மூன்றாவது முறையாக அலாரத்தை அனைத்தபோது மணி 6 அடித்திருந்தது, இங்க் பில்லெரில் ஒவ்வொரு துளியாக உரிவது போல் நீளம் நீங்கி வானம் வெளுத்துக் கொண்டிருந்தது. சட்டென்று கிளம்பி பேருந்து நிறுத்தத்தில் ஒரு டீ குடித்துவிட்டு பேருந்துக்காக காத்திருந்தபோது துறையூர் பேருந்து வந்ததும் 2 மூட்டைகளை ஏற்றுக்கொள்ள சொல்லி நடத்துனரிடம் பாட்டி சண்டை பிடித்துக் கொண்டிருந்தார். சுவாரசியமா நடந்து கொண்டிருந்த சண்டையை இடைமறித்து திருவெள்ளறை கோவில் போகுமா என்று கேட்டபோது "போகும் பின்னாடி ஏறுப்பா" என்றவர் கடைசி படியில் கால்வைத்தபோது என்ன நினைத்தாரோ தெரியவில்லை "கோவில் போகாது வளைவுல இருந்து நடந்து போங்க" என்றார் சரி என்று சொல்லி, ஏறி கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டேன் நல்லவேளையாக பேருந்தில் ஒலிபெருக்கி ஒன்றுமில்லை. காலை அமைதியை குலைக்காமல் ஊர்ந்து சென்றது.
இருபுறமும் கரைதொட்டு ஓடும் கொள்ளிடத்தை பார்த்தபோது வாழ்நாள் முழுக்க வறுமையில் வாடிய ஒரு மனிதன் ஊருக்கெல்லாம் செல்வம் கொழித்து பெருகுவது போன்று கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது. ஓட்டுநரும் வேடிக்கை பார்த்தபடியே பொறுமையாக மி க பொ று மை யாக ஓட்டிச் சென்றார். சென்னை நேப்பியர் பாலத்தை நகலெடுத்து கொள்ளிடம் பாலத்தின் இருபுறமும் அரை வட்ட வளைவுகளை கட்டிவிட்டனர். வருடம் ஒரு பொழுது முழுக் கொள்ளளவை எட்டும் காட்சியை கூட முழுமையாக பார்க்கமுடியாத படி.
மண்ணச்சநல்லூர் பொன்னி என்று அடிக்கடி கேட்கும் வார்த்தையின் பொருள் அப்போது தான் புரிந்தது, இருமருங்கும் நெல் வயல்கள் பச்சையில் உள்ள அனைத்து நிறங்களிலும் செழித்திருந்தது. சரியாக Google Maps ல் புண்டரீகாக்ஷப் பெருமாள் கோவிலுக்கு நான்கு கிலோமீட்டர் தூரம் என கட்டிக்கொண்டிருந்தபோது சட்டென்று வண்டி நின்றதால் இங்கிருந்தே நடந்துசெல்லவேண்டும் என்றெண்ணி இறங்கப்போனபோது நடத்துனர் "இன்னும் போகணும் 5 நிமிஷம் இருங்க சாப்பிட்டு வந்துர்ரோம்" என்று சொல்லி இறங்கிச் சென்றனர்.
மீண்டும் வண்டித்தொடங்கி அவர் சொன்னதுபோல சரியாக 5 நிமிடத்தில் நுழைவு வாயிலில் இறக்கிவிட்டனர். ஒருகிலோமீட்டர் உள்ளே நடந்து சென்றபின் தமிழகத்தில் எஞ்சியுள்ள ஒரே ஹொய்சள பாணி (முழுமை பெறாத) கோபுரத்தை காணமுடிந்தது. ஒரு முழு கோபுரத்தை சிரியவடிவில் பல உருவங்கள் செய்து அவை அனைத்தையும் ஒன்றிணைத்து கட்டப்பட்டது போன்ற வடிவமைப்பு. சிறு திரு அல்லிக்கேணியிலிருந்து வந்திருந்த ஒருவர் இன்னும் கருவறை திறக்கவில்லை என்று வாசலில் யாரையோ தேடிக்கொண்டிருந்தார்.ஏழரை மணியாகியும் இன்னும் சில சன்னதிகள் திறக்கப்படவில்லை.
வெண் மணலாலான சிறு குன்றின் மீது அமைந்துள்ள ஆலயம். தை முதல் ஆனி வரை உத்ராயண வாசல், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன வாசல் என இரண்டு வாயில்கள். இப்போது ஆடி மாதமாதலால் தட்சிணாயன வாசல் வழியாக மூலஸ்தானத்திற்கு படியேறி செல்லவேண்டும். நின்ற கோலத்தில் பெருமாளும் வலது புரம் தாயாரும் இடது புரம் தவம் செய்யும் கோலத்தில் மார்க்கண்டேய மகரிஷியும். அவருக்கு பின் மனித உருவத்தில் கருடாழ்வாரும் தாயாருக்கு பின் ஆதிசேஷனும் மூலவருக்கு முன் உற்சவர் சிலைகளும் என கருவறை முழுக்க வைகுண்டம் போன்று விக்ரகங்கள். உலகில் உள்ள கருமை அனைத்திற்கும் ஆதி கருமை என்று ஒன்றிருக்குமாயின் அந்த கருமை நிறத்தில் இருந்தது புண்டரீகாக்ஷப் பெருமாள் திருவுருவம். நாலாயிரம் பிரபந்தங்களோடு நிறுத்தியது தவறு இன்னும் ஒரு நான்கு லட்சம் பாடியிருக்கலாம் என்று தோன்றும் சிலிர்ப்பை தந்தது. மூலஸ்தானத்திற்கு இடப்புறம் பெரியாழ்வார் திருமொழி அச்சிடப்பட்ட பதாகை வைக்கப் பட்டிருந்தது.
மூலஸ்தானத்தை சுற்றிவரும் பாதையில் தாயார், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள் மற்றும் தசாவதார சன்னதி முதலானவையும், ஐந்தாம் பிரகாரத்தில் மார்க்கண்டேயர் தவம் செய்ததாக சொல்லப்படும் குகையும், ஸ்வஸ்திக் வடிவிலான குளத்தையும் காணமுடியும். ஆலயம் முழுக்க கிளிகளின் கீச்சிடலும் குரங்குகளும் மயில் அகவல்களும் கேட்டபடியே இருந்தது. நூறு கிளிக்கு ஒரு மனித உருவம் என்ற அளவில் கூட மனித நடமாட்டம் அல்லது கோவில். வைகுண்ட ஏகாதசிக்கு நாள் முழுக்க காத்திருந்தும் ஒரு நொடியில் கால் பங்குநேரம் கூட நிற்க முடியாத திருவரங்கம் நினைவிற்கு வந்தது.
- மனோ
Comments
Post a Comment