தில்லை பெருங்கோயில் வரலாறு - வெள்ளைவாரனர் எழுதிய தில்லை ஆடல்வல்லான் கோயில் குறித்த ஆய்வு நூல். 1987ல் நடைபெற்ற தில்லை கோயிலின் குடமுழுக்கை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல். சிற்றம்பலம், பொற்கூரை சென்ற ஜனவரியில் ஆலயக்கலை நண்பர்களுடன் சென்ற தில்லை பயணத்தின்போது ஆசிரியர் ஜெயக்குமார் தில்லை பெருங்கோயிலை குறித்து அறிவதற்கு பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று தில்லை பெருங்கோயில் வரலாறு. இந்நூலில் தில்லையின் தொன்மம், பண்ணிசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, இசை, நாட்டியம் என்று பல கோணங்களில் தில்லையில் வரலாற்றை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார் வெள்ளைவாரனர் அவர்கள். தில்லை கோயில் உலகபுருடனின் இதயக்கமலமாக கருதப்படுவது. சைவத்தில் கோயில் என்ற சிறப்பு பெயர் தில்லையை குறிப்பது. திருமுறைகள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது, சிவபெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவது, சைவ சித்தாந்தத்தின் படி ஈசன் ஐந்தொழில் நிகழ்த்துவது, ஆடல்கலைகள் செழித்து வளர்ந்தது என்று பல கோணங்களிலும் தில்லை மிகுந்த முக்கியத்துவம்...