விஷ்ணுபுரம் விருது விழா பங்கேற்பனுபவம்
வருடம் தோறும் அங்கீகாரம் கிடைக்கப் பெறாத இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு செய்யும் விதமாக நடைபெறும் விஷ்ணுபுரம் விருது விழா இவ்வாண்டு டிசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் கோவையில் நடைபெற்றது.
துவக்க நிலை இலக்கிய வாசகனாக முதல் முறை இவ்விழாவில் பங்கேற்ற அனுபவத்தை இங்கே பதிவு சேய்கிறேன். இதுவரை படித்த இன்னும் படிக்க விரும்புகிற அத்தனை ஆளுமைகளையும் சந்தித்து, உரையாடி, விவாதித்து, எழுத்தாளனை அறிந்துகொள்ளும் முயற்சியில் இன்னும் ஓர் அடி முன்வைக்க உதவும் பரந்துபட்ட வெளி தான் இவ்வகையான இலக்கிய கூட்டங்கள்.
அவ்வகையில் முதல் நாள் முழுவதும் எழுத்தாளர் வாசகர் சந்திப்புகள் நடைபெற்றன. நேரடியாக வாசகர்கள் தங்கள் வினாக்களை எழுத்தாளர்களிடம் கேட்கவும் அனுபவத்தை ஒரு துளி சுவைத்துப் பார்க்கவும் வழிவகை செய்தது.
பொதுவாக இலக்கிய விழாக்களுக்கு சென்றால் அங்கு நிறைய புதிய நண்பர்களை கண்டடைவோம். ஆனால் நான் அரங்கிற்கு செல்லும் பேருந்திலேயே ஒரு புதிய நண்பரை கண்டு கதைத்துக் கொண்டு சென்றோம்.
காலை விழா அரங்கில் நுழைந்த உடனேயே முதலில் சந்தித்தது தன்னறம் நூல்வெளியின் புத்தக கண்காட்சி. எழுதுக என்னும் புத்தகம் என்னை இருகரம் கூப்பி அழைக்க அதனை பெற்றுக் கொண்டேன். பின் தன்னை கடத்தல் புத்தகமும் இரண்டும் ஜெயமோகன் அவர்களின் புத்தகங்கள். ஆபரணம் என்னும் ஒற்றை கதையை மட்டுமே படித்து பிடித்துப்போய் திருச்செந்தாழை அவர்களை பாராட்டிக் கைகுலுக்கி, கையெழுத்தும் பெற்றேன். வண்ணதாசன் வண்ணநிலவன் குறித்தும் எங்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார்.
விழாவில் பங்கேற்றதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றான ஜெயமோகன் அவர்களின் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். வெண்முரசின் 26,000 பக்கங்களை எழுதிக் குவித்த அரக்கனிடம் கையெழுத்து பெற பேனாவை நீட்டிய போது இதுவரை வேறொரு உலகத்தில் சஞ்சரித்து சந்தித்திருந்த மனிதனை நேராக காணும் தருணம் சற்று நடுக்கத்தையும் தயக்கத்தையும் உண்டு பண்ணிற்று. ஒரு தரிசனத்தை போன்ற உணர்வுதான்.
இரண்டாவது அரங்கான காளிப்பிரசாத் அவர்களின் அரங்கைக் கேட்டு கதைகளை அவர் கையாளும் விதங்களையும் அதற்கு உந்து சக்தியாக இருந்தவற்றையும் கேட்டறிந்தோம். பின் தேநீர் இடைவேளையில் நடந்தாய் வாழி காவேரி - தி. ஜானகிராமனின் பயணக் கட்டுரைகளின் தொகுப்பை வாங்கினேன். பின் ஜா தீபா அவர்கள் எழுதிய நீலம் பூக்கும் திருமடம் என்னும் சிறுகதை தொகுப்பு புத்தகம் வாங்கினேன்.
தன் நாட்டின் குளிர் காலத்தை கடத்துவதற்காக, ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரம் தாண்டி வேடந்தாங்களுக்கு வரும் ஒரு சைபீரிய கொக்கினை நம் கண்மாயில் நீர் அருந்த விடாமல் அதனுள் கழிவுகளை கொட்டி அது அடிக்கடி தீ பற்றி எரிந்து நச்சுப் புகையினை வெளியேற்றும் படி செய்த நம்மை பற்றி அப்பறவை என்ன நினைக்கும் என்று என்றாவது சிந்தித்திருக்கிறோமா என்று சோ தர்மன் கூறிய போது, நம் அனைவருமே குற்றக் கூண்டேறும் அருகதை உள்ளவர்கள் தான் என்று தோன்றிற்று.
இரவு உணவுண்டு தாங்கும் இடத்திற்கு சென்ற போது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக முயன்று கொண்டிருக்கும் நண்பரையும், கரைக்குடியிலிருந்து வந்திருந்த நண்பர்களையும் சந்தித்து இலக்கியம் பேசினோம்.
இரண்டாம் நாள் துவக்கத்தில் காலை நடை பயிற்சி முடித்து சூரியனுக்கு முன்பே விழா முற்றத்தை அடைந்தோம். தெலுங்கு கவிதைகளை குறித்த அரங்கில் சின்ன வீரபத்ருடு பங்கேற்று வாசகர்களின் கேள்விக்கு விடை பகிர்ந்தார்.
இரண்டாம் அரங்கில் எதார்த்த வாத சினிமாவிற்கு சொந்தக் காரரான இயக்குனர் வசந்த் சாய் உடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான இடைவெளியை குறிப்பது குறித்து அநேக வினாக்களுக்கு விடையளித்தார்.
முதன் முதலாக நன் பங்கேற்ற இலக்கிய கூட்டம் இது. இதுவரை அச்சில் மட்டுமே உரையாடிக் கொண்டிருந்த ஆளுமைகளை நேராக சந்தித்து அவர்களிடம் உரையாடும் வாய்ப்பையும் அரங்கம் ஏற்படுத்தி தந்தது. இது போன்ற நிகழ்வுகள் ஊர் தோரும் தெரு தோரும் நடைபெற வேண்டும் என்பது என் கருத்து.
பணம் பேர் புகழ் முதலிய ஆடம்பரங்கள் நம்மை உயிரோடு வைத்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அனால் இசை, பாட்டு இலக்கியம் முதலியனவே உயிர்ப்போடு வைத்திருக்கும். இலக்கிய வெளியின் பரந்து பட்ட பார்வையை காணும் விதமாக ஆக்கப் பூர்வமான மூன்றாம் கண்ணை திறந்துவிட்ட விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் அனைவரும் மனதார நன்றி கூறி தழுவிக் கொள்கிறேன்.
🔥🔥🔥
ReplyDeleteநன்றி
Deleteமிகவும் அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி
Delete