அனாகத நாதம் செந்தில் ஜெகந்நாதனின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு.
அனாகத நாதம் கதையில் சாமிநாதன் பேருந்தில் எறியபோதே இவர எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று சிந்தித்து கொண்டே வாசித்து முடித்தேன். 2023 மார்ச் தமிழினியில் கதை வந்தபோதே படித்திருக்கிறேன். இப்போது தான் கதை எனக்கு திறந்திருக்கிறது. கதை படித்து முடித்த பின்னும் மழை கொட்டிக்கொண்டிருப்பது போன்று நாதம் கேட்டுகொண்டே இருக்கிறது. எத்தனையோ நாட்கள் வாசிக்க முயன்று முயன்று திரும்பி வந்தவன் அந்த ஒருநாளுக்குள் சாமிநாதன் உள்ளும் புறமுமாக வெகுதூரம் பயணித்து வந்திருக்கிறான்.
அலகிலா விளையாட்டு கதையில் பதின் பருவத்தின் மனநிலையை லகுவாக கை கூடி வந்திருக்கிறது. எம் ஜி ஆர் பிறந்த நாட்களின்போது தெருவை அடைத்தபடி மேடையிட்டு நடக்கும் கட்சி நாடகங்கள் பொதுக்கூட்டங்கள் "நான் ஆணையிட்டால்" போன்ற பாட்டுகளுக்கு குறைந்த விலை எம் ஜி ஆர்களின் நடனம் போன்ற நினைவுகளை மீட்டியது. புடவியின் அலகிலா விளையாட்டு ஆச்சியை கொண்டு கபடியை கலைத்து போட்டது.
போகன் வில்லா பல அடுக்குகள் கொண்ட கதை. சீண்டலும் பணிதலும் இரு கூர்முனைகளாக மோதியும் விலகியும் செல்வது போன்ற அனுபவம்.
சாயை கதையில் ஒரு வகையில் தன்னை கண்டடைதலாகவும் மற்றோரு வகையில் பிராயச்சித்தமாகவும் காக்கையுடனான உறவு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. காக்கை மூத்தோர், முன்னோர் என்ற படிமம் Cliche இல்லாமல் எடுத்தாளப்பட்டிருக்கிறது. இறுதியில் தயாரிப்பாளருக்காக வரவழைக்கப்பட்ட காக்கை அவரது தந்தை என்றால் அவரது தந்தை, தயாரிப்பாளரின் தந்தை என்றால் தயாரிப்பாளரின் தந்தையும் கூட.
தம்பொருள் கதையில் சொல்லாமல் வாசிப்பின் ஊகத்திற்கு விட்ட பகுதிகள் ஏராளம், கார்த்திக்கும் இந்திராணிக்கும், கந்தவேலுவின் மனைவிக்குமென்று எல்லார்க்கும் நியாயம் செய்யப்பட்டுள்ளது. கார்த்தி என்றாவது ஒருநாள் தன் வேர் என்னவென்று அறியக்கூடும்.
நஞ்சமுது கதை மிக திறந்திருக்கிறது. தேவராஜின் மீட்சி அவனுக்கான சிறிய உலகத்தில் அவ்வப்போது பிரியானாலும் டீயினாலும் அமைகிறது.
கடைமுகம் கதையில் வரும் இயலாமை சாவித்ரியின் மீது கோபமாக குவிந்துகொண்டே வருகிறது. உண்மையான கரிசனமும் கூட இறக்கமாக அவன் கண்களுக்கு தெரிகிறது அவன் பார்வை உடையும் தருணம் அற்புதமாக வந்துள்ளது.
முழுத்தொகுப்பையும் இல்லாவிடினும் கூட அனாகதநாதம் கதையாவது படிக்கவேண்டுமென்று பரிந்துரைப்பேன்.
செந்தில் ஜெகந்நாதன் தமிழ் விக்கி
மனோ
15 மார்ச் 2025
Comments
Post a Comment