மூத்தோளின் கதை
முற்கால சோழர் கோயில்கள் பலவற்றிலும் பிரம்மாண்டமான சிற்பமாக பல நுணுக்கங்களுடன் செதுக்கப்பட்ட ஜேஷ்டாதேவி சிலை இன்று ஏன் கைவிடப்பட்டு கிடக்கிறது என்பதற்கான பதிலை கொடுத்த நூல் வரலாற்றில் ஜேஸ்டாதேவி மூதேவி வழிபாடு.
சில நூல்கள் வாங்கிய அன்றே படிக்க தொடங்குவதும் பல நூல்கள் சில ஆண்டுகள் கழித்து கண்ணுக்கு படுவதும் எப்போதும் நிகழ்வது. சென்ற ஆண்டு தமிழ் விக்கி தூரன் விருது அறிவிக்கப்பட்ட உடன் முதலில் வேதாசலம் அவர்களிடம் வாங்கியது இந்த புத்தகம் தான். விழா நாள் அன்று வாழ்த்துக்கள் வெ.வேதாசலம் என்று கையெழுத்திட்டு கொடுத்த புத்தகம் அலமாரியில் நடுவரிசையில் கம்மென்று அமர்ந்திருந்தது. இப்போது கிராதம் படித்துகொண்டிருப்பதால் இதோடு இணைத்து படிக்கலாம் என்று படித்து முடித்தேன்.
உலகின் பழங்குடிகள் பலவற்றிலும் உள்ள பொதுப்பண்பான தாய்தெய்வ வழிபாட்டில் அன்னையான மூத்தோள் அமங்கலத்தின் தெய்வமாக மாறிய வரலாற்றை கூறும் நூல் தமிழ் விக்கி விருது பெற்ற தமிழகத்தின் முக்கியமான ஆய்வாளரும் தொல்லியல் அறிஞருமான வேதாசலம், வே.திருநங்கை அவர்களின் வரலாற்றில் மூதேவி வழிபாடு. வேதாசலம் அவரது பாண்டிய நாட்டு ஆய்வுகளுக்காக அறியப்பட்டாலும் கோயில், சமய வரலாற்றிலும் அவரது ஆய்வு பணிகள் முக்கியமானவை. திருவெள்ளறை கோயில் குறித்த அவரது முதல் ஆய்வு 1977ல் அப்போதைய தொல்லியல் துறை இயக்குனர் முன்னெடுப்பில் நூலாக வெளி வந்தது. நானும் நண்பர் தினேஷும் அந்த புத்தகத்தை கொண்டு சென்ற ஆண்டு தீபாவளிக்கு முதல் நாள் புண்டரீகாக்ஷப் பெருமாள் கோயிலை பார்த்து வந்தோம்.
![]() |
| 2025ம் ஆண்டு தூரன் விழாவில் ஆய்வாளர் வேதாசலத்துடன் |
வரலாற்றின் இன்றைய போக்கை நுண் வரலாறு என்று குறிப்பிடலாம். ஒரு நுண்ணிய அலகை தேர்ந்தெடுத்து அதை விரித்து விரித்து அதனுடைய பரிணாமத்தை ஆராய்வது. இந்தியாவின் முக்கியமான கலை வரலாற்றாசிரியர் கலம்பூர் சிவராமமூர்த்தி எழுதிய Nataraja in art thought and literature அந்த வகையில் ஒரு முன்னாடி நூல். இந்திய வரலாற்றை நடராஜர் என்ற வடிவத்தை கொண்டு மீள் ஆய்வு செய்திருப்பார். நாகசாமியின் Bairavaa cult in karnataka குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய குடமுழா, தண்டாபாணி தேசிகர் எழுதிய ஆடல்வல்லான், மங்கை வீர ராகவன் எழுதிய தமிழகத்தில் லகுலீச பாசுபதம் போன்ற நூல்களை உதாரணாமாக சொல்ல முடியும். அந்த வகையில் ஜேஷ்டா தேவி இந்திய முழுமைக்கும் எப்படி உருமாறி வந்துள்ளது என்று வேதாசலம் அவர்கள் இந்த நூலில் ஆராய்ந்திருக்கிறார். ஜெ இந்த முறையை Google map ல் ஒவ்வொரு புள்ளியாக எடுத்து பெரிது படுத்திக்கொண்டே செல்வது என்ற உவமையை சொல்லியிருப்பார்.
நூலின் முன்னுரையில் “தமிழ்நாட்டில் செல்வத்தை தரும் என கருதி மக்களால் வழிபடப்பட்ட மூதேவி என்ற பெயரில் விளங்கிய ஒரு பெண்தெய்வம் வடநாட்டு சமய உறவால் ஜேஷ்டாதேவி சேட்டை அலெட்சுமி என்று அழைக்கப்பட்டு தன் குணத்தை இழந்து கெட்ட தெய்வமாக மாறிய வரலாற்றை ஆய்வு செய்வதே இந்நூலின் நோக்கம்” என்று குறிப்பிடுகிறார். இந்த ஆய்வு முடிவிற்கு வந்து சேர்ந்த தரவுகளாக அடுத்தடுத்த அத்தியாயங்கள் அமைந்துள்ளன.
சிற்ப ஆய்வில் பின் பற்றப்படும் பொதுவான முறைமை முதலில் வேதத்தில் தொடங்கி உபநிடதம், புராணங்கள் இதிகாசங்கள் பக்தி இலக்கியங்கள் போன்ற இலக்கிய சான்றுகள், பிறகு கல்வெட்டு சான்றுகள், தொடர்ந்து சிற்ப சான்றுகளை அடுக்கி அதன் மீது கருத்துக்களுக்கு முடிவுகளுக்கு செல்வது. இந்த நூலிலும் இதே அமைப்பு பின் பற்றப்பட்டுள்ளது.
“வட இந்தியாவில் ஜேஷ்டாதேவி” அத்யாயத்தில் அதர்வண வேதத்தில் பாபிலெட்சுமி என்ற தொன்மையான ஜேஷ்டாதேவி குறித்த குறிப்பில் தொடங்கி பாரத்தில் வரும் அலெட்சுமி அதனை தொடர்ந்து புராணங்களான லிங்கபுராணத்திலும் பத்ம புராணத்திலும் வரும் பேதங்கள் குறித்து விளக்குகிறார். குப்தர் காலத்தில் இருந்தே அலெட்சுமி என்ற வடிவம் மற்றும் வழிபாடு தொடங்கி இருந்தாலும் தனிப்பட்ட கோயில்கள் எதுவும் இது வரை கண்டடையப்படவில்லை. லெட்சுமியை வரவேற்க செய்யப்படும் வழிபாட்டை போலவே அலெட்சுமியை வரவிடாமல் தடுப்பதற்கும் பல வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
வணிகர்கள் தங்கள் வாசலில் எலுமிச்சை மிளகாய் கட்டிய கயிற்றை தொங்க விடுகின்றனர். அலெட்சுமி வீட்டிற்குள் நுழைய வரும்போது புளிப்பும் உறைப்பும் நிறைந்த இந்த உணவை உண்டு திரும்பி சென்றுவிடுவாள் இன்னும் நம்பிக்கை இருந்திருக்கிறது. இதை போல பல நம்பிக்கைகள் அல்லது எதிர் நம்பிக்கைகள் வங்கத்திலிருந்து வட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்துள்ளது. தமிழகத்தில் காண்பது போன்று ஜேஷ்டாதேவிக்கு நிரந்தரமான உருவ வழிபாடு வட இந்தியாவில் காணப்படுவதில்லை. மணலில் செய்து வழிபாடு முடிந்த வுடன் கரைத்துவிடும் வழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் ஜேஷ்டையின் ஆய்வு சங்க இலக்கியத்தில் இருந்து தொடங்குகிறது. கானமர்செல்வி, கொற்றவை என்ற பெண் தெய்வங்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டாலும் திருமுருகாற்றுப்படை பழையோள் என்று கொற்றவையையே குறிக்கிறது. சங்க காலத்தை தொடர்ந்து பல்லவர் காலம் வரையிலுமான ஜேஷ்டை குறித்த இலக்கிய சான்றுகள் கிடைக்கவில்லை. பழங்குடி மக்களின் தெய்வமாக இருந்த ஜேஷ்டை செவ்வியல் படைப்புகளில் இடம்பெறாது போயிருக்கலாம் என்று முடிவை முன்வைக்கிறார். திருக்குறளில் காணப்படும் பயன்பாட்டிலேயே ஜேஷ்டை சூது, சோம்பல் என்ற எதிர்மறை அம்சம் கொண்ட தெய்வமாக நிலைபெற்றுவிட்டதை அறியலாம்.
பக்தி இலக்கியங்கள் ஜேஷ்டையை எப்படி அணுகுகின்றன என்ற பகுதி சுவாரசியமானது. தொண்டரடிப்பொடியாழ்வார் திருவரங்கனை வணங்கி எல்லா செல்வங்களையும் பெறுவதை விட்டுவிட்டு சேட்டை போன்ற பெண் தெய்வங்களை வழிபடுகிறார்கள் என்று ஒரு பாடலில் குறிக்கிறார். வைணவத்தில் ஜேஷ்டையின் இடம் என்பது ஏரத்தாழ இல்லையென்றே கொள்ளலாம்.
சம்பந்தர் தமது ஆலவாய் பதிகத்தில் தீய செயல்கள் செய்யும் அமணர்களை சேட்டை செய்பவர்கள் என்று குறிக்கிறார். மணிவாசகர் திருவாசகம் மற்றும் திருக்கோவையாரிலும் ஜேஷ்டை குறித்த குறிப்புகள் விலக்க வேண்டிய குணங்கள் கொண்டவள் என்ற பொருளில் உள்ளன.
இதை ஒட்டியே பல்லவர் பாண்டியர் முற்கால சோழர் கால சிவன் கோயில்களில் அஷ்ட பரிவார தெய்வங்களுள்(விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், சண்டிகேஸ்வரர், சப்த மாதர், துர்கை, ஜேஷ்டை) ஒன்றாக ஜேஷ்டைக்கும் சன்னிதி எடுப்பிக்கப் பட்டுள்ளது. ஜேஷ்டை சந்நிதியின் அன்றாட பூஜை முறைகளும் அவற்றிற்கான நிவந்தங்களும் குறித்த விரிவான கல்வெட்டு செய்திகள் கிடைக்கின்றன. சோழர் காலத்தில் ஜேஷ்டை வழிபாடு மிகுந்த முக்கியத்துவதுடன் விளங்கி இருக்க வேண்டும். வைணவ ஆலயங்களில் ஜேஷ்டைக்கு சன்னிதி அமைக்கும் வழக்கம் இல்லை. திவாகர நிகண்டு முதல் அபிதான மணி மாலை வரையான நிகண்டுகள் குறிக்கும் ஜேஷ்டையின் பெயர்களும் ஏரத்தாழ இதே முடிவையே காட்டுகின்றன.
கலிங்கத்து பரணி குருதியில் நீராடும் ரத்த ஜேஷ்டாவை குறிக்கிறது. ரத்த ஜேஷ்டா வட இந்தியாவில் பரவலாக வழிபடப்படும் போர் தெய்வமாவாள். நந்திக்கலம்பகம், கம்பராமாயணத்திலும் அமங்கலமான பொருளிலேயே ஜேஷ்டை குறித்த குறிப்புகள் வருகின்றன. மெல்ல மெல்ல மக்கள் ஜேஷ்டை வழிபாட்டை கைவிட தொடங்கியதாக அறிய முடிகிறது.
நாட்டார் மரபில் ஜேஷ்டையின் இடம் பரவலாக காணப்படுகிறது. நாட்டுப்புற மரபில் ஜேஷ்டையின் வழிபாடு குறித்த பல திருவிழாக்களின் குறிப்புகள் மற்றும் அன்றாடம் புழக்கத்தில் இருக்கும் பழமொழிகள் இந்த அத்யாயத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்த அத்யாயம் ஜேஷ்டாதேவி வடிவம் குறித்து ஆகம குறிப்புகளும் அதன் மாறுபாடுகளும் தொகுக்கப்பட்டுள்ளன. சிற்பவியல் நோக்கில் தாண்டவமாடும் சிவனிற்கு அடுத்ததாக அதிக வடிவ மாறுபாடுகளை கொண்ட தெய்வ வடிவமாக ஜேஷ்டையை சொல்லலாம். செல்வத்தின் தெய்வமாக முதலில் செல்வ பேழையுடன் காணப்படும் வடிவம் தொன்மையானது. அதை தொடர்ந்து கை அமைப்புகளில், மாந்தன் மாந்தி வடிவங்களில் காக்கை கொடியில் என்று பல வடிவ வேறுபாடுகளை காணலாம்.
பொதுவான வடிவமாக வாசிகபந்தம் எனும் உச்சி கொண்டையிட்ட அமைப்பும் நெற்றியில் கண்ணிமாலை என்ற உருண்டை மாலையும், பருத்த வயிறும் கொண்டு இருகால்களை தொங்கவிட்ட நிலையிலும் அல்லது சுகாசனத்திலும் அமர்ந்திருப்பாள். கையில் தாமரை அல்லது அல்லி மலரை ஏந்திய நிலையில் சில இடங்களில் செல்வ பேழையுடனும் காணப்படுவாள். காக்கை கொடி அல்லது தீ பந்தம் காணப்படும். வலப்புறம் தடி ஏந்திய மகன் மாந்தனும் மலர் ஏந்திய மகள் மாந்தியும் காணப்படுவர். நிகண்டுகள் கூறும் ஜேஷ்டை குறித்த வெவ்வேறு பெயர்களும் அவற்றின் பொதுபண்புகளும் ஒப்பிட்டு காட்டப்பட்டுள்ளது.
சிற்பக்கலை வரலாற்றில் மூதேவி என்ற தலைப்பில் பாண்டியநாட்டிலும் சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் உள்ள ஜேஷ்டை சிற்பங்களின் வடிவ மாறுபாடுகளை விளக்குகிறார். தமிழகத்தில் முற்கால பாண்டியர் காலத்தில் தான் முதலில் ஜேஷ்டை சிற்பங்கள் கிடைக்க தொடங்குகின்றன.
பாண்டியர்களின் குல முதல்வனான சந்திரனின் மனைவியான ரோஹிணியை பாண்டியர் குலத்திற்கு தாயாக கருதியதால் திருப்பரங்குன்றம் குடைவரையில் அமைந்துள்ள ஜேஷ்டையும் நேர் எதிராக அமைந்துள்ள ரோகிணியும் இணைத்து ஜேஷ்ட ரோஹிணியாக அமைத்து காக்கை கொடியும் திருவலகும் காட்டப்படாமல் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.
சோழநாட்டில் பெருவாரியான ஜேஷ்டை சிற்பங்கள் கிடைத்துள்ளன. சோழ பேரரசு முடிவுறும் காலகட்டத்திலேயே ஜேஷ்டையின் சிற்பங்களை ஆலயங்களில் இருந்து வெளியேற்றுதல் தொடங்கிவிட்டதென அறிய முடிகிறது.
தொண்டைநாட்டின் சிற்பங்கள் தாம் ஜேஷ்டையை செல்வத்தின் தெய்வமாக செல்வபேழையுடன் உள்ள நிலையில் காணப்படுகின்றன. சிற்பவியில் நூல்கள் கூறும் இலக்கணங்களில் அல்லாத வடிவங்களிலும் நாட்டுபுற மரபில் அமைந்த ஜேஷ்டை சிற்பங்களும் இந்த பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.
\
இந்த நூலின் கடைசி அத்தியாயம் தன்னளவிலேயே ஒரு பெரும் சாதனை என்று சொல்லத்தக்கது. இந்தியவெங்கும் உள்ள ஜேஷ்டாதேவி சிற்பங்களை புகைப்படத்துடன் வடிவபேதங்கள் அடிப்படையிலும் கால வரிசைப்படியும் தொகுத்திருக்கிறார். முதலில் புத்தகத்தை வாங்கிய உடனே திருவானைக்கோவில் கோயிலில் உள்ள ஜேஷ்டா தேவி சிற்பத்தை தான் தேடினேன் 10ம் நூற்றாண்டு சிற்பம் என்று ஆவணப்படுத்தியிருந்தார். இந்த புத்தகத்தால் உந்தப்பட்ட நண்பர் ஒருவர் இந்திய முழுக்க உள்ள மகிஷாசுரமர்த்தினி, கொற்றவை உருவங்களை தொகுக்கும் பணியில் இறங்கியுள்ளார்.
நூலின் மொத்த சாராம்சத்தையும் இப்படி சுருக்கிக்கொள்ளலாம், தொல்குடி வழிபாடாக இருந்த ஜேஷ்டை தாய் தெய்வமாகவும், போர் தெய்வமாகவும் செல்வத்தை அளிப்பவளாகவும் வணங்கப்பட்டு வந்தாள். பல்லவர் காலத்திலும் தொடர்ந்த சோழர் காலத்திலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் இருந்த ஜேஷ்டை வைதீக சமயங்களின் எழுச்சியில் துர்க்கை கொற்றவையோடு இணைந்தது போலவும் கார்த்திகேயன் அல்லது ஸ்கந்தன் முருகனுடன் இணைக்கப்பட்டது போலவும் ஜேஷ்டை வடநாட்டு மூதேவியுன் இணைக்கப்பட்டு மெல்ல தன் இடத்தை இழந்து செல்வத்திற்கு தெய்வமான லெட்சுமியால் நிரப்பப்பட்டாள். பின்னர் இன்னும் அமங்கலமான தெய்வம் என்ற நிலையில் கொள்ளப்பட்டதால் கோயிலில் இருந்து ஜேஷ்டை சிற்பதையே வெளியேற்றும் நிலைக்கு சென்றது. விஜயநகர நாயக்க காலகட்டத்தில் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் ஜேஷ்டை வழிபாடு இருந்தது.
இருள், நஞ்சு போன்ற பண்புகளை கொண்டவளாதலால் இயல்பாக ஜேஷ்டை வழிபாடு சிவனுடன் சைவத்துடன் இணைக்கப்பட்டிருக்கலாம். வெண்முரசின் கிராதத்தில் திசை சூழ் செலவு 3ம் அத்யாயத்தில் பாற்கடல் கடையும் போது முதலில் எழுந்துவந்த மூத்தோளை கண்டு தேவரும் அசுரரும் அஞ்சியிருக்க பைரவனின் தங்கையாக சிவன் மடியில் அமர்த்திக்கொண்டார் என்று பகுதி வரும்.
ஜெ வின் மூத்தோள் சிறுகதையும், வெண்முரசின் கிராதத்தில் கிருஷ்ணனை மூதேவி பீடிக்கும் பகுதியும், சேட்டை என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையும் இந்த புத்தகத்தோடு இணைத்து வாசிக்கதக்கவை.
நஞ்செல்லாம் அமுதாகும் என்பதை போல அமுதென இருந்த ஒரு தெய்வ உருவம் நஞ்சென கொள்ளப்பட்டு மெல்ல மெல்ல கைவிடப்பட்ட சித்திரத்தை அளிக்கும் முக்கியமான நூல் வரலாற்றில் ஜேஷ்டாதேவி மூதேவி வழிபாடு !
வேதாசலம் விக்கி - https://tamil.wiki/wiki/%E0%AE%B5%E0%AF%86._%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
சேட்டை ஜெ கட்டுரை - https://www.jeyamohan.in/735/
மூத்தோள் சிறுகதை - https://www.jeyamohan.in/132484/
மனோ,
11 ஜூலை 2026
திருவானைக்கா


Comments
Post a Comment