ஜார் ஒழிக, கவிஞர் சாம்ராஜின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு. நீண்ட விடுமுறை தினங்களான இந்த நாட்களில் ஆண்டு தொடக்கத்தில் படிப்பதற்காக எடுத்து வைத்து முடிக்காமல் விட்ட புத்தகங்களை படித்துக்கொண்டிருக்கிறேன். மாலை தொடங்கி ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம் ஜார் ஒழிக.
முதன் முதலாக இரண்டாம் நிலை ஆலயக்கலை வகுப்பில் பங்கேற்று கவிஞரை சந்தித்து வீடு திரும்பிய ரயில் பயணத்தில் ஜார் ஒழிக என்ற ஒரு கதையை மட்டும் படித்துவிட்டு அப்படியே வைத்திருந்தேன்.
சுஜாதாவை தன் ஆதர்சங்களில் ஒருவராக சாம்ராஜ் குறிப்பிட்டுள்ளார், எந்த ஒரு கதையும் சுவாரஸ்ய தன்மை குன்றாமல் வரிகளுக்கிடையில் பகடியை விட்டு செல்கின்றன. வாசகனாகிய எனக்கு இட்டு நிரப்ப சில இடைவெளிகளை தந்திருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் வருபவர்கள் நாம் அன்றாடம் காணும் மனிதர்கள் - குள்ளன் பினுவையோ, பரமேஸ்வரியையோ காலை பேருந்து நிறுத்தத்தில் நாம் பார்த்திருக்கக்கூடும்.
மரியபுஷ்பம் இல்லம் கதை மற்ற அனைத்து கதைகளை விடவும் மனதிற்கு நெருக்கமான ஒன்று, என் நிலத்தில் நடக்கும் கதை, மாம்பழ சாலை பேருந்து நிறுத்தமும் செந்தண்ணீர்ப்புரமும் நாம் புழங்கும் இடங்கள். ஸ்ரீரங்கத்து தேவதைகளுக்கு பிறகு எங்கள் ஒரு ஓர் இலக்கிய பிரதியில் இடம் பெற்றுள்ளது. சில நாட்கள் திருவரங்கத்திற்கருகில் தங்கியிருந்த நினைவுகளுக்கு இக்கதை அளித்திருக்கிறார்.
செவ்வாக்கியம் கதையில் கம்பை எடுத்துக்கொண்டு போகும் செவ்வாக்கியத்தை கண்ட பின் வந்தமர்ந்த மௌனத்தை கலைக்க நெடு நேரம் பிடித்தது.
போட் ஜெட்டியிலிருந்து, மதுரை வீதிகளிலிருந்து, அழகர் மலை அடிவாரத்த்திலிருந்து நில காட்சிகளை சிறப்பாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.
"அபார்ட்மெண்ட் வாசல்களில் செக்யுரிட்டிகளின் செல்போன்களில் ஒரிய பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன". "அம்மா கவனமாய் அரிசியை பானையில் கொட்டிவைத்துவிட்டு, மண்ணென்னையை அடுப்பின்கீழ் வைத்த பின்னே ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள் " போன்ற நுண் சித்தரிப்புகள் கட்சிதமாக பொருந்தியுள்ளன.
தொழில் புரட்சி கதையில் வரும் ஜீப், ஜார் ஒழிக கதையில் வரும் அரசமரத்தடி கணபதி அனைவருக்கும் கதையில் ஒரு பங்குண்டு.
செவ்வாக்கியம் ஆகட்டும், சன்னதம் கதையில் வரும் லட்சுமியக்காவாகட்டும் ஒரு வகையில் விசித்திரமானவர்களாக அல்லது தனித்துவமானவர்களாக அமைந்துள்ளனர், ஒரு மர்மம் கதை முழுதும் நீடிக்கிறது. அதிலும் லட்சுமியாக்க இன்னும் கூடுதலாக ஒரு Alpha female. "இவர்கள் வசவுகளும் சாடை பேச்சுக்களும் அவள் கெண்டைக்கால் முடியை கூட தொட முடிந்ததில்லை" என்ற வரி அவளை நிறுவுகிறது.
என்றுதானே சொன்னார்கள் தொகுப்பின் சில கவிதைகளை வாசித்திருக்கிறேன், அடுத்து பட்டாளத்து வீடு தொடங்கியிருக்கிறேன். சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்கிய கவிஞருக்கு அன்பும் நன்றியும்.
Comments
Post a Comment