Skip to main content

கலைஞனும் கர்வமும்

 சில நாட்களுக்குமுன் நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது சற்றுநேரம் செல்பேசியில் ஏதோ பார்த்திருந்துவிட்டு சட்டென்று செவிப்பொறியை நீக்கியபடி "இந்த இளையராஜா ஏன் டா இவளோ திமிரா இருக்கான்" என்றான். 

அந்த ஒருவரி நாள்முழுக்க ஒரு பதட்டத்தை கொடுத்தது. ஒரு கலைஞனை புரிந்து கொள்வதற்கு மரபார்ந்த ஒரு பயிற்சி தேவைப்படுகிறது. பாரதியாரின் வாழ்வில் நிகழ்ந்ததாக சொல்லப்படும் ஒரு சம்பவம். ஒருமுறை கடற்கரையில் நடைப்பயிற்சி சென்றுகொண்டிருந்தபோது வக்கீல் ஒருவர் "என்னய்யா உங்க தலைவர் திலகர் ஏதோ புதிய இயக்கம் தொடங்கியிருக்கிறானாமே" என்று கேட்டபொழுது திலகர் உனக்கு அவனா என்று பேச்சு முற்றிப்போய் கைகலப்பில் முடிந்திருக்கிறது.

இச்சம்பவத்தில் வக்கீலும் பாவம் தானே, அவருக்கு ஒரு தரப்பு இருக்குமல்லவா, அவர் திலகரை பற்றி அறிந்திராமல் இருந்திருக்கலாம் இவர் தானே பொறுமையாக நடந்து கொண்டிருக்கவேண்டும் என்று கூறும் ஏதொரு மனிதரிடமும் எனக்கு பேச ஒன்றுமில்லை. அக்கூட்டத்தினர் ஒருநாளும் கலைஞனாகவோ, ஏன் ரசிகனாகவோ கூட இருக்கமுடியாது. கலைஞன் என்பவன் எப்போதும் தழும்பிக்கொண்டிருக்கும் உணர்ச்சிக் குவியல்.  ஒரு மனிதனுக்கு உணவு இல்லையென்றால் ஒரு ரொட்டியை பிச்சையாகப்போடும் இந்த சமூகத்திற்கு எதிராக நின்று ஜகத்தினை அழித்திடுவோம் என்று கூறும் ஒரு கலைஞனின் மனநிலை இன்னும் நாம் புரிந்துகொள்ளவில்லை.   இன்னும் சொல்லப்போனால் அவ்வுணர்ச்சிகள் தான் மொழி, இசை, சிற்பம், ஓவியம் என்று ஏதோவொரு வடிவமாக சமூகத்திற்கு படைக்கப் படுகிறது. 

ராஜாவின் கதைக்கு வருவோம், கால்நூற்றற்றாண்டு காலம் ஒரு இனக்குழுவிற்கே இசை ரசனையை மேம்படுத்திய ஒருவன், ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த ஒருவன், பஞ்சமுகி என்ற புதியதொரு ராகத்தை கண்டடைந்த ஒருவன், சிறிது கர்வத்தோடு இருக்கத்தான் செய்வான். ஏனைய சிறு கூழாங்கற்களுக்கு மத்தியில் ஒரு குன்றாக, ஒற்றைப்பெரும் சகாப்தமாக எழுந்துநிற்கும் ஒருவன் கர்வத்தோடு தான் இருப்பான்.

இந்த சமூகம் வகுத்து வைத்துள்ள பண்பான, நல்ல குணமுள்ள, சாதுவான மனிதர்கள் யாவரும் தன சுற்றமும் நட்பும் என்கிற வட்டத்தை தாண்டி ஏதேனும் ஒரு கலாச்சார பண்பாட்டு பங்களிப்பை ஆற்றியிருக்கிறோமா என்றால் இல்லை.

இது கர்வம் என்பதைய் தாண்டி, நிமிர்வு. இன்னும் முன்னூறு ஆண்டுகள் வந்தாலும் என்னை விஞ்சும் ஒரு செயலை எவரும் செய்யப் போவதில்லை என்னும் தன்னுணர்வு. தன்னால் மட்டுமேயான ஒரு செயலை கண்டடைந்து, அதை செய்தும் முடித்திருக்கிறேன் என்றும் தன்னிறைவு. செயல் என்பதே ஒருவகையில் ego வை பெருக்கிக்கொள்வது தான்.

ராஜாவின் கர்வமானது தன் துறையில் முன்னோடிகள் என்னும் கலைஞனின் முன்பு பணிவாக மாறியிருப்பதை பார்க்கமுடியும். கர்நாடக இசையின் முன்னோடிகளில் ஒருவரான பால முரளி கிருஷ்ணா அவர்கள் ஒரு கச்சேரியில் பாடவந்தபோது அவர் காலில் விழுந்து வணங்கிய காட்சி இணையத்தில் இருக்கிறது. 

ஒரு முறை எழுத்தாளர் s ராமகிருஷ்ணன் ஒரு விழாவில் பேசிக்கொண்டிருந்தபோது மம்முட்டி அவர்கள் அரங்கில் நுழையவே மக்கள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட, இந்த கூட்டம் பார்க்கும் கூட்டம் என்று தெரிந்திருந்தால் நான் வந்திருக்கமாட்டேன் என்று சொல்லி பேச்சை நிருத்தியிருக்கிறார். அந்த S ராமகிருஷ்ணன் தான் அசோகமித்ரனையும் மௌனியையும் அலைந்து அலைந்து சென்று சந்தித்திருக்கிறார்.

இந்த அசாதாரண மனிதர்களின் பண்பு என்பது அவர்களின் செயல் மூலமாக, சாதனைகளின் மூலமாக, இந்த உதித்து, உண்டு, உறங்கி, உய்த்து, மரிக்கும், இந்த மக்கள் திரளில் ஒருவனல்ல நான், ஒரு மகத்தானவன் என்னும் நிமிர்வு கொடுப்பது. கூட்டத்திலிருந்து ஒரு அடி உயர்ந்து நிற்கும் உயரம் கொடுப்பது. கம்பனில், பாரதியில், தொடங்கிய அந்த கர்வம் Virat kohli வரை நீள்கிறது. சச்சினுக்கு அடுத்தபடியாகஇந்தியாவிற்கு அதிக ஓட்டங்களை குவித்த ஒருவன், Dravid ஐ காட்டிலும் அதிக ஓட்டங்களை குவித்த ஒருவன்,  25000 ரன்களுக்கு மேல் குவித்த ஒருவன், கர்வத்தோடு தான் இருப்பான். 

அவர்களிடம் சாதாரண தன்மையை எதிர்பார்க்கும் இந்த சமூகமும் அதன் பாமர மனப்பான்மையின் மீதும் ஒரு துளி இரக்கமே எனக்கும் எஞ்சியிருக்கிறது.

Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.   குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர்.  இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின்  கல்வெட்டுகளும்,  மூவர் பாடல் குறிப்புகளும். ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும். பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது.  சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள்.  யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"...