காவேரில தண்ணி வந்துருச்சு என்பது ஜூன் மாதத்தின் இனிய நினைவுகளில் ஒன்று.
(பள்ளி திறந்து மீண்டும் நண்பர்களை சந்திப்பது என்பது மற்றொன்று) கோடைவிடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் மாதம். காவிரி நான் அறிந்த நாளிலிருந்து வற்றா நதியாக இருந்ததில்லை. ஜூன் முதல் வாரத்தில் மேட்டூர் திறந்துவிட்டால் 2-3 நாட்களில் முக்கொம்பு வந்து ஓரிரு நாட்களில் கடைமடை அடையும். விநாயகர் சதுர்த்தி முடிந்து 7ம் நாள் Plaster Of Paris விநாயகர் சிலைகளை கரைப்பது வரை நீர் வரத்து இருக்கும்.
வாய்க்கால் நீரில் சூடமேற்றி வழிபடுவதும் முதல் துளி நீரை அல்லி தலையில் விட்டுக்கொள்வதுமான சில காணொளிகள் Instagramல் உலவி வருகின்றன. காவிரி டெல்டா பகுதியாகிய எங்களுக்கு பொன்னி என்பது விளக்க முடியா மூதன்னை. என் சந்ததி அத்தனைக்கும் அன்னமென்றானவள்.
ரத்தமாக, நினமாக, விழிநீராக உடலெங்கும் வ்யாபித்திருப்பவள். அரங்கனுக்கு காவிரி கொள்ளிடமென்று இரு தோளிலும் மாலையானவள். இரு கரை தொட்டு அகண்ட காவிரியாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஒற்றை உயிரை காண்பதென்பது பரவசமூட்டக்கூடிய ஒரு அனுபவம். கரிகாலன் கண்ட நதியை இங்கு வாழ்ந்த தோல் மனிதன் கண்ட நதியை நானும் காண்கிறேன்.
Comments
Post a Comment