திருத்தொண்டத்தொகை திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியது. 7ம் திருமுறை, பாடல் எண் 7.039. 60 தனியடியார்களும் 9 தொகையடியார்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளனர். "தில்லை வாழ் அந்தணர்" என்று இறைவனே அடியெடுத்துக்கொடுத்த பெருமையுடையது. இதனை வழி நூலாக கொண்டு நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்ட திருவந்தாதியும், பின்னர் சேக்கிழாரின் பெரியபுராணமும் இயற்றப்பட்டது.
கடந்த பெருஞ்சிவனிரவன்று கோவை ஈஷா மையத்தின் கலை நிகழ்ச்சியில் மழலைகள் பாடிய திருத்தொண்டத்தொகை ஒரு பரவச உணர்வை கொடுத்தது. குழந்தைகளின் கள்ளமற்ற தன்மை, எப்போதும் கடவுளுக்கு பக்கத்தில் இருப்பது. ஓட்டைப்பற்களும் கேமரா அருகில் வரும்போது வெட்கத்தில் குறுஞ்சிரிப்பும் குழைவுமாக பாடிய குழந்தைகளை காண்பதே நாகலிங்க பூவை கையில் வைத்திருப்பது போன்றிருந்தது .
பிஞ்சுக்கரங்களை தட்டிக்கொண்டு திரு திருவென்று முழியுடன் வரும் மழலை சொல் குழலையும் யாழையும் விஞ்சி நிற்கும். பச்சை பட்டு பாவாடை உடுத்தி திருநாமத்துடன் அமர்ந்து பாடும் பாப்பாவை சிறப்பாக குறிப்பிடவேண்டும். இதே போன்றதொரு ஞானகுழந்தை தான் 7ம் நூற்றாண்டில் தோணியப்பர் கோயில் குளத்தருகில் நின்று "தோடுடைய செவியன்" பாடியது.
Comments
Post a Comment