Skip to main content

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.

 


குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர். இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின் கல்வெட்டுகளும், மூவர் பாடல் குறிப்புகளும்.

ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும்.

  1. பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை.
  2. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது. 
  3. சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள். 
  4. யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"  என்ற பதிகம் பாடும் வரலாற்றை குறிக்கும் கட்டுரை.
  5. பெற்றமொன்றேறி பிச்சை உண்ணும் பிரான் - பிச்சை ஏற்கும் ஈசன் ரிஷபத்தில் வரும் தஞ்சையிலும் தராசுரத்திலும் உள்ள அறிய சிற்ப காட்சியை குறித்த கட்டுரை.
  6. திரிபுரம் எரித்த தேவரும் புத்தராக திருமாலும் - சிவனின் திரிபுராந்தக வடிவத்திற்கும் திருமாலின் புத்த வடிவத்திற்கும் உள்ள இணைவை விவரிக்கும் கட்டுரை. 
  7. தில்லை திருக்கோயில் - தில்லை கோயிலின் மேற்கு கோபுரத்திலுள்ள 60 கோஷ்ட சிற்பங்களின் கவின் கூறும் கட்டுரை. 
  8. ஸ்ரீநிவாசநல்லூர் குரங்கநாதர் ஆலயம் - முற்கால சோழர்களின் மிகச்சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட குரங்கநாதர் கோயில் மற்றும் அங்குள்ள தட்சிணாமூர்த்தி குறித்த கட்டுரை.
  9. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் - அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் சிற்ப வேலைப்பாடுகள் பற்றி விவரிக்கும் கட்டுரை. 
  10. சிற்பநுட்பம் குடுமியான்மலை - குடைவரை சிற்பங்கள், இசைக்கல்வெட்டு மற்றும் பாற்குளம் குறித்த கட்டுரை.
  11. காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலயம் - காஞ்சி நகரில் உள்ள 5 முக்கிய தலங்களையும், சம்பந்தர் ஆண் பனையை குலை காய்க்க செய்த புராண கதையையும் விவரிக்கும் கட்டுரை.
  12. காஞ்சி வைகுந்தப்பெருமாள் ஆலயம் - வைகுந்தப்பெருமாள் கோயிலின் சிற்ப சிறப்பையும் மூன்று நிலைகளிலும் உள்ள திருமாலின் ரூபங்களையும் விளக்கும் கட்டுரை.
  13. கோள் துயரறுக்கும் கொள்ளிக்காடு - சம்பந்தர் பாடல் பெற்ற திருக்கொள்ளிக்காடு தலம், அங்குள்ள ராஜராஜன் காலத்து கல்வெட்டின் குறிப்பு. 
  14. உம்பளப்பாடி நிலாவணை மகாதேவர் கோயில் - இந்த அத்தியாயம் எதிரிலி சோழநல்லூர் மற்றும் உம்பளப்பாடி கோயில்களில் உள்ள கல்வெட்டுகளையும் சந்திரசேகரருக்கு நிலாவணை மகாதேவர் என பெயரிட்ட பாங்கையும் விவரிக்கிறது.
  15. தேவார பாடலில் வள்ளிநாயகி - இக்கட்டுரை மூவர் பாடல்களில் குற மகள் வள்ளி பற்றிய குறிப்புகளை ஆய்கிறது.
  16. தென்குடி திட்டை கோயில் - பாண்டியர் கால கல்வெட்டுகளையும் கோயில் சிற்பங்களையும் விவரிக்கும் அத்தியாயம்
  17. செங்கணான் செய்த கோயில் சேர்மின்களே - சோழ அரசன் செங்கணான் குறித்த பெரியபுராண குறிப்புகளுடன் அவன் எழுப்பிய 70 மாட கோயில்களை விவரிக்கிறது. திருவானைக்காவின் தலவரலாற்றையும்  தாராசுரத்தில் உள்ள கோச்செங்கணான் சிற்பத்தொகுதியையும். மேலும்  குடந்தை மானம்பாடி கைலாசநாதர் கோயிலில் கோஷ்ட சிற்பத்தில் உள்ள மகர தோரணத்திலிருக்கும் ஆனைக்கா தலவரலாற்று சிற்பத்தை குறிக்கிறார்.  இந்த சிற்பத்தில் நாவல் மரம் யானை சிலந்தியுடன் காவிரி பெண்ணாக நின்று சாமரம் வீசும் விதமாக படைக்கப் பட்டுள்ள செய்திகள் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. 
  18. மூன்று சோழ மன்னர்கள் படைத்த மூன்று ஆலயங்கள் - முதலாம் ராஜராஜன் எடுத்த தஞ்சை பெரிய கோயிலும், முதலாம் ராஜேந்திரன் எடுத்த கங்கை கொண்ட சோழபுரமும், இரண்டாம் ராஜராஜன் எடுத்த ஐராவதீஸ்வரர் கோயில் மூன்றையும் விவரிக்கும் அத்தியாயம். 
  19. உழவனும் உழத்தியுமாக - திருநாட்டியாத்தான் குடி கோட்புலி நாயனாரின் கதையையும் உழவன் உழத்தியாக சிவசக்தி காட்சியையும் விவரிக்கிறார்.
  20. சம்பந்தர் மேடு - நாவுக்கரசரை காண பல்லக்கில் வந்த ஞான சம்பந்தர் "எங்குற்றார் அப்பர்" என்று வினவ "இங்குற்றேன்" என்று பதிலுரைத்து நாவுக்கரசர் ரூபம் காட்டிய இடம் திருப்பூந்துருத்தி திருவாலம்பொழில் ஆகிய தலத்திற்கு அருகில் உள்ள சம்பந்தர் மேடு. இக்கட்டுரை இத்தலத்தினை பற்றியது.
  21. அப்பர் தேவாரத்தின் அற்புத சிற்பக்காட்சி - தாராசுரத்தில் உள்ள ஒரு சிற்பத்தொகை ஐயாற்றில் அத்துணை இணைகளும் சிவசக்தியாக காட்சியாக காணும் அப்பரை குறித்து அமைந்துள்ளது, அதனை விவரிக்கும் கட்டுரை. 
  22. புகழ்துணையார் புகழ்பாடிய பிள்ளையும் நம்பியும் - அரிசிற்கறைபுத்தூர் இறைவனுக்கு தொண்டு செய்யும் புகழ்துணையார் வறுமையை போக்க இறைவன் தினம் ஒரு காசு கொடுத்த கதையை விவரிக்கும் தாராசுர சிற்பத்தொகையை விளக்கும் கட்டுரை.
  23. மூவர் சுட்டும் வயல் மீன் வளம் - மூவர் பாடல்களில் குறிக்கப்பட்டுள்ள மீனினங்களையும் நீர் வளங்களையும் விவரிக்கும் கட்டுரை.
  24. கம்போடிய நாட்டு அரசன் அனுப்பிய காலைத்தேர் - காம்போஜ நாட்டை ஆட்சி செய்த முதலாம் சூர்ய வர்மன் முதல் ராஜேந்திர சோழனுக்கு பரிசாக கொடுத்த தேரை குறித்த கரந்தை கல்வெட்டுகளை குறித்த கட்டுரை.
  25. தலமரங்களும் தீர்த்தங்களும் - நமது மரபில் தல மரங்களும் தீர்த்தங்களும் ஆன்மீக பயணத்தில் உள்ள இடத்தையும், திருவிமானத்தில் வீழும் மழை நீர் குளங்களில் சேகரமாகும் வகையில் அமைந்துள்ள கட்டிடக்கலையையும், மருத்துவம் மற்றும் ஆன்மீக தளங்களில் தல தீர்த்தங்கள் கொண்டுள்ள இடத்தையும் விவரிக்கும் கட்டுரை.
இரண்டுகளுக்கு முன் கோவை புத்தக விழாவில் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் ஜெயமோகன் சொன்ன ஒரு கூற்று ராஜராஜேச்வரம் என்று ஒரு நூலை மட்டுமே எழுதியிருந்தாலே அது வாழ்நாள் சாதனை ஆனால் குடவாயில் ஐயா அதே போன்ற ஆய்வை கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் குறித்தும் செய்திருக்கிறார் என்றார். 

இந்த நூலை முடிக்கும்போது மலைப்பாக உள்ளது, எத்தனை தகவல்கள், எத்தனை குறிப்புகள், அனைத்து கட்டுரைகளும் புகைப்படங்களையும் கொண்டுள்ளன. தராசுரத்தை குறித்த சிற்பத்தொகைகளும், ராஜராஜேஸ்வரத்தில் உள்ளதாக குறித்துள்ள சிற்பங்கள் அனைத்தும் சிறிய சிற்ப தொகைகள். இதனை கண்டு அடையாளப்படுத்துவதற்கு ஆய்வாளர்களின் துணை இன்றியமையாததாகிறது. பெருங்கோயில்களை குறித்த ஆய்வு நூலை போன்றே இந்நூல் விவரிக்கும் அளவில் சிறியதான அதே சமயம் வரலாற்று உன்னதம் வாய்ந்த தலங்களை அறிவதும் இன்றியமையாதாகிறது. மிகுந்த உழைப்பை கோரும் இத்தகைய நூலை செய்தளித்தமைக்கு தமிழ் சமூகம் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறது.

இந்நூலை முடித்த கையேடு தேவார மாண்பும் ஓதுவார் மரபும் என்ற நூலை வாங்கி வைத்திருக்கிறேன், இந்திர நீலம் முடிந்ததும் தொடங்கவேண்டும்.


Comments

Popular posts from this blog

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

கொட்டுக்காளி - Subtlety 🤍

இன்று மாலை கொட்டுக்காளி படம் பார்த்தேன். அதனை பற்றிய ரசனைக்குறிப்பு. வெகு நாட்களுக்குப்பின் ஒரு முழு தமிழ் படம் பார்த்த உணர்வு. சமீபத்தில் பார்த்த ஏறத்தாழ அனைத்து தமிழ் படங்களிலும் துப்பாக்கி குண்டுகள் முழங்கியவண்ணம் இருந்தன. சண்டைக்காட்சிகளின் மொத்த தொகுப்பாகவும் இடைச்செருகலாக சிறு வசனங்களாகவும் இருந்தன. கொட்டுக்காளி உண்மையில் பாலமலைக்கு ஷேர் ஆட்டோவில் நானும் நெருக்கி பிடித்துக்கொண்டு சென்று வந்த உணர்வை கொடுத்தது. ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால்  பல அடுக்குகள் கொண்ட உண்மைக்கு மிக நெருக்கமான சினிமா,  கொட்டுக்காளி . பின்னணி இசை இல்லை என்பது படத்தின் இன்னொரு தனித்துவம். அந்த இடைவெளியை இயற்கையின் சப்தத்தையும், நிசப்தத்தையும் கொண்டு நிரப்பியிருக்கிறார்கள். ஒரு பேட்டியில் படத்தொகுப்பாளர் கதை ஒரே நாளில் நடப்பதால் வெயிலின் தொனி(tone) ஒன்றாக இருப்பதற்காக மெனக்கெட்டோம் என்று சொல்லியிருந்தார். ஒவ்வொரு காட்சியின் ஒளிக்கலவையிலும் ஒவ்வொரு புல்லின் அசைவில் வரும் ஒலியிலும் மெனக்கெடல் தெரிந்தது.   முதல் காட்சியில் மீனாவிற்கு வைக்கப்படும் திருநீறு நெற்றிப்பொட்டிற்கு நேராக அல்லாம...