சென்ற ஞாயிற்றுக்கிழமை நூலகத்திலிருந்து புல்லின் தழல் என்ற குறுநாவலை எடுத்துவந்தேன், 13 நிமிடங்களுக்கு முன் படித்து முடித்தேன். வெண்முரசு நாவல் வரிசையின் 26 நாவல்கள் அல்லாது, அதன் உட்கதைகளை தொகுத்து சில குறுநாவல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. செம்மணிக்கவசம் என்ற குறுநாவல் கர்ணனின் கதையில் ஒரு சிறு பகுதியை மட்டும் கொண்டுள்ள ஒன்று. அதே போல் புல்லின் தழல், துரோணரின் கதையை மட்டும் கொண்டது.
இந்த குறுநாவல்களின் சிறப்பென்பது ஒவ்வொரு நாவலும் தன்னளவில் ஒரு முழு கதையம்சம் கொண்டது, அதை மட்டுமே தனியாக வசிக்கவும் வழிசெய்வது. பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் குறுகுலக் கல்வியின் இறுதிநாளில் கதை தொடங்குகிறது. துரோணர் குருகாணிக்கையாக துருபதனை தேர்க்காலில் கட்டி இழுத்துவரும்படி கோருகிறார். ஏன் என்ற காரணத்தோடு துரோணரின் கதைக்கு செல்கிறது (yes, non linear narration).
பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் மாணவனாக இருந்த காலத்தில் , பதின் பருவத்தை கடந்து வந்து மாணவனாக துருபதன் ஆசிரமத்தில் இணைவது. பரத்வாஜர் பயிற்சி அளிக்க மறுத்துவிட துரோணரே குருவாக இருந்து அவருக்கு விற்பயிற்சி அளித்தது, பயிற்சி முடித்து தன நாட்டின் ஒரு பாதியை துரோணருக்கு அளிக்க ஒப்புக்கொண்டு பிரிகிறார் துருபதன். பின் தனியனாக குருகுலம் தொடங்குவது, அஸ்வத்தாமனின் பிறப்பு, மகனுக்காக ஒரு பசு யாசகம் கேட்டு அவர் துருபதன் மாளிகையை அடைவது, மறுத்ததுமல்லாமல் இழித்துரைத்து அனுப்பியது, தழலை துரோணருக்குள் விதைக்கிறது என நாவல் விரிகிறது.
அத்தழலை அணைத்துக்கொள்ள தன் மாணாக்கரிடம் இத்தகைய குருத்தட்சனையை வேண்டுகிறார். அதை சிரமேற்கொண்ட பாண்டவ, கௌரவ படைகள் போர் செய்து துருபதை வீழ்த்துவதாக முடிவுறுகிறது.
நாவலில் சில சிலிர்ப்பூட்டும் தருணங்கள் பல வருகின்றன. குறிப்பாக
- அஸ்வத்தாமனின் பிறவி ஏட்டை எழுதும் கணியர் அவன் அழிவற்றவனாக இருக்கப்போகிறான் என்று கணித்துச் சொல்லும் இடம் மயிர்கூச்செறிவது. (அபிமன்யுவின் மகன் உத்தரையின் வயிற்றில் கருவுற்றிருக்கையில் கருவையும் அழிக்கவல்ல ப்ரம்ஹாஸ்த்திரத்தை ஏவிவிட கிருஷ்ணர் அஸ்வத்தாமனை தண்டிக்கும்பொருட்டு போர் காயங்களுடன் எந்நாளும் மரிக்காத நிலையில் இருப்பாயென சாபம் அளிப்பர்)
- துருபதனுடன் போரிடும்போது துரியோதணன் அணியிலிருக்கும் கர்ணனின் போர்திறனை காணும் தர்மர் தன உள்ளுணர்வால் இவன் ஒருநாள் நம்மை எதிரித்து வில்லேந்துவான் என்கிறார்.
Comments
Post a Comment