"Thus the hoysala period marks a phase of considerable activity in the field of temple-building and their pre-occupation with the pandyas did not prevent them from promoting this activity".
திருவரங்கத்தின் நான்காம் பிரகாரத்தில் (அகலங்கன் திருவீதியின்) தென்கிழக்கு மூலையில் உள்ளது வேணுகோபாலன் சந்நிதி. (24 மணி நேர அன்னதான கூடத்திற்கு அருகில் என்பது தற்போதைய landmark). முகமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்பை கொண்டுள்ளது. தற்போதிருக்கும் விமானம் பிற்காலத்திய சுதை கட்டுமானம். கருவறையில் குழந்தை கண்ணனுடன் சில பிற்காலத்திய ஐம்பொன் திருமேனிகளையும் எழச்செய்துள்ளனர். அர்த்தமண்டப விதானத்தில் சில ஓவியங்கள் உள்ளன. பேளூர் ஹளபீடு பகுதிகளில் இருப்பது போன்ற soapstone கற்கள் அல்ல இங்குள்ளவை. இப்பகுதியின் கருங்கற்களை கொண்டு ஹொய்சாள பாணியில் அமைக்கப்பட்ட கற்றளி.
சூர்ய அஸ்தமனம் இயற்கையின் ஆதி அதிசயம். வெண்முரசில் தற்போது காண்டீபம் படித்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை ஒரு 5000 பக்கங்கள் கடந்திருப்பேன். தத்துவர்த்தமான, நாடகீய தருணங்கள் அநேகம் ஒருந்தாலும் நினைவில் தேன் போன்று இன்றும் இருக்கும் ஒரு அத்தியாயம் பீமன், இடும்பி, கடோத்கஜன் மூவரும் ஒன்றாக மரத்தடியில் பிரயாகை - 63 அஸ்தமனம் பார்ப்பது. ஒரு கண் இமைப்பிற்குள் ஆயிரம் ஓவியம் வரைந்து அழிக்கப்பட்டிருக்கும். சிற்பங்களை பார்ப்பதற்கு அந்த அந்தி பொழுதை போன்ற இனிய தருணம் இல்லை. ஒவ்வொரு கற்துகளும் முகிழ்க்கும் தருணம். Hot Hotter Hottest என்ற திருச்சியின் மூன்று பருவங்களில் இப்போது Hottest. மாலை அஸ்தமனங்கள் நீண்டிருக்கும்.
கிழக்கு நோக்கி அமைந்த சந்நிதியின் பின் புற கோஷ்டத்தில் உள்ள வேணுகோபாலன் செந்தூர மாம்பழ ஜொலித்தார். சிறு கோஷ்டத்தையும் கூட முழு கற்றளி அளவிற்கே உபபீடம், ஆதிஷ்டானம், பாதவர்கம், பிரஸ்தாரம், கண்டம், கலசம், சிகரம் என்று அனைத்து உறுப்புகளுடன் செதுக்கியுள்ளனர். ஜாலகங்களும் அலங்காரமாக அமைந்துள்ளன.
அதிஷ்டானத்தில் உள்ள சிறிய கோஷ்டங்களில் மத்ஸ்ய, வராக, நரசிம்ம, தசாவதார சிற்பங்கள் அமைந்துள்ளன. யசோதையுடன் கண்ணன், ஹயக்ரீவர், தும்புரு சிற்பங்கள் அமைந்துள்ளன. உபபீடத்து புடைப்பு சிற்பங்களாக போர் வீரர்கள், யானைகள், கின்னரர்கள் உள்ளன.
பிதுக்கங்களில் கோபியர் மற்றும் நடன மங்கையர் சிற்பங்கள் உள்ளன. கையில் கிளியுடன் தமிழம் போன்ற சிகை அலங்காரத்துடன் அமைந்துள்ள நடன மங்கை சிற்பமும், சந்நிதிக்கு பின்புறம் உள்ள கையில் கண்ணாடி வைத்திருக்கும் சிற்பமும் அற்புதமானவை. சிற்பங்களில் உள்ள ஆடை அணிகலன்களும் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன. சந்நிதியை ஒட்டியபடி இடதுபுறம் பிற்காலத்தில் புதிய மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.
உரலில் கண்ணனை கட்டிவைத்தல், கோபியருடன் கண்ணன், காளிங்க நர்த்தனம், துவார பாலகர்கள், அனுமன், கருடன் என்று 50க்கும் மேற்பட்ட குறுஞ்சிற்பங்கள் உள்ளன.
1311ம் ஆண்டு அலாவுதீன் கில்ஜியின் தளபதி, மாலிக் கஃபூர் தென்னக படையெடுப்பு நிகழ்ந்தது. இந்த சந்நிதி படையெடுப்பிற்கு முன்பு எடுக்கப்பட்டதா அல்லது பின்பு எடுக்கப்பட்டதா என்று குறிப்பிட இயலவில்லை. 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிற்பியுடன் நடந்த உரையாடலை முரளி காப்பியுடன் முடித்து வீடடைந்தேன்.
வெளி இணைப்புகள்
1. ஹோய்சாலர் வரலாறு ஒரு சிறு குறிப்பு - jeyamohan.in
2. Later CholaTemples SRB - Archive.org
Comments
Post a Comment