எண்ணியிராத தற்செயல் நிகழ்வு பயணத்தின் பிரதான நினைவாக எஞ்சுவது பல பயணங்களில் நிகழ்ந்துள்ளது. புகழ்பெற்ற blogger வேலுதரன் அவர்களை துடையூர் கோயிலில் சந்தித்தது அப்படி ஒரு நிகழ்வு. வேலுதரனுடன் இன்றிரவு பெங்களூர் புறப்படுவதால் அரை நாளை வீணாக்க வேண்டாம் என்று கலைக்கோவனின் எறும்பியூர் துடையூர் சோழர் தளிகள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு துடையூர் கோயில் சென்று வந்தேன். அகிலாண்டேஸ்வரி சந்நிதியில் இருந்து வீட்டிற்கு 200 மீட்டருக்குள் தான் இருக்குமென்றாலும் ஆடிவெள்ளி அன்று இரவு தரிசனம் முடித்து வர 11 மணி ஆகிவிட்டது. காலை 6.30 மணிக்கு எழுந்து கிளம்பி பேருந்து பிடித்து கோயில் அடைய 8.30 க்கு மேல் ஆகிவிட்டது. டோல்கேட்டில் நொச்சியம் வழி செல்லும் ஒவ்வொரு பேருந்திலும் துடையூர் போகுமா என்று கேட்க துறையூர் தானே போகும் போகும் என்று சொன்ன பல நடத்துனர்களிடம் போராடவேண்டி இருந்தது. துடையூர் விஷமங்களேஸ்வரர் கோயில் சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சோழர் கால சிவன் கோயில். சுந்தரசோழர், ராஜராஜன், ராஜேந்திரன் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. அப்பரின் அடைவு திருத்தண்டகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வைப்பு தலம். கொள்ளிடத்...