தில்லை பெருங்கோயில் வரலாறு - வெள்ளைவாரனர் எழுதிய தில்லை ஆடல்வல்லான் கோயில் குறித்த ஆய்வு நூல். 1987ல் நடைபெற்ற தில்லை கோயிலின் குடமுழுக்கை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல்.
சென்ற ஜனவரியில் ஆலயக்கலை நண்பர்களுடன் சென்ற தில்லை பயணத்தின்போது ஆசிரியர் ஜெயக்குமார் தில்லை பெருங்கோயிலை குறித்து அறிவதற்கு பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று தில்லை பெருங்கோயில் வரலாறு. இந்நூலில் தில்லையின் தொன்மம், பண்ணிசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, இசை, நாட்டியம் என்று பல கோணங்களில் தில்லையில் வரலாற்றை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார் வெள்ளைவாரனர் அவர்கள்.
தில்லை கோயில் உலகபுருடனின் இதயக்கமலமாக கருதப்படுவது. சைவத்தில் கோயில் என்ற சிறப்பு பெயர் தில்லையை குறிப்பது. திருமுறைகள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது, சிவபெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவது, சைவ சித்தாந்தத்தின் படி ஈசன் ஐந்தொழில் நிகழ்த்துவது, ஆடல்கலைகள் செழித்து வளர்ந்தது என்று பல கோணங்களிலும் தில்லை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தலம்.
தில்லை பெருங்கோயிலின் தொன்மை என்ற முதல் இயலில் வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி ஆகியோரில் தொடங்கி சமகால சிதம்பரத்தில் சைவ புரவலர்கள் வரை ஒரு அறிமுகம் உள்ளது.
தலபுராண செய்திகள் என்ற இயலில் அத்யந்தன முனிவருக்கு மகனாக பிறந்து புலிக்கால் பெற்று வியாக்ரபாதர் ஆனது, ஆதிசேஷன் அவதாரமான அனந்தன் பதஞ்சலியாக வந்து பூசித்தது, கௌடதேசத்து அரசன் சிங்கவன்மன் சிவகங்கை குளத்தில் நீராடி இரண்யவன்மனாக ஆனது, பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி தில்லை மூவாயிரவர் அந்தர்வேதி வேள்வியில் பங்கேற்றது, அவர்கள் தில்லை திரும்பும்போது ஒரு எண் குறைய தாமும் இவர்களுள் ஒருவன் என்று அம்பலவாணரின் அசரீரி கேட்டது, இரண்யவன்மனுக்கு வியாக்ரபாதர் புலிக்கொடி கொடுத்து அரசாள பணித்தது என்ற புராண செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.
மூர்த்தியும் தீர்த்தமும் என்ற இயலில் சிவகங்கை தொடங்கி குய்ய தீர்த்தம், புலிமடு, வியாக்ரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகசேரி தீர்த்தம், பிரம தீர்த்தம், சிவப் பிரியை, திருப்பாற்கடல், பரமானந்த கூவம் என்ற 10 தீர்த்தங்களும் அவற்றில் நிகழும் திருவிழாக்களும், தொடர்புடைய புராண செய்திகளும் உள்ளன.
திருக்கோயில் அமைப்பு என்று இயல் சிற்சபையின் கூறுகள் தொடங்கி அந்த அமைப்பின் தத்துவ விளக்கங்கள் பேசப்பட்டுள்ளன.
- சிற்சபை - நடேசர் ஆனந்த தாண்டவமாடும் சபை, கருவறை
- கனக சபை - சிற்சபையை தொட்டெடுத்த சபை
- நிருத்த சபை - சிற்றம்பலத்திற்கு நேர் எதிர் உள்ள சபை காளிக்கும் நடராஜருக்கும் நடன யுத்தம் நிகழ்ந்த சபை.
- தேவ சபை - உற்சவ மூர்த்திகள் எழுந்தருளும் சபை
- ராஜ சபை - ஆயிரங்கால் மண்டபம்
ஆகிய ஐந்து சபைகளும், பிரகாரங்களும், திருமூலட்டானர் முதலான சன்னதிகளும், நான்கு திசை கோபுரங்கள் என ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியின் அமைப்பும் விளக்கப்பட்டுள்ளது.
தில்லையில் கூத்தப்பெருமானை வழிபாட்டு பேறுபெற்றோர் முருகன், அர்ச்சுனன், திருமூலர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர், திருமாளிகை தேவர் முதலான திருவிசைப்பா ஆசிரியர்கள், ஐயடிகள் காடவர்கோன், நக்கீரர், திருவெண்காட்டடிகள், நம்பியாண்டார் நம்பிகள், தெய்வ சேக்கிழார், தில்லை வாழ் அந்தணர், திருநாளைப்போவார் எனும் நந்தனார், கூற்றுவ நாயனார், கணம்புல்லர், கோச்செங்கசோழர், முதல் வரகுண பாண்டியன், திருவதிகை மணவாசங்கடந்தார் மற்றும் பல அடியவர்கள் தில்லை இறைவனை வழிபட்டதும், அவர்களின் திருப்பணியும் கூறப்பட்டுள்ளது.
தில்லை பெருங்கோயிலின் நாள் வழிபாடும் திருவிழாக்களும் தினந்தோறும் நடராஜர், ஸ்படிகலிங்கம் மற்றும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு நடைபெறும் பூஜைககள், ஆறுகாலங்கள், நெறிமுறைகள், அர்த்தசாம பூஜை பேசப்பட்டுள்ளன. அர்த்தசாம பூஜையின் போது எல்லா கோயில்களிலும் எழுந்தருளியுள்ள திருவருட்கலைகள் அனைத்தும் அம்பலக்கூத்தனிடம் ஒடுங்குகின்றன என்ற அப்பரின் புக்க திருத்தாண்டகத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.
தேவார ஆசிரியர் காலந்தொட்டே நடக்கும் ஆனி திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை போன்ற பெருந்திருவிழாக்களில் நடக்கும் பஞ்சமூர்த்திகளின் புறப்பாடு போன்றவையும் விரிவாக ஆவனப்படுத்தப்பட்டுள்ளன.
தில்லை திருப்பணி என்ற இயல் தான் இந்த ஆய்வின் மிகசிறந்த சாதனையாக நான் கருதுவது. புத்தகத்தில் உள்ள மற்ற இயல்களை காட்டிலும் மிக விரிவான தகவல்கள் கல்வெட்டு சான்றுகள், இலக்கிய குறிப்புகளுடன் விரிவாக பேசப்பட்டுள்ளது. அத்தனை கல்வெட்டு மற்றும் அடிக்குறிப்புகளை குறிப்பிடவே தனியொரு கட்டுரை வேண்டும்.
உதாரணமாக நடராஜர் அமைந்துள்ள பேரம்பலத்தின் கூரையே பலமுறை போன்வெய்யப்பட்டுள்ளது. நம் நினைவில் பொன்வேய்ந்த பெருமாள் என்று முதலாம் பராந்தகன் மட்டுமே பதிந்துள்ளது. அவையனைத்தையும் ஆவணப்படுத்தியுள்ளார்.
தில்லையின் நான்கு கோபுரங்களும் நான்கு பெருமன்னர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் எழுப்பப்பட்டுள்ளன.
- தெற்கு கோபுரம் - முதல் கோப்பெருஞ்சிங்கன்
- மேற்கு கோபுரம் - சடையவர்மன் சுந்தரபாண்டியன்
- வடக்கு கோபுரம் - கிருஷ்ணதேவராயர்
- கிழக்கு கோபுரம் - இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன்
சோழர்கள், பிற்கால பல்லவர்கள், பாண்டியர்கள், சேரர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், மராட்டியர் என்று பல்வேறு காலகட்டங்களில் தில்லை கோயில் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. அவையனைத்தையும் கால வரிசைப்படி தக்க சான்றுகளுடன் விவரித்துள்ளார்.
தில்லை சிற்றம்பல பெருங்கோயிலில் வளர்ந்த கலைகள் தேவார காலந்தொட்டோ அல்லது அதற்கு முன்பிருந்தோ தில்லை நாட்டியம் இசை மற்றும் பல கலைகள் செழிக்கும் இடமாக இருந்திருத்தல் வேண்டும், இதனை
நரம்புடை யாழ் ஒலி முழவின் நாதவொலி வேதஒலி
அரம்பையர்தங் கீத ஒலி அறாதில்லை
என்ற தடுத்தாட்கொண்ட புராண வரிகளால் அறியலாம்.
தில்லை திருக்கோயிலின் நிர்வாகம் தில்லை கோவில் நிர்வாகம் மன்னனது நேரடி பார்வையில் நிகழ்ந்துள்ளது எனவும் தற்போது தில்லை வாழ் அந்தனரின் நிர்வாகத்தில் உள்ளது என்பதையும் கூறியுள்ளார்.
இந்நூலின் பிற்சேர்க்கை கட்டுரைகளும் சுவாரஸ்யமானவை. கோவிந்தராஜ பெருமான் எழுந்தருளிய வரலாற்றை குறித்து ஒரு கட்டுரையும், முகமதியர் படையெடுப்பின்போது நடராஜர் திருமேனி இடம் பெயர்ந்ததை விவரிக்கும் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன.
இந்நூல் ஒரே மூச்சில் படித்து முடிக்கத்தக்கது அல்ல, ஒவ்வொரு முறையும் மீண்டும் வாசிக்க பல்வேறு அடிக்குறிப்புகளை கொண்டுள்ள ஆய்வு நூல். ஒவ்வொரு பக்கத்திலும் திருமுறைகளும் சித்தாந்த விளக்கங்களும் தென்னிந்திய கல்வெட்டு தொகுதி மற்றும் Epigraphia Indica போன்ற கல்வெட்டு சான்றுகளும் உள்ளன. நான் படித்தது ஆர்கைவ் தளத்தில் PDF ஆகி பதிவிறக்கி ஆனால் புத்தகமாக இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். 2008ல் சந்தியா பதிப்பகம் இதன் மறு பதிப்பை வெளியிட்டுள்ளது.
வெளி இணைப்புகள்
மனோ,
12 மார்ச் 2025
Comments
Post a Comment