Skip to main content

யுவனுடன்


காலம் உன்னை உயிரோடு வைத்திருக்கிறதென்றால் உனக்காக ஏதோ ஓர் அதிசயத்தை ஒளித்துவைத்திருக்கும். 

22-12-2022, வியாழன், மாலை 5 மணி

வெறுமனே நடைபயிற்சி சென்று கொண்டிருக்கும் யுவனின்(இளைஞனின்) எதிரில் யுவன் சந்திரசேகர் என்ற ஆதர்ச எழுத்தாளர் எதிர்கொண்டழைத்தால் எப்படியிருக்கும். இரண்டுமணி நேரமளவிற்கு ஜே கிருஷ்ணமூர்த்தியிலிருந்து, தாய் மார்க்ஸிம் கார்க்கி வரை அநேக புள்ளிகள் தொட்டுச் சென்றார். master class என்னும் பதம் இப்போது பிரபலமாகி வருகிறது, மணி ரத்னம் அவர்கள் சினிமா கற்று தருவதுபோல், மெஸ்ஸி கால்பந்து ஆட கற்றுத்தருவதுபோல், மாஸ்டர்கள் தங்கள் துறை பற்றி கத்துக் குட்டிகளுக்கு கற்றுத் தருவது. அப்படியான ஒரு சந்திப்பு இன்று மாலை நிகழ்ந்தது.


நன்றி - தமிழ் விக்கி 


இரண்டாம் சுற்றின் போது தூறிய தூறல்கள் நாங்கள் பேசியதை ஒட்டுக் கேட்டிருக்கக் கூடும். தான் எழுதிய அற்புதமான வரிகள் சிலவற்றை தான் தான் எழுதினோமா என்று என்னக்கூடுமென்றும் பின்னொரு நாள் அது தன்னை போன்ற ஒரு படைப்பாளன் முன்பே கண்டறிந்த ஒரு உச்சம், அது இருவருக்குமானது அல்ல. இப் பிரபஞ்சத்திற்கானது என்றார் . நிழல் பிதுங்கி வழிந்த என்ற வரி எழுதிவிட்டு நல்ல இருக்கு ல? என்றார். பின் the shadow is squeezed என்று ஒரு ஆங்கில நாவலில் ஏறத்தாழ அதே உவமையை கண்டதைச்  சொன்னார். 



மணற்கேணி 

மூன்று சுற்று காலனியை சுற்றி நடந்துவிட்டு, வீட்டிற்கு அழைத்து காப்பியும் கொடுத்து கற்றுத் தந்தார். ஒளிவிலகல் மற்றும் மணற்கேணி ஆகிய அவரது நூல்களை கையொப்பமிட்டு பரிசாகத் தந்தார். சுந்தர ராமசாமியுடன் நடந்த உரையாடலை சொன்னதால் எவ்வளவு பணம் தரவேண்டும் என்று நன் கேட்க விரும்பவில்லை. பின் வரலாற்றின் மீது ஒரு ஒவ்வாமை ஏன் வருகிறதென விளக்கினார். "என் தாத்தா ஜோசியக் காரர்" என்ற பதம் உனக்கும் எனக்கும் எவ்வகையிலேனும் பயனளிக்கவில்லையாயின் எதற்கு அதை குறித்துவைத்துக் கொண்டு ?

ஒளிவிலகல் புத்தகம் 

சிராப்பள்ளி நாவலின் ஆசையை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். தரவுகள் சேகரிப்பது ஒருபுறம் இருக்கட்டும் நாம் எழுதப் போவது மானுடத்தை பற்றி அதில் தரவுகள் புள்ளியை எப்போது வேண்டுமென்றாலும் செருகிக் கொள்ளலாம், எழுதுவதை இப்போதே தொடங்கிவிடுங்கள் என்றார். 

அறம் தொகுதியை குறித்த அவரது மாற்றுக் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். 

  1. பல கதைகள் Take off ஆக வெகுநேரம் பிடிக்கிறதென்றும் Land ஆகி வெகு தூரம் செல்கிறதென்றும் சொன்னார்.
  2. அமைப்பு ரீதியாக அனைத்து கதைகளும் ஒரு template ஐ பற்றியிருக்கிறதென்றார்.
  3. முதல் கதையான அறம் கதையில் MV வெங்கட்ராம் என்ற மனிதனை கற்பனை செய்து கொள்ள வைத்ததும் தவறென்றார்.
நீங்க இப்போ வந்துரக்கர்தன்னால அதை on பண்ணல இல்லனா வந்தோனே போட்ருப்பேன் என்றார். 62 வயதில் இவ்வளவு துறுதுறுப்பான புலன் விழிப்பு நிலை கொண்ட மனிதனை எங்கேனும் நான் கண்டதில்லை.

மறுநாள் காலை walking செல்லும்போது ஒன்றாக செல்லலாம் என்று சொல்லியிருந்தார், காலை ஐந்தரை மணிக்கு whatsapp ல் இரவு சரியாக உறங்கவில்லை என்றும் அதனால் வரமுடியவில்லை என்றும் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். பின் காலை பத்தரை மணியளவில் தொலைபேசியில் அழைத்து வரமுடியவில்லை என்று வருத்தம் தெரிவித்ததோடு மாலை சந்திக்கலாம் என்றும் சொன்னார். பின்னர் சில சந்திப்புகளும் நிறைவேறவில்லை. இனியதொரு சந்திப்பாக இலக்கியம் பேச ஒரு அற்புதப் பொழுதாக அமைந்தது.

சுட்டிகள் 

  1. யுவன் தமிழ் விக்கி
  2. யுவன் புத்தகங்கள்

Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

தில்லை பெருங்கோயில் வரலாறு - நூல் குறிப்பு

          தில்லை பெருங்கோயில் வரலாறு - வெள்ளைவாரனர் எழுதிய தில்லை ஆடல்வல்லான் கோயில் குறித்த ஆய்வு நூல். 1987ல் நடைபெற்ற தில்லை கோயிலின் குடமுழுக்கை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல். சிற்றம்பலம், பொற்கூரை             சென்ற ஜனவரியில் ஆலயக்கலை நண்பர்களுடன் சென்ற தில்லை பயணத்தின்போது ஆசிரியர் ஜெயக்குமார் தில்லை பெருங்கோயிலை குறித்து அறிவதற்கு பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று தில்லை பெருங்கோயில் வரலாறு. இந்நூலில் தில்லையின் தொன்மம், பண்ணிசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, இசை, நாட்டியம் என்று பல கோணங்களில் தில்லையில் வரலாற்றை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார் வெள்ளைவாரனர் அவர்கள்.           தில்லை கோயில் உலகபுருடனின் இதயக்கமலமாக கருதப்படுவது. சைவத்தில் கோயில் என்ற சிறப்பு பெயர் தில்லையை குறிப்பது. திருமுறைகள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது, சிவபெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவது, சைவ சித்தாந்தத்தின் படி ஈசன் ஐந்தொழில் நிகழ்த்துவது, ஆடல்கலைகள் செழித்து வளர்ந்தது என்று பல கோணங்களிலும் தில்லை மிகுந்த முக்கியத்துவம்...