இன்று மாலை கொட்டுக்காளி படம் பார்த்தேன். அதனை பற்றிய ரசனைக்குறிப்பு.
வெகு நாட்களுக்குப்பின் ஒரு முழு தமிழ் படம் பார்த்த உணர்வு. சமீபத்தில் பார்த்த ஏறத்தாழ அனைத்து தமிழ் படங்களிலும் துப்பாக்கி குண்டுகள் முழங்கியவண்ணம் இருந்தன. சண்டைக்காட்சிகளின் மொத்த தொகுப்பாகவும் இடைச்செருகலாக சிறு வசனங்களாகவும் இருந்தன.
கொட்டுக்காளி உண்மையில் பாலமலைக்கு ஷேர் ஆட்டோவில் நானும் நெருக்கி பிடித்துக்கொண்டு சென்று வந்த உணர்வை கொடுத்தது. ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் பல அடுக்குகள் கொண்ட உண்மைக்கு மிக நெருக்கமான சினிமா, கொட்டுக்காளி.
பின்னணி இசை இல்லை என்பது படத்தின் இன்னொரு தனித்துவம். அந்த இடைவெளியை இயற்கையின் சப்தத்தையும், நிசப்தத்தையும் கொண்டு நிரப்பியிருக்கிறார்கள்.
ஒரு பேட்டியில் படத்தொகுப்பாளர் கதை ஒரே நாளில் நடப்பதால் வெயிலின் தொனி(tone) ஒன்றாக இருப்பதற்காக மெனக்கெட்டோம் என்று சொல்லியிருந்தார். ஒவ்வொரு காட்சியின் ஒளிக்கலவையிலும் ஒவ்வொரு புல்லின் அசைவில் வரும் ஒலியிலும் மெனக்கெடல் தெரிந்தது.
முதல் காட்சியில் மீனாவிற்கு வைக்கப்படும் திருநீறு நெற்றிப்பொட்டிற்கு நேராக அல்லாமல் வலப்பக்கம் சற்று தள்ளியிருந்தது. நான் பார்த்து வளர்ந்த வேறு எந்த ஒரு படமாக இருந்தாலும் அடுத்த காட்சியில் அழித்து வகிடிற்கு நேராக பூசியிருப்பர். இடைவேளையில் பாண்டியிடம் அடிவாங்கும் கட்சி வரையில் திருநீறு அதே இடத்தில் தான் இருந்தது.
Label பிரிக்கப்பட்ட sprite புட்டியில் தண்ணீர் நிரப்பி செல்வத்திலிருந்து ஒவ்வொரு முறையும் கயிற்றை இழுத்து இயக்கும் ஷேர் ஆட்டோவரையில், கடனாக வாங்கி செல்லும் பால் காரரின் சாவியில்லாத ஈருருளியில் இருந்து நெகிழிக்குடங்கள் நிரப்பிய ஈருருளி வரை அத்தனையும் அதன் போக்கிலேயே நின்றிருந்தன. மதுரையிலிருந்து பாலமலைக்கு பேயோட்ட சென்ற ஒரு குடும்பத்தை எந்த வகையிலும் தொல்லை செய்யாமல் பின் தொடர்ந்து படம்பிடித்த படி அமைந்திருக்கிறது.
கொட்டுக்காளி என்பதற்கு பிடிவாதம் பிடித்தவள் என்று பொருள். இயக்குனரும் மொத்த படக்குழுவும் கொட்டுக்காளிகள் தான். "இது என் கதை அதை கேட்க நீ வந்திருக்க, நான் சொல்ற வேகத்துல தான் சொல்லுவேன் வேணுனா கேளு இல்லனா எந்திரிச்சு போ" என்று அறைகூவுகின்றனர். படத்தில் மூச்சு விடுவதற்கு அத்தனை இடம் வைத்திருக்கிறார். மௌனமான தருணங்கள் மட்டும் பத்திற்கு மேல்.
முதல் காட்சியில் திருநீற்றை கையில் எடுத்துக்கொண்டு மீனாவின் அம்மா நீண்ட தூரம் நடந்து வீட்டை அடைவார். "சீக்கிரம் போ எவ்வளவு நேரம் நடப்ப" என்று சலம்பிய நண்பரின் மனநிலை படம் முடியும் போது எப்படியிருக்கும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
பல்வேறு படிமங்களை படத்தில் கையாண்டிருந்தார் வினோத்ராஜ். குறிப்பாக குழல். அறிமுக காட்சியிலேயே மீனாவின் அம்மா மீனாவிற்கு எண்ணெய் வைத்து நீவி இறுக்கி ஜடை பின்னிக்கொண்டிருப்பார். கண்மாயை கடந்து செல்லும் காட்சியில் மீனா இறுக்கிய குழலை கட்டவிழ்த்து விட்டபடி நடந்து செல்வதாக கனவு கொண்டிருப்பார்.
பாண்டியின் நிலை என்பது ஆற்றாமை பொறுக்க முடியாமல் வெளிப்படும் வன்முறைதான். அந்த வன்முறையை நூறு முறை தனக்குள் நிகழ்த்திப்பார்த்து பின் மற்றவர் மீதும் நிகழ்த்துகிறார்.
அழுத்தமான சமூக கருத்துக்கொண்ட படமா என்றால் ஆம். ஆணாதிக்கத்திற்கு எதிரான படமா என்றால் ஆம். பெண்ணியம் பேசும் படமா என்றால் ஆம். தொழில்நுட்ப நேர்த்தியில் ஒரு மயில் கல்லா என்றால் நிச்சயமாக நிச்சயமாக ஆம். ஒரு படம் எந்த அளவிற்கு Rooted ஆக உள்ளதோ அந்த அளவிற்கு உலகலாவியதாகவும் ஆகக்கடவது. kaantara வெற்றிக்கு நான் முக்கிய காரணமாக கருதுவது அது பஞ்சுருளியை பஞ்சுருளியாகவே இருக்கவிட்டது. Pan Indian என்ற மலத்தை அதன் மீது கொட்டாமல் இருப்பது. கொட்டுக்காளி எந்த மண்ணின் கதை. இன்னும் எத்தனை எத்தனையோ மீனாக்களின் கதை. Berlin திரைப்பட திருவிழாவில் உரக்க சொன்னது மீனாக்களின் கதையை.
ரசிகர்களாக நாம் கொட்டுக்காளி பார்க்கும் அளவிற்கு நம் ரசனை பரிணமித்து (வளர்ந்து) விட்டதா என்றால் இல்லை. ஒரு அசைவுக்கு இரண்டு நொடிகள் கூடுதலாக ஆனால் கூட அரங்கில் அத்தனை சலசலப்பு அடுத்து அடுத்து என்று இவ்வளவு வேகமாக ஓடக்கூடிய திரைக்கதைக்கு நம் (Reels Shorts போன்றவற்றால் கவனக்காலம் - Attention Span குறைந்திருக்கிறது என்று உளவியல் காரணம் சொல்வோருண்டு) மூளை பழகியிருக்கிறது அதிவேகமாக ஓடிய குதிரை, கோழை வழிந்து சாவதற்குள் கடிவாளத்தை இருக்கவேண்டும். கொட்டுக்காளிகள் கடிவாளத்தை இறுக்குபவை.
அதிர்ந்து அடங்கிய யாழின் மௌனம் அதன் அதிர்வளவுக்கே முக்கியம். மூர்க்கமான வன்முறை படங்களுக்கு மத்தியில் வரும் கொட்டுக்காளி போன்ற சொல்லாமல் சொல்லி செல்லும் Subtle படங்கள் மிக முக்கியம். அந்த Subtlenessஐ தொடங்கி வைத்திருக்கும் படக்குழுவுக்கு வாழ்த்துக்களும் அன்பும்.
Super writings bro
ReplyDelete