இடக்கை, S ரா. நூலின் வாசிப்பனுபவம். உலகம் முழுக்க நீதிக்காக காத்திருக்கும் அபலை மக்களின் கதையை தூமகேது வழியாக கடத்தியிருக்கிறார் S.ரா. இடக்கை, ஒரு magical realistic நாவல். மண்ணாலான பெண், அவளை தினந்தோறும் கரைத்துக் குடித்துக் கொண்டிருக்கும் கணவன், கிணற்றில் வாழும் மனிதன், மன்னனின் சபையில் முறையிட்டும் நீதி கிடைக்காததால் விண்ணுலகம் சென்று கடவுளிடம் முறையிடும் புழு, குரங்குடன் சதுரங்கம் ஆடும் பிஷாடன் என்று பறக்கும் கம்பள கற்பனைகள் நூல் முழுக்க நிரம்பியிருக்கிறது.
கண்ணாடி பிரமிட்டை போன்று இடக்கை நாவலுக்கு பல கோணங்கள் உள்ளன.
1. பாதுஷாவின் பாரம்
பதவிக்காக நடைபெறும் கொலைகள் வரலாறு முழுக்க நிகழ்ந்துள்ளது. (நிகழ்காலத்து கொலைகள் உங்கள் சிந்தைக்கு வந்தால் நானோ வரலாறோ பொறுப்பல்ல !) தன் அந்திம காலத்தில் மாமன்னன் ஒளரங்கஷீப்பும் இதே கவலையில் ஆழ்ந்திருக்கிறார். தந்தையை கொன்றுவிட்டு அரியணை ஏறிய தனக்கும் அதே முடிவு ஏற்பட்டுவிடுமோ என்ற கேள்வி பாதுஷாவை துளைக்கிறது.
"மாபெரும் இந்துஸ்தானத்தை ஆட்சி செய்யும் பாதுஷாவாக இருந்தாலும் உறக்கத்தின் முன் மண்டியிடத்தானே வேண்டியிருக்கிறது."
சுஃபி ஞானியின்கணிப்பின் பேரில் தனக்கு இயற்கை மரணம் தான் என்று தெளிந்தவுடன் மாபெரும் பாரத்தை இறக்கி வைத்ததாக உணர்கிறார். இயற்கை முறையில் அவர் மரணமும் அரங்கேறுகிறது.
"ஒருவனை அல்லா மிக மோசமாக தண்டிக்க விரும்பினால் அவனை தேசத்தின் பாதுஷாவாக அமர்த்தி வேடிக்கை பார்ப்பார்"
இந்த இடத்தில் என் அனுபவ இடைச்செருகல் பொருத்தமாக இருக்குமென்று எண்ணுகிறேன். 2011ம் ஆண்டு தேர்தலுக்காக சுற்றுப் பயணித்தின் போது செல்வி ஜெயலலிதா அவர்கள் (அவர் போட்டியிட்ட)திருவரங்கம் தொகுதிக்கு பரப்புரைக்கு வந்திருந்தார், விமான நிலையம் தொடங்கி அனைத்து தெருக்களும் முடித்து மீண்டும் விமான நிலையம் சென்றடையும் வரைக்கான பாதை முழுவதும் துரிதமாக செப்பனிடப்பட்டு வேகத்தடைகள் அனைத்தும் நீக்கப் பட்டன, அப்போது ஒரு காவலர் சிறுவனான என்னிடம் சொன்னது "ஒரு வேகத்தடைக்கு ஆறு வினாடி நேரம் வேகத்தை குறைத்து வாகனம் நின்றால் குறிவைத்து துப்பாக்கி குண்டு பாயும் ஆபத்து உள்ளது" என்று. இத்தனை கான்வாய்கள், துப்பாக்கி ஏந்திய கரங்கள் இருந்தும் அரசனின்/அரசியின் உயிர் என்பது ஜ்வாலையின் மீது நின்று தவம் புரிவைதை போன்றது. 39 வயது முதல் அரியணையை அலங்கரிக்கும் ஒளரங்கசீப் தன் 89வது வயதில் இயற்கை எய்துகிறார் அதன் பின் நடக்கும் அவலங்களே நாவலின் மையக் கரு.
2. நீதிக்கான காத்திருப்பு
இன்றும் நம் தேசத்தின் நீதிக் கதவுகள் திறப்பதற்காக கோடிக்கணக்கான கண்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றன. எங்கோ யாரோ ஒருவர் தப்பிப்பதற்காக வளைந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறது நீதிச் சரடு. (மீண்டும் உங்கள் நினைவிற்கு வரும் சமகால நிகழ்வுகளுக்கு நான் பொறுப்பல்ல). நாவலில் ஒரு வரி வருகிறது.
"அரசிற்கு எது நன்மை பயக்கிறதோ அதுவே நீதி."
ஆட்டுத் தோல் பதப்படுத்தும் தூமகேதுவை மன்னனின் ஆட்கள் கைது செய்து காலாவில்(திறந்தவெளி சிறை) அடைத்து விடுகின்றனர். ஒரு குற்றமும் செய்யாத தான் என் இந்த இருளில் சிக்கிக் கொண்டோம், என்றேனும் ஒரு விடிவெள்ளி தனக்கு ஒளியை கட்டிவிடாதா என்று ஏராளமான கைதிகள் காலாவில் அடைந்து உசாவியிருக்கின்றனர். அங்கிருக்கும் கைதிகள், அவர்கள் கைது செய்யப்பட்ட கதைகள், அவர்கள் அனுபவங்கள், சுக துக்கங்கள், இன்னும் இன்னும் என்று பல உள் மடிப்புகளை, காலாவின் பக்கங்கள் கொண்டிருக்கின்றன.
3. மூடத் தலையை அலங்கரிக்கும் மகுடம்
Dictator என்ற படத்தில் வரும் முட்டாள் கொடுங்கோல் அரசனிற்கு எதிர் தட்டில் வைக்க தகுந்த ஒரு அரசன் பிஷாடன். புதிய பாதுஷாவின் பட்டாபிஷேகத்திற்கு தனக்கு வந்த அழைப்பை ஏற்று மொத்த நாட்டையும் டெல்லிக்கு அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறான் பிஷாடன். வரும் வெள்ளிக்கிழமைக்குள் அத்தனை ஆண்களும் டெல்லி சென்றிருக்கவேண்டும் என்று கட்டளை பறக்கிறது. ஊரிலுள்ள அத்தனை ஆண்களும் எவ்வித சலுகையும் இன்றி டெல்லிக்கு பயணத்தை துவங்குகின்றனர். பணமதிப்பிழப்பு போன்ற எண்ணற்ற அறிவிப்புகள் என் சிந்தனை சுவரை தொட்டுச் சென்றன. டெல்லிக்கு போகும் வழியில் பிஷாடன் மரித்து விடவே ஊர், ஊர் திரும்புகிறது !
Comments
Post a Comment