நீரதிகாரம்
ஆனந்த விகடனில் வாரம் தோறும் எழுத்தாளர் அ வெண்ணிலா அவர்கள் நீரதிகாரம் என்னும் தொடரை எழுதிவருகிறார். முல்லை பெரியாறு அணையின் நெகிழ்ச்சியான சரித்திரத்தை விவரிக்கும் தொடராக வெளிவருகிறது.
தாது வருடப் பஞ்சத்தில் (1870 களில்) தேசம் முழுதும் 2 கோடி மக்கள் செத்து மடிந்தனர். மெட்ராஸ் ப்ரெசிடென்ஸியில் மட்டும் லட்சக் கணக்கில் மனிதப் பிணங்கள் குவித்துவைக்கப் பட்டன.குலக்கொடி வையை முழுதும் பொய்த்துப் பொய் தென் மாவட்ட மக்கள் மலையகத் தீவுகளுக்கு கப்பலில் அடிமைகளாகவும் பஞ்சம் பிழைக்கவும் ஆயிரக் கணக்கில் தினந்தோறும் வெளியேறிக் கொண்டிருந்தனர்.
பஞ்சத்தில் இருந்து எஞ்சிய மக்களை காக்கும் பொருட்டு மேற்காக ஓடும் பேரியாற்றை மதுரைக்கு திருப்ப அணை கட்டப் படுகிறது. ஒரு அணைக் கட்டுமானம் அதுவும் நூறாண்டுகளாக கிடப்பில் இருக்கும் திட்டம் தொடங்குவதற்கு முன்னும், தொடங்கியபிறகும் அதனை சார்ந்துள்ள அத்தனை ஜீவராசிகளையும் எவ்வகையில் தொட்டு செல்கிறது என்னும் கதையை புனைவை கொண்டு தொட்டுப் பார்த்திருக்கிறார் வெண்ணிலா அவர்கள்.
இன்று தமிழ் நாட்டில் நாம் உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் ஒரு துளியேனும் பெரியாற்றின் தண்ணீர் சேர்ந்திருக்கிறது. நம் தலைமுறை அறியவேண்டிய, அறிந்திராத வரலாறு பேரிலக்கியமாக நம் கண் முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. விகடன் சந்தா தாரர்கள் விகடன் இணையதளத்தில் மின்னிதழ் ஆகவும் படிக்கலாம். முதல் பாகமாக 32 அத்தியாயங்கள் இதுவரை வெளி வந்துள்ளன. இந்த வாரம் இரண்டாம் பாகத்தின் முதல் அத்தியாயமாக 33வது அத்யாயம் வெளிவந்துள்ளது.
படம் - விகடன் இணையதளம்
Comments
Post a Comment