நீண்ட இடைவேளைக்கு பிறகு நூலகத்திலிருந்து இரவலாக ஒரு விடுமுறை நாளில் படித்து முடித்த நாவல். ஒரே மூச்சில் படித்து முடித்த மிகச் சில நாவல்களில் இதுவும் ஒன்று, கணையாழியில் தொடர்கதையாக வந்த காரணத்தால் ஒவ்வொரு அத்தியாயமும் அடுத்த அத்தியாயத்திற்கு இட்டுச் செல்லும் அமைப்பை கொண்டுள்ளது. (வேள்பாரியை போல).
தண்ணீர் - அசோகமித்திரன் வாசிப்பனுபவம்
தண்ணீர் - 1970களின் சென்னையில் நிலவிய தண்ணீர் பற்றாக் குறையின் பின்னிலையில் நிகழும் நாவல், அசோகமிதரனுக்கே உரிய நேர்த்தியான கதைசொல்லல் பாணியில் கதையும் கதை மாந்தர்களும் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. தண்ணீர் தட்டுப்பாடு என்னும் சூழல் நாவலின் மையச் சரடாக இருந்தாலும் வெறும் அவலங்களை அள்ளி அடுக்குவதாக அல்லாமல் அக்காலத்து மெட்ராஸ், மெட்ராஸின் மனிதர்கள், அவர்கள் வாழ்வியல் முறைகள், தண்ணீர் பற்றாக்குறையால் நிகழும் அன்றாட சிக்கல்கள், என ஒட்டுமொத்த குறுக்குவெட்டு தோற்றத்தையும் இந்நாவல் தருகிறது.
வீட்டுச் சுவர் ஏறி குதித்து தண்ணீர் எடுத்து வர ஜமுனா செல்லும் காட்சி பெண்கள் ரஃபேல் விமானம் ஓட்டும் தற்காலத்தில் மிக சாதாரணமான ஒன்றாக காட்சியளிக்கும் போதிலும் ஒரு குடம் தண்ணீருக்காக தட்டுபாடோடே மக்கள் வாழப் பழகியதை இலக்கியமாக்கி வெற்றியும் கண்டிருக்கிறார் அசோகமித்திரன்.
மழை பெய்து தெருவெல்லாம் சேராக திறண்டிருக்க நடந்து செல்லும் ஒவ்வொருவர் உடையிலும் அவரவர் நடையின் வேகத்திற்கேற்ப சேறு படிந்திருக்கும் என்னும் வரி மாஸ்டர் படைப்பாளிக்கே கைகூடி வரக்கூடிய எழுத்து.
வெறும் 136 பக்கங்களே உடைய ஒரு குறு நாவல் அநேக பாதிப்புகள் வந்து ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப் பட்டு பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது. நிச்சயம் தவற விடக்கூடாத வாசிப்பனுபவத்தை இந்நூல் தரும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
Comments
Post a Comment