தில்லை கிழக்கு கோபுரம் ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன் ஜனவரி 17-19, 2025 ஆகிய தேதிகளில் சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு சென்றுவந்த பயணக்கட்டுரை. தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல் திருச்சிற்றம்பலம். சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன். மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...