Skip to main content

கனவு நிலம்

        ஆகுதி ஒருங்கிணைத்த மொழிபெயர்பாளர் நிர்மால்யாவின் ஒருநாள் கருத்தரங்கில் ஆசான் ஜெயமோகன் அவர்களின் உரையின்போது "ஒரு படைப்பு எழுதப்படும்போதே ஒரு மொழி பெயர்ப்பு நடந்துவிடுகிறது, முதலில் படைப்பு நிகழ்வது என்பது கனவில் தான், கனவிலிருந்து அரூபமான அது மொழியென்னும் ரூபத்தை அடைகிறது" என்றார். எந்த ஒரு படைப்பும் முதலில் நிகழ்வது கனவில்.

        தஞ்சை பெருங்கோயிலிருந்து அஜந்தா ஓவியங்கள் வரை, எகிப்து கோபுரங்களில் இருந்து ஆனந்த தாண்டவ மூர்த்தி வரை, அத்தனை படைப்புகளும் முதலில் கனவில் நிகழ்கிறது. அதற்கு மொழி என்னும் வடிவம், எனக்கு இன்னும் கற்பனைக்கான இடத்தை கொடுக்கிறது. குதிரையில் சென்று கொண்டிருக்கும் வீரன் என்ற வரியை படிக்கும்போது நான் சோழ தேசத்து வீரனை கற்பனை செய்கிறேன், மற்றொருவருக்கு அது ராஜபுத்திர வீரராக இருக்க கூடும். இப்படி பல்லாயிரம் மனிதர்களின் கனவுகள் உருக்கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு கனவு நிலம் புத்தக கண்காட்சி. அறுபத்துமூவர் சன்னதியின் அடுக்கப்பட்டிருக்கும் அத்தனை செப்பு படிமங்களையும் ஒருசேர காண்பது போன்ற பேரனுபவம்.

        வெறுமனே புத்தக அடுக்குகளையும் அங்கு வரும் வாசகர்களையும் காண்பதே பரவசமூட்டக்கூடிய அனுபவங்கள். சும்மா போயிட்டு வாங்க என்று அனைவருக்கும் பரிந்துரைப்பேன். எத்தனை எழுத்தாளர்களின், ஆய்வாளர்களின் கனவு, உழைப்பு, வாழ்க்கை இந்நூல்கள். உடலென்னும் பரு மறைந்து அழிந்த பின்னும் எத்தனை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் இந்த படைப்புகள் வாழப்போகின்றன. ஒரு மொத்த சமூகத்தின் சிந்தனை ஓட்டத்தை, ரசனையை, அறிவை அறிய ஒரே இடம் இது போன்ற புத்தக விழாக்கள்.

        தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் புத்தக விழாக்கள் நடந்தாலும் சென்னை புத்தக விழா இன்னும் அதன் மகத்துவத்தை இழக்க வில்லை. சென்னையின் முக்கிய காலாச்சார பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக எப்போதும் இருந்துவருகிறது. ஊரெல்லாம் ஆருத்ரா தரிசனம் நடந்தாலும், தில்லை நடப்பது தலையாயது என்பதை போல.

        சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சி இன்னும் அதிக பார்வையாளர்களை கண்டதாக அனைத்து பதிப்பாளர்களும் கூறியுள்ளனர். நான் சென்றது ஜனவரி 11ம் தேதி விடுமுறை நாள் என்பதாலும் கடைசி இரண்டு தினங்கள் என்பதாலும் அநேக மக்களை காண முடிந்தது. பொங்கல் விடுமுறை தினங்களில் சென்னை வாசகர் பரப்பு சொந்த ஊர்களுக்கு சென்றுவிடுவதால் குறைந்த அளவு பங்கேற்பே காணப்படும்.  

        மாலை முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, இ ஆ ப அவர்களின் உரை நடந்த அரங்கு முழுவதுமாக காணப்பட்டது. பேரரங்கிக்கே உரிய பேசும் கலை அவருக்கு இயல்பாக கை கூடி வருகிறது, சங்கப்பாடல்கள் சிலவற்றை சொல்லி சமகால பெண்களின் வாழ்க்கை குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

        மாலை ஒரு 4 மணிக்கு அரங்கிற்கு நுழைந்து 9 மணி அளவில் ஏறத்தாழ முக்கிய அத்தனை அரங்குகளையும் பார்த்து முடித்தேன். இந்த முறை நான் வைத்திருந்த பட்டியல் அதிகமும் அபுனைவு மற்றும் ஆய்வு கட்டுரைகள் சார்ந்த புத்தகங்கள். சமீப காலங்களில் குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயா அவர்களின் பனை உறை தெய்வம், ராஜேந்திர சோழன், தமிழகக் கோபுரக்கலை மரபு, வாங்கி வைத்து தொடங்காமல் இருக்கும் தேவார மரபும் ஓதுவார் மரபும் போன்ற புத்தகங்கள் தான் காரணம். 700 அரங்குகள் அமைந்த புத்தக விழாவை பார்வையிட குறைத்தது 5 நாட்களாவது வேண்டும். பபாசியின் சார்பில் ஏற்பாடுகள் சிறப்பாகவே செய்யப்பட்டுள்ளன. அத்தனை அடிப்படை வசதிகளும் அமைந்துள்ளன, அரங்கிற்குள் உணவு பண்டங்கள் மற்றும் தேநீர்,காப்பி விற்பனையை தவிர்த்திருக்கலாம். வாங்கி உண்ணும் நம் மக்கள் குப்பைகளை தடயங்களாக அங்கேயே விட்டு செல்கின்றனர்.

        ஆலயக்கலை நண்பர்கள் பரிந்துரைத்த செம்மொழி தமிழாய்வு மையத்தின் நூல்கள் பயனுள்ளவையாக இருந்தன. வண்ணதாசனை(கல்யாண்ஜி) காண முடியாமல் போனது ஒரு சிறு இசையை போல், ஒரு சிறு ஏமாற்றம் (இசையில் என்ன சிறிய இசை பெரிய இசை, அதே போல் ஏமாற்றத்தில் என்ன பெரிய ஏமாற்றம் சின்ன ஏமாற்றம்). சாருவின் அன்பு நாவலை குறித்து பேசிவிட வேண்டும் என்று அவரின் அருகில் சென்று பின் தயங்கிவிட்டேன். மனுஷின் கவிதைகளை பெரிதும் வாசித்திருக்கவில்லை என்பதனால் ஏதும் பேசவில்லை. 

        விருமாண்டி பேய்க்காமன் ஒரு அரங்கிற்கு வெளியில் நின்றுகொண்டிருந்தார் அவருடன் மக்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சமூக செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி ஒரு அரங்கில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். 

        ஆசிரியர் S ரா அவர்களை சந்தித்து உரையாடியது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.  சென்ற புத்தக கண்காட்சியில் மண்டியிடுங்கள் தந்தையே புத்தகம் வாங்கி கையெழுத்தோடு ஏதோ பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் வீடு வந்து சேர்ந்தேன். இடக்கை படித்து வெறுமையில் இருந்த நாட்களும், உறுபசி, சஞ்சாரம் நாவல்களை வசித்த நாட்களையும் நினைவு கூர்கிறேன். ஒவ்வொரு பக்கத்திற்கும் நேரம் எடுத்துக்கொன்று முயன்று படித்த நாட்கள். இப்போது வெண்முரசு படித்துக்கொண்டிருக்கிறேன் என்று சிறிது Flex செய்து கொள்ளலாம். திருச்சி புத்தக கண்காட்சியில் அவர் உரையின் பின் பேச முயன்று தயங்கி வந்துவிட்டேன். புத்தகங்களை வாசிக்கும்போது கிடைக்கும் மானசீக உரையாடலுடன் கூடவே உரைகளின் வழியாகவும் உங்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன் sir என்று சொன்னபோது புன்னகையுடன் ரொம்ப நன்றிங்க என்றார். உப பாண்டவம் வாங்கி கையெழுத்து பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

பல நண்பர்கள் இரண்டு மூன்று பக்க பட்டியலை கையில் வைத்துக்கொண்டு நூல்களை தேடிக்கொண்டிருந்தனர். ஆர். சத்தியநாதய்யர் எழுதிய `மதுரை நாயக்கர் வரலாறு’  வாங்குவதற்கு மாற்றி அ கி பரந்தாமனார் எழுதிய வரலாறு மாற்றி வாங்கிவிட்டேன். முன்னொரு முறை ஜெ வின் தளத்தில் இந்நூலை குறித்த குறிப்பை படித்ததாக ஞாபகம். பதின் பருவ வாசகர்களை நிறைய காண முடிந்தது. நம்பிக்கை கொடுக்கும் மாற்றம். நேரம் இல்லாததாலும், இத்தனை புத்தகத்தையும் திருச்சி வரை தூக்கி செல்லவேண்டும் என்பதாலும் எண்ணியதில் முக்கால்வாசி புத்தகத்தை மட்டும் வாங்கிகொண்டு ஒரு காப்பியுடன் ராபிடோவில் கிளம்பினேன். 

Comments

Popular posts from this blog

செய்நன்றி ❤️✨

எனது கல்லூரி துறைத்தலைவர் இப்போது Pollachi Institute of Engineering and Technology கல்வி ஆலோசகராக பணியாற்றுகிறார். அவர் அழைப்பின் பேரில் Pollachi Institute of Engineering and Technology என்ற கல்லூரியில் சென்ற திங்கள் அன்று முதலாம் ஆண்டு, மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களிடம் உரையாற்றினேன். இதை சொன்னபோது சில நண்பர்கள் ஆர்வத்துடன் என்ன பேசப்போகிறேன் என்று கேட்டனர், 2 நாட்கள் உழைத்து தயார் செய்த உரையென்பதாலும் பொதுவான உரையென்பதாலும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் ஆற்றிய உரையை இங்கு எழுதுகிறேன். (இது உரையின் எழுத்து வடிவம், சென்ற வாரம் கேட்டுக்கொண்டார்கள் என்பதை, “போன வாரம் கேட்டாங்க” என்று வாசிக்கவும்)  Dear Boys and girls சென்ற வாரம் mam அழைத்து முதலாம் ஆண்டு மாணவர்களிடம் பேசவேண்டும் என்று சொன்னபோது நான் கேட்ட முதல் கேள்வி ஆங்கிலத்திலா தமிழிலா என்று, பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள் அதனால் தமிழ் ஆங்கிலம் கலந்து பேசும்படி சொன்னார். முழுதும் தமிழில் பேசினாலும் செயற்கையாக இருக்கும், முழுதும் ஆங்கிலத்தில் பேசினாலும் பின் தொடர்வதில் சிக்கல் இருக்கும். மறுநாள் தான் ஒப்புக்கொண்ட...

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...