நா பார்த்தசாரதியின் சரித்திர நாவல்களுள் மிக முக்கியமான குறு நாவல் ராணி மங்கம்மாள். வடக்கில் ஜான்சி ராணி பிறப்பதற்கு மூந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒரு வீரப் பெண்மணி. நாயக்க வம்சத்து மன்னரான சொக்கநாத நாயக்கரின் ராணி மங்கம்மாளின் கணவர். சொக்கநாத நாயக்கர், திருமலை நாயக்கரின் பேரன்.
கணவன் சொக்கநாதன் இறப்பிற்கு பின் உடன் கட்டை ஏறாது தன் மகன் ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கனை வளர்த்து ஆளாக்கி அரியணையில் அமர வைத்தார். (ராஜ மௌலி இவரது கதையை படித்திருக்க கூடும்). முது வீரப்ப நாயக்கரின் இறப்பிற்கு பின் அவரது மகன் குழந்தை விஜயரங்க சொக்கநாதன் பிறந்த உடன் அவனது தாய் தந்தை இருவரும் மறித்து விடவே குழந்தைக்கு மகுடம் சூற்றி ஏறத்தாழ 18 ஆண்டுகள் மங்கம்மாளே ஆண்டு வந்தார்.
புத்தகத்தின் சுவாரசிய தகவல்களுள் ஒன்று கன்னட அரசன் சிக்கதேவரயனின் மீது முத்து வீரப்பனின் படை எடுப்பு முயற்சி. தமிழகத்திற்கும் கன்னடதிற்குமான காவிரி விவகாரம் அறுநூறு- எழுநூறு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ஒன்று. சிக்கதேவராயர் காவிரியின் குறுக்கே அணை கட்டி தமிழகத்திற்கு வரும் நீரை தடுத்து விட்டிருந்தார். உழவர்குடி மக்கள் முறையிட தஞ்சை படைகளின் கூட்டு முயற்சியோடு ஒரு படை எடுப்பிற்கு ஆயுத்தம் செய்தார் ராணி மங்கம்மாள். எனினும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை அணை உடைபுற்று நீர் தஞ்சை கடைமடை வந்தடையவே, படையெடுப்பு கைவிடப் பட்டது. (அப்போதும் இயற்கை தான் உதவியதே அன்றி ஆட்சியாளர்கள் அல்லர்)
தெற்கே மறவர் சீமையின் மீது போர் தொடுத்து தோல்வி அடைந்தது, தஞ்சை ஷாஜி அரசை வெற்றி கொண்டது , திருவிதாங்கூர் அரசின் மீது படையெடுப்பு போன்ற போர் செய்திகளும் ஆசிரியர் விவரித்துள்ளார்.
ராணி மங்கம்மாள் திரிசிரபுரம் கோட்டை மற்றும் மதுரை தமுக்கம் கோட்டையிலும் மாறி மாறி வசித்துள்ளார். ஆகவே இரண்டு நிலப் பரப்புகளும் புத்தகம் முழுவதும் விவரிக்கப் பட்டுள்ளன. ராணி மங்கம்மாள் மத நல்லிணக்கத்தை பேணி காத்த வெகு சில அரசுகளுள் ஒருவர் என்பதை அறிய முடிகிறது. தற்போது ராணி மங்கம்மாளின் கொலு மண்டபம் மலைகோட்டை அருகில் அரசு அருங்காட்சியகமாக செயல் பட்டு வருகிறது. இந்த மண்ணையும் மக்களையும் வளர்த்த அரசர்களின் வரலாறு என்பது நம் தாய் தந்தையரின் வரலாற்றை போன்றது. அத்தகைய வரலாற்றை படித்து அனைவரும் இன்புறுவோமாக.
திருமகள் நிலையம் பதிப்பகம், 250 பக்கங்களை உடைய புத்தகம்.
Comments
Post a Comment