வெகுநாட்களுக்கு பின் ஒரு பதிவு. இனி தொடர்ச்சியாக கட்டுரைகள் பதிவிடப்படும்.
எனது இலக்கிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய விஷ்ணுபுரம் என்னும் நாவலின் பெயரிலான வாசகர் வட்ட நண்பர்கள் இனைந்து (முழுமையறிவு) Unified wisdom என்ற அமைப்பை தொடங்கியிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக தத்துவம், பண்பாடு, ஆலய கலை, இலக்கியம், மெய்யியல், தியானம், இசை, யோகம், விபாசனா, கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் புத்த வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன
ஈரோடு அருகே வெள்ளிமலை மலை தங்குமிடத்தில் வெறும் கேளிக்கைகளும் மூன்று நாட்களுக்கு ஒன்றென வந்து செல்லும் Trending குமிழிக்களின் சத்தம் ஏதும் கேட்காத ஒரு தூரத்தில் ஒரு இடத்தை தெரிவு செய்து உருவாக்கியிருக்கிறார்கள் . அனைத்து வகுப்புகளுக்கும் ஆசான் ஆணிவேர். அந்தந்த துறையில் ஆழ்ந்த ஞானம் கொண்ட நிபுணர்களை கொண்டே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. உதாரணம் ஆலயக்கலை - ஜெயக்குமார் அவர்கள். தமிழ்நாட்டில் ஆலயம் மற்றும் சிற்பம் சார்ந்து முழு நேரமாக இயங்கி வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருள் ஒருவர்.
நான் சென்ற ஒரு ஆண்டாக வகுப்புகளில் பங்கு கொண்டிருக்கிறேன். இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் நிகழும் அறுபாடாத ஞான சுடரை 21ம் நூற்றாண்டின் சிந்தனையாளனுக்கு கடத்தும் ஒரு முயற்சி.
குருகுலம் என்ற உடன் காலை 4 மணிக்கு எழுந்து ஆசிரியருக்கு பணிவிடைகள் செய்வது அல்ல. ஜெ வேதாந்த மரபில் வந்தவர். ஆகவே எந்த ஒரு சடங்கு சம்பிரதாய ஆச்சாரவாதங்களுக்கு முற்றிலும் எதிரானவர். வகுப்புகள் முற்றிலும் கல்வியை மட்டுமே முன்னிறுத்தி அதன் பொருட்டு இத்தனை தூரம் பயணம் செய்து, சிந்தை, உழைப்பு, நேரம் ஆகியவற்றை கொடுக்க வருபவர்களுக்கு மட்டுமாக அத்தகையோரின் வழி நடத்தப்படுவது.
வகுப்புகள் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் மட்டும். மீண்டும் திங்கள் காலை அன்றாட சக்கரத்தில் சிக்கிக்கொள்ளலாம். நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் யோகா வகுப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கும்.
நான் இதுவரை ஆலயக்கலை, யோகா, சைவ திருமுறைகள், ஜெவின் தத்துவம் முதல் வகுப்பு அபுனைவு வாசிப்பு பயிலரங்கு மற்றும் குரு பூர்ணிமா நிகழ்வுகளில் பங்கெடுத்திருக்கிறேன்.
அத்தனை உணர்வுகளையும் தொகுத்து கடிதங்கள் எழுதியிருக்கிறேன். இந்த தளத்திலும் பின்னர் வெளிவரும். நான் தொடர்ந்து இந்த வகுப்புகளில் பங்கு கொண்டிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம்.
சைவ திருமுறைகள் வகுப்பில் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் சொன்ன ஒன்று. நாயன்மார்கள் ஈசனின் திருவிளையாடல்களுக்கு அகச்சான்றாக இருக்கின்றனர் என்று. அவர்கள் தாங்களே அனுபவித்தவற்றை தொகுத்திருக்கிறார்கள். இந்த வகுப்புகளுக்கு நான் அகச்சான்று உரைக்கிறேன்.
- மனோ
Comments
Post a Comment