகளையும் கடந்து, கடலுக்கு முன்னுள்ள மணல் வெளியில் நடந்து மீனவர் குப்பத்திற்கு அருகே போனோம். நாங்கள் போனசமயம் அங்கும் கூட்டம் இல்லை. கட்டுமரங்கள் திரும்ப வில்லையோ என்னவோ. எனவே சற்றுத் தெற்கேயிருந்த கண்ணகி சிலையைப் பார்த்துக்கொண்டு நின்றோம்."
அத்தனை காட்சிகளும் ஒரு நொடியில் கண் முன் தோன்றி மறைந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள காலசரடை இழுத்து இந்நாளில் முடிகிறார் தி ஜா, சிட்டி.
கண்ணகி, கோவலன் சென்ற வழியை பின்தொடர்ந்து செல்வதாக முடிவுசெய்து செல்கின்றனர். வழிநெடுக பாட்டும் இசையும் சிலப்பதிகார விவாதங்களுமாக கொண்டாட்டத்துடன் செல்கின்றனர். மாயவரம் தஞ்சை என்று அகண்ட காவிரி நகரான திருச்சியை அடைகின்றனர். திருவானைக்கா மற்றும் திருவரங்கம் ஆலயத்தை குறித்தும் இவ்விரு ஆலயங்களும் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய போர் காலத்தில் எவ்வாறு பாசறையாக விளங்கியதென்பதையும் உறையூரில் நடைபெற்ற அகழாய்வுகளையும் குறித்துள்ளனர்.
திருப்பராய்த்துறை உறைவிட பள்ளி அங்கு இன்றும், (இன்றும்) நடைபெறும் குருகுலக் கல்வி, மாணவர்களின் வாழ்க்கை முறை ஆகியவையும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன.
தி ஜா தஞ்சாவூர் காரர். தஞ்சையை குறித்த பதிவுகளில் அவர் கொண்ட இசை ஆர்வமும் தன இளமைக்கால நினைவுகளையும் சில பக்கங்களில் அசை போட்டிருக்கிறார்.
3. ஹொகேனக்கல், காவிரியின் வடகரை வழியாக பூம்புகார்
முடிவு
பொன்னி, என் வியர்வை, விழிநீர், நிணம், குருதி என்று எல்லாமுமாக இருப்பவள். எம்மில் பலருக்கு அவள் அன்னை, பலருக்கு மகள், பலருக்கு கடிந்து கொள்ளும் தோழி, சிலருக்கு இடித்துரைக்கும் தமக்கை. பொன்னியின் பயணமென்பது அதன் இக்கரையில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் பயணம். கரிகால் வளவன் காலம் முதல் இந்நொடி வரை வரலாற்றை மௌனமாக கேட்டுடிக்கொண்டிருக்கும் காலதின் சாட்சியம். இன்னும் இன்னும் என வளர்ந்து செழித்து ஓடிக்கொண்டே இருப்பவள்.
இது பயணக் கட்டுரையாதலால் ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி கவரக் கூடும் இந்நூல் காட்டும் காவேரி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்(1971 ல் புத்தகத்தின் முதல் பாதிப்பு வந்துள்ளது ) அவர்கள் கண்ட காவேரி. இன்று மேகதாட்டுவிலிருந்து பூம்புகார் வரை பயணம் செய்தால் முற்றிலும் வேறு வகையான சித்திரம் கிடைக்கும். Tip of an iceberg ஐ மட்டும் தான் நான் இங்கு குறித்துள்ளேன்.
- மனோ
திருச்சி (காவிரிக்கரை, 28 ஜனவரி 2023)
Comments
Post a Comment