பூனாட்சி அல்லது வெள்ளாட்டின் கதை. பெருமாள் முருகன் அவர்களின் நாவல் வாசிப்பனுபவம். 3 நாட்களுக்கு முன் மாலை ஏழு மணிக்கு மூட்டை முடிசைகளை கட்டி கிளம்ப எத்தனித்த நூலகரை காத்திருக்க வைத்துவிட்டு எடுத்து வந்து படிக்க தொடங்கி இன்று மாலை படித்து முடித்தேன். பூனாட்சி என்கிற வெள்ளாட்டுக்குட்டி தான் நாவலின் கதை நாயகி. பகாசுரன் கிழவனிடம் ஒரு ஈத்திற்கு ஏழு குட்டிகள் போடும் அதிசய வெள்ளாட்டுக்குட்டியை விட்டுச் செல்கிறான். கிழவனும் அவன் துணைவியும் எவ்வாறு அக்குட்டியை வளர்த்தெடுக்கின்றனர் என்ற கதையை நாவல் விவரிக்கிறது.
நாவலின் தொடக்கத்திலன்றி எந்த பத்தியிலும் பூனாட்சியை ஆடு என்ற ஒரு வார்த்தையால் கூட குறிக்கவில்லை. தீப்பெட்டி குச்சிகள் போன்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் எனக்கு ஒரு செல்லப்பிராணி வளர்ப்பதென்பதே அடையமுடியா அனுபவம். அவ்வகையில் நாவல் இதுவரை நான் கண்டிராத ஒரு புத்தம் புதிய அனுபவத்தை கொடுத்தது. கட்டாந்தரை எங்கும் அலைந்து திரிந்து பூனாட்சி மேயும் காட்சி வர்ணனைகள் புதுப் புனல் போன்று மகிழ்வை தருகிறது.
பூனாட்சி, கட்டிக்கொடுத்துவிட்ட தன் மகளை தவிர வேறு எந்த உறவுகளும் இல்லாத கிழவன் கிழவிக்கு மேசாசுரன் கொடுத்த ஒரு மகளாகவே வளர்ந்து வருகிறாள். அவளை பருவம் எய்தும் வரை வளர்த்து சினையாகி மூன்று முறை குட்டிகளை ஈன்று வாழ்வை முடிக்கும் வரை ஒரு பெண் தன் வாழ்வில் அடையும் அத்தனை அனுபவங்களையும் பூனாட்சியும் அடைகிறாள்.
சாமானியனுக்கு எளிதில் பிடிபடாத பல நுணுக்கங்களை பூனாட்சியின் கண்கள் வழியாக கட்டியிருப்பதால் நாவல் புதியதொரு வாசிப்பை வழங்குகிறது. வாசிப்பின் தொடக்க காலத்தில் இருப்பவர்களுக்கு நிச்சயம் பரிந்துரைக்கும் நாவல் பூனாட்சி அல்லது வெள்ளாட்டின் கதை.
சூப்பர் தம்பி
ReplyDeleteசூப்பர் தம்பி
ReplyDelete