46வது சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது, 400க்கும் மேற்பட்ட அரங்குகள், தினந்தோறும் புத்தக வெளியீடுகள், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், நாள்தோறும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் கலை நிகழ்ச்சிகள் என ஒட்டுமொத்த தமிழகத்தின் மாபெரும் அறிவுத் திருவிழா. அதை குறித்த சில கருத்துக்கள்.
கொண்டாட்டம்:
இருபது ஆண்டுகளுக்கு முன் சென்னையை தவிர வேறு எந்த மாவட்டத்திலும் அரிதாகவே புத்தக திருவிழா ஒருங்கிணைக்கப் படும். சென்ற ஆண்டு கொரோனா ஊரடங்கால் விழா தாமதமாக தொடங்கியது. இவ்வாண்டு வழக்கம் போல் ஜனவரி மாதம் தொடங்கியிருக்கிறது. இன்னொரு சிறப்பாக 16-18 ஆகிய தேதிகளில் முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. புத்தக அரங்குகளுக்குள் நுழைவதென்பது, தேசத்தின் மூளைக்குள் நடை செல்வது போன்ற அனுபவம். தற்கால சிந்தனை, வாசிப்பு, புதிய நண்பர்களின் சந்திப்பு, நல்ல அப்பளம், சுவையான பில்டர் காப்பி, சென்னையை சுற்றிப்பார்பது போன்ற எண்ணற்ற நன்மைகள் இதில் பங்கேற்பதால் கிடைக்கும்.
ஐயங்கள்:
இதுவரை ஒரு புத்தகம் கூட வாசித்ததில்லை, பொன்னியின் செல்வன் மட்டும் தான் வாசிக்கப் போகிறேன் என்று கிளம்பும் சிலரை சமூக வலைத்தளம் எள்ளி நகையாடும் அவலங்கள் ஆங்காங்கு நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அறிவுச் சூழலுக்கு யாரும் வாயிற் காப்பாளனாக இருக்கவேண்டியதில்லை. பொன்னியின் செல்வனுக்கும் இங்கு இடமுண்டு. பொ.செ வாங்க வரும் வாசகர் அதே அரங்கில் (பொ.செ நாட்டுடைமை ஆக்கப்பட்ட புத்தகம் ஆதலால் எவரும் பதிப்பித்து வெளியிடலாம், அநேக அரங்குகளில் கிடைக்கும்) ருஷ்ய இலக்கியத்தையும், டிக்கன்ஸையும், காந்தியையும் கண்டடையட்டுமே ?
கற்றலின் இன்பம் ஒன்று தான் இவ்வாழ்வின் இன்பங்கள் அனைத்தையும் விட மகோன்னதமானது.
முயற்சி:
புத்தக வாசிப்பனுபவத்தை இளம் வயதில் பழக்குவது எளிது. ஏழாம் வகுப்பில் நூலகத்திலிருந்து இரவலாக பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு என்னும் 50 பக்க புத்தகம் தான் என்னுள் வாசிப்பு அனுபவத்தை விதைத்தது. குழந்தைளுக்கும் இதை கற்றுத்தர வேண்டும்,நம் குழந்தைகளுக்கு இப்போதே டால்ஸ்டாயின் அன்னா கரனினாவை கொடுத்து குறிப்பெழுத சொல்லவேண்டும் என்பது என் கருத்தல்ல. Harry potter ல் தொடங்கட்டும், ஆனால் வாசிப்பு முக்கியம். தற்கால அமெரிக்க ஐரோப்பிய குழந்தைகளுக்கு இருக்கும் வாசிப்பில் ஐம்பதில் ஒரு பங்கு கூட நம் குழந்தைகளுக்கு இருப்பதில்லை. அவர்களின் வாசிப்பென்பது அடுத்த நூறாண்டுகளுக்கு உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு. Original thinking வெறும் வாசிப்பின் மூலமே திகழ்வது.
மின்னூல் பொதுமல்லவா ?
அறிவுத்திருட்டு
புத்தக பரிந்துரை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை சார்ந்தது. நான் பரிந்துரைக்க விரும்பும் சில புத்தகங்கள்
- வேள்பாரி - சு வெங்கடேசன்(மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்), விகடன் பிரசுரம்.
- அறம் - ஜெயமோகன், வம்சி புக்ஸ்.
- குமரித்துறைவி - ஜெயமோகன், விஷ்ணுபுரம் பதிப்பகம்.
- சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, வம்சி புக்ஸ், தமிழில் K V ஷைலஜா
- மறைக்கப் பட்ட இந்தியா - S, ராமகிருஷ்ணன், தேசாந்திரி பதிப்பகம்
- நாளைய காந்தி - சுனீல் கிருஷ்ணன்.
- ஒரு சிறு இசை - வண்ணதாசன், சந்தியா பதிப்பகம்
- சுஜாதா சிறுகதைகள்
- அன்டன் செகோவ் சிறுகதைகள்
- ஜீவன் லீலா, சாகித்ய அகாடெமி
- பழுப்பு நிற பக்கங்கள் - சாரு நிவேதிதா
- How asia works - Joe Studwell
- Pax Indica - Shashi tharoor
- பெண் ஏன் அடிமையானாள் - இ வெ ரா பெரியார்
- மாபெரும் தமிழ் கனவு - பேரறிஞர் அண்ணா
Comments
Post a Comment